Posted On Jan 02,2011,By Muthukumar |
நம்
கண்களே நம்மை ஏமாற்றும்படியான பல அதிசயங்களையும், ஆச்சரியங்களையும் நமக்கு
பரிசளித்துக்கொண்டிருக்கிறது நவீன தொழில்நுட்பம். வெறும்
பொழுதுபோக்குக்காக உருவாக்கப்படும் நவீன வசதிகளுள் ஒன்று, செல்போன்களில்
வந்திருக்கும் தொடுதிரை தொழில்நுட்பம் (டச் ஸ்கிரீன் செல்போன்). ஆனால் அதே
தொழில்நுட்பம் மனித வாழ்க்கையின் அடிநாதமான ஆரோக்கியம், மருத்துவம்
ஆகியவற்றுடன் கைகோர்க்கும்போது பிரபலமாகிவிடும்.
`கம்ப்யூட்டர்
சிப்'பில் ஒரு சோதனைக்கூடம் (lab on a chip model) என்பது நோய் அறியும்
மருத்துவ தொழில்நுட்பத்தின் உச்சம் எனலாம். அதாவது, `கம்ப்யூட்டர் சிப்'
போன்ற சிறிய கருவியின் மீது எச்சில், ரத்தம் அல்லது சிறுநீர் போன்றவற்றை
வைத்தால், அதிலிருக்கும் நோய் உயிர்குறிகளை (நோய் இருப்பதைக் குறிக்கும்
மூலக்கூறு) ஈர்த்து வைத்துக்கொள்ளும். அதன்பிறகு அந்த சிப்பை ஒரு
சோதனைக்கூடத்துக்கு அனுப்பி அதன் மூலம் நோய் அறிகுறிகளை அறிந்து கொள்ளலாம்.
இந்த
சிப் சோதனைக்கூட மாதிரியை நாம் அன்றாடம் பயன்படுத்தும் ஸ்மார்ட்
போன்களுக்குள் பொருத்திவிட்டால் என்ன என்று முயற்சித்ததன் விளைவு,
`ஸ்மார்ட் போனின் தொடுதிரை நோய் அறியும் கருவி' ஆனது என்கிறார்கள் கொரிய
ஆய்வாளர்கள்.
நம்
விரல் நுனிகளின் தொடுதலை கொண்டு இயங்கும், ஸ்மார்ட் போன்களின்
இயக்கத்துக்கு அவற்றின் மின்தேக்குதிறன்தான் (capacitance) அடிப்படை.
தொடுதிரைகளின் இந்த பண்பினை விரல் நுனிகளை விட மிக மிக நுண்ணிய
மூலக்கூறுகளான டி.என்.ஏ அல்லது நுண்கிருமிகளை ஆய்வு செய்யும் வண்ணம் மாற்றி
வடிவமைக்க முடியும் என்று நம்புகிறார்கள் இந்த கொரிய விஞ்ஞானிகள்.
ஏனென்றால்,
தற்போது விரல் நுனிகளை உணர பயன்படுத்தப்படும் தொடுதிரைகள், இதைவிட நுண்ணிய
மூலக்கூறுகளை உணரும் அளவுக்கு பல மடங்கு அதிக திறன் வாய்ந்தவை.
மின்தேக்குதிறனில் ஏற்படும் மிகச்சிறிய அளவு மாற்றங்களைக்கூட துல்லியமாக
உணரும் திறன் வாய்ந்த தொடுதிரைகளை, நுண்ணிய கிருமிகள் அல்லது நோய் குறிகளை
இனம் கண்டறிய பயன்படுத்திக்கொள்ளலாம்.
இந்த
முயற்சியின் முதற்கட்டமாக, க்ளாமைடியா என்னும் ஒரு வகை நோய் ஏற்படுத்தும்
பாக்டீரியாவின் மரபுப்பொருளை, வெவ்வேறு அளவுகள் கொண்ட மூன்று திரவங்களாக
தயாரித்தார்கள். ஐபோனின் தொடுதிரை போன்ற ஒரு தொடுதிரையின் மீது இந்த மூன்று
திரவங்களையும் வைத்தபோது, அவற்றின் மின்தேக்குதிறன் வித்தியாசங்களின்
அடிப்படையில் பிரித்தறிந்தது.
இதற்கும்
ஒரு ரத்த மாதிரியிலிருந்து ஒரு நுண் கிருமியை கண்டறிவதற்கும் நிறைய
வேறுபாடுகள் உண்டு. ஆனால், தொடு திரையை ஒரு நோய் அறியும் கருவியாக
மாற்றுவதற்கான முயற்சியின் முதல் முக்கியமான படி இது என்பது
குறிப்பிடத்தக்கது.
இந்த
முயற்சியில் பல தொழில்நுட்ப சிக்கல்களும் உண்டு. உதாரணமாக, தொடுதிரை
கருவிகள் அனைத்தும் வியர்வை அல்லது ஈரப்பதம் ஆகியவற்றால் உண்டாகும் பொய்
மின்தேக்குதிறன்களை தவிர்க்கும் ஒரு மென்பொருளுடன் உருவாக்கப்பட்டுள்ளன.
இந்த சிக்கலை போக்க, ஒரு நோய் அறியும் ஸ்மார்ட்போன் அப்ளிகேஷனை உருவாக்க
வேண்டும். அதை இயக்கும்போது, பொய் மின்தேக்குதிறன்களை தவிர்க்கும்
மென்பொருள் செயலிழந்து போகும் வண்ணம் வடிவமைக்க வேண்டும். இந்த சிக்கல்களை
எல்லாம் சரி செய்தாலும் கூட, ஒருவர் தன் ஸ்மார்ட்போன் தொடுதிரையைக் கொண்டு
மட்டுமே தனக்கு வந்திருக்கும் நோய் பறவைக் காய்ச்சல்தான் அல்லது
இன்னதுதானென்று தானே கண்டறிவதற்கு இன்னும் பல காலம் பிடிக்கும்
என்கிறார்கள் இத்துறை வல்லுனர்கள்.
இந்த
கட்டுரையை வாசிக்கும் உங்களில் சிலருக்கு, `எல்லாம் சரிதான். நம் எச்சில்,
சிறுநீர் அல்லது ரத்தம் இதையெல்லாம் நம்ம ஸ்மார்ட்போன் திரைமேல்
வைத்துவிட்டு, பிறகெப்படி அதை தொலைபேச பயன்படுத்துவது? கற்பனை செய்வதற்கே
சற்று சங்கடமாக இருக்கிறதே' என்று நினைக்கத் தோன்றும்.
இது உண்மைதான், ஆனால் இதற்கும் ஒரு தீர்வு வைத்திருக்கிறார்கள் கொரிய விஞ்ஞானிகள்.
அதாவது,
நோய்க் குறிகளை ஈர்க்கும் ஒரு திரையை நமது ஸ்மார்ட் போன் மீது
ஒட்டிவிட்டு, அதன்மீது நம் எச்சில், சிறுநீர் அல்லது ரத்தம் போன்றவற்றை
வைத்து பரிசோதனையை முடித்துக்கொண்டு, அதன்பிறகு அந்த திரையை தூக்கி
எறிந்துவிட்டால் போதுமே என்கிறார்கள்.
சரிதான், நல்ல யோசனையாகத்தான் இருக்கிறது.
No comments:
Post a Comment