Lord Siva

Lord Siva

Monday, 23 January 2012

வாரிசு’ வருவதை தடுக்கும் உணவு

Posted On Jan 23,2012,By Muthukumar
`உடல் பருமன் என்பது ஒரு அழகியல் சார்ந்த சாதாரண பிரச்சினைதானே. அதனால் பெரிதாக என்ன ஆகிவிட போகிறது, சமாளித்துக்கொள்ளலாம்' என்றே பலரும் நினைத்தனர். ஆனால், `உடல் பருமன் வெறும் அழகியல் சார்ந்த பிரச்சினையல்ல. அதனால் இதய நோய்கள் ஏற்படும்' என்ற கருத்தை முன்வைத்து அதிர்ச்சியூட்டியது அறிவியல்.
`அட, அப்படியா? சரி சரி, இனி நன்றாக உடற்பயிற்சி செய்து உடல் எடையை பராமரித்துக்கொள்வோம்' என்று சுதாரித்த மக்களுக்கு மற்றொரு அதிர்ச்சி காத்திருந்தது! அது, உடல் பருமன் அல்லது தொப்பையால் `டிமென்சியா' என்னும் மூளைக்கோளாறு ஏற்படக்கூடும் என்னும் ஆய்வு முடிவு.
ஆக, இதுவரை உடல் பருமனால் ஒருவரின் இதயமும், மூளையும் பாதிக்கப்பட்டு நோய்கள் உண்டாகும் என்று கூறப்பட்டது. ஆனால் இப்போது, ஒருவர் உடல் பருமனாக இருந்தால் அது அவருடைய ஆரோக்கியத்தை மட்டும் பாதிக்கவில்லை. மாறாக, அவருடைய பல சந்ததிகளின் ஆரோக்கியத்தையும் பாதிக்கக்கூடும் என்கிறது ஒரு
ஆய்வுச்செய்தி.
அதிக கொழுப்புச் சத்து நிறைந்த உணவினை உண்டுவந்த எலிகளின் குட்டிகள் `இன்சுலின் ரெசிஸ்டன்ஸ்' என்னும் சர்க்கரை நோய் தொடர்பான குறைபாட்டுடன் பிறந்தன. இதற்கு காரணம் ஆண் எலிகளின் `விந்தணுக் களே' என்கிறார்கள் ஆஸ்திரேலியாவின் அடிலெய்டு பல்கலைக்கழக ஆய்வாளர்களான மரியா ஆல்சன் டீக் மற்றும் மிஷ்ஷெலி லேன் இருவரும்.
அது சரி, அதிக கொழுப்புச் சத்து நிறைந்த உணவுக் கும், விந்தணுக்களுக்கும் என்ன தொடர்பு?
உணவுப்பழக்கம் மற்றும் புகைப்பழக்கத்தினால் ஏற்படும் பாதிப்புகள் மரபணு செயல்பாடுகள் மற்றும் புரத உற்பத்தியை கட்டுப்படுத்தும் வேதியல் மாற்றங்கள் மூலம் ஒருவருடைய டி.என்.ஏ.வில் பதிந்துபோகிறது என்கிறது மூலக்கூறு அறிவியல். இந்த உயிரியல் நிகழ்வுக்கு `எபிஜெனடிக் மாற்றங்கள்' என்று பெயர்.
ஆனால், விந்தணுவில் இருக்கும் டி.என்.ஏ, விந்தணு மற்றும் கருமுட்டையின் சங்கமத்திற்கும் முன்பும், பின்பும் பல மாற்றங்களுக்கு உட்படுவதால், டி.என்.ஏ.வில் பதிந்துபோகும் பாதிப்புகள் எல்லாம் அழிக்கப்பபட்டு டி.என்.ஏ. மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பிவிடும் என்று இதுவரை நம்பப்பட்டது.
`இல்லை, இந்த கூற்று முற்றிலும் தவறானது. விந்தணுவின் சில பகுதிகளில்
டி.என்.ஏ.வில் பதியும் பாதிப்புகள் மாறாமல் அப்படியே இருக்கின்றன' என்கிறது மரியா மற்றும் மிஷ்ஷெலி ஆகியோரின் ஆய்வு முடிவுகள்.
இதனை உறுதிசெய்ய, ஆரோக்கியமான உணவு மற்றும் அதிக கொழுப்புச்சத்துள்ள உணவு இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்ட எலிகளுக்கு கொடுக்கப்பட்டது. இவ்விரு பிரிவு எலிகளின் விந்தணுக்களில் எபிஜெனடிக் மாற்றங்களை உண்டாக்கும் (புரத உற்பத்தியை நிறுத்தும்) திறனுள்ள மரபுப்பொருளான `மைக்ரோ ஆர்.என்.ஏ.' இருக்கின்றனவா என்பது பரிசோதிக்கப்பட்டது.
பரிசோதனைக்கு பின்னர், அதிக கொழுப்புச் சத்துள்ள உணவு கொடுக்கப்பட்ட எலிகளின் விந்தணுக்களில் 21 மைக்ரோ ஆர்.என்.ஏ.க்கள் வித்தியாசமாக செயல்படுவது கண்டறியப்பட்டது. இந்த 21 மைக்ரோ ஆர்.என்.ஏ.க்கள் சிசு, விந்தணு வளர்ச்சி மற்றும் உணவு செரிமான கோளாறுகள் தொடர்பானவை என்பது குறிப்பிடத்தக்கது.
எலிகளின் விதைப்பையை சுற்றியுள்ள கொழுப்பு படிவமே விந்தணுக்களை பாதிக்கும் எபிஜெனடிக் மாற்றங்களுக்கு காரணமாக இருக்கக்கூடும் என்கிறார் ஆய்வாளர் மரியா ஆல்சன் டீக்.
இதன் மூலம் அதிக கொழுப்புச் சத்துள்ள உணவு ஒருவரின் விந்தணுக்களை பாதிப்பதால் அவருடைய சந்ததிகள் ஆரோக்கிய குறைபாடுகளுடன் பிறக்கிறார்கள் என்னும் அறிவியல் உண்மை நிரூபிக்கப்படுகிறது.
இம்மாதிரியான குறைபாடுகளை தவிர்க்க, இனிவரும் காலங்களில் செயற்கை கருத்தரிக்கும் முறைகளின்போது விந்தணுக்களில் தேவையற்ற எபிஜெனடிக் மாற்றங்கள் ஏதும் இருக்கின்றனவா என்று பரிசோதிக்க முடியும். அப்படி இருக்கும் பட்சத்தில் மருந்து சிகிச்சைகள் மூலம் அவற்றை அகற்றவும் முடியும் என்கிறார் ஆய்வாளர் டீக்!

No comments:

Post a Comment