Lord Siva

Lord Siva

Sunday, 22 January 2012

சித்தர்களின் சித்துவிளையாட்டுகள் ,ஆயகலைகள் அறுபத்தி நான்கு -


Posted On Jan 22,2012,By Muthukumar

சித்தர்கள் என்றால் அறிவு நிறைந்தவர்கள் என்று பொருள். சித்திகள் என்ற மனித அறிவுக்கு எட்டாத பல காரியங்களில் ஈடுபடுபவர்கள். இந்த சித்திகளில் எட்டு பெரும் சித்திகள் உள்ளன. இதை அட்டமா சித்திகள் என கூறுகின்றார்கள். அவைகளை அறிந்து கொண்டு தேர்ச்சி பெற்றவர்கள் சித்தர்கள்.

1. அணிமா – அணுவைக் காட்டிலும் சிறியதாக வடிவெடுத்தல்.

2. மகிமா – மலையை விட பெரிய வடிவெடுத்தல்.

3. கரிமா – மெல்லிய வடிவாக இருத்தலும், கைகளால் தூக்க இயலாத அளவிற்கு கனமாக இருத்தலும், நுகர்ச்சியின் தொடக்குகள் பற்றாமல் இருப்பதுவுமான ஆற்றல்.

4. இலகிமா – காற்றை விட மெல்லிய வடிவெடுதல்.


5. பிராப்தி – நினைத்த பொருளை, நினைத்த நேரத்திலே பெரும் ஆற்றல்.

6. பிராகாமியம் – பல பல வடிவங்களை எடுத்தலுக்கும், அளவுக்கதிகமான வலிமை அல்லது ஆற்றல் உள்ளமைக்கும் இப்படி பெயர்.

7. ஈசாத்துவம் – தேவர்கள் முதல் சிறு உயிர்கள் வரை தன்னை வணங்கி வழிபடும் நிலை.


8. வசித்துவம் – தன்னை கண்டவர் அனைவரையும் தன் வயப்படுத்துவதும், கோள்களையும், மீன்களையும் தன் வசம் செய்வதுமான ஆற்றல். வசியம் என அனைவராலும் அறியப்பட்டுள்ளது.

இதைவிட சிறந்த பல்வேறான சித்திகள் இருக்கின்றன. அதில் ஒன்றுதான் கூடுவிட்டு கூடுபாயும் நிலை. சித்தர்கள் இந்த அட்டமா சித்திகளில் வல்லவர்களாக இருந்திருக்கிறார்கள். அதற்கு ஆதாரங்களும் இருக்கின்றன. அந்த ஆதாரங்கள் சித்தர்களின் தனிப்பட்ட வாழ்கைகளைகளை விவரிக்கும் போது உங்களுக்கு சமர்ப்பிக்கிறேன்.

சித்தர்களின் மதம் –

எல்லா மதங்களிலும் ஞானிகள் இருக்கிறார்கள். இஸ்லாமிய மதத்தில் அவர்களுக்கு சூப்பிக்கள் என்று பெயர், பௌத மதத்தில் அவர்களுக்கு ஜென் ஞானிகள் என்று பெயர். நம் மதத்தில் சித்தர்கள். ஞானிகளுக்கும் சித்தர்களுக்கும் ஒரு வேறுபாடு இருக்கிறது, அது என்னவென்றால் ஞானிகள் அறிவில் சிறந்தவர்களாக இருப்பார்கள், சித்தர்கள் ஞானத்தில் சிறந்தவர்களாகவும், சித்திகளில் வல்லவர்களாகவும் இருப்பார்கள். மற்ற மதங்களில் இறை தூதர்களுக்கு மட்டுமே சித்திகள் தெரிந்திருக்கின்றன.


சித்தர்கள் நம் இந்துமத்த்தினை சார்ந்தவர்கள். அதற்காக தற்போது கோவில்களில் வேதமந்திரங்கள் சொல்லி சிலைகளுக்கு அபிசேகம் செய்யும் பிராமணர்கள் போல எண்ணிவிடாதீர்கள். இவர்கள் முற்றிலும் மாறுபட்டவர்கள் சீவனே சிவம் என உணர்ந்து, அதையே மக்களுக்கு போதித்தவர்கள். இதனால் சித்தர்களை ஏற்காத பல மதவாதிகளும் உண்டு.

இயற்கையான இயல்புகளை உடைத்தெறியக் கூடியவர்களாக மட்டுமல்லது மனதினை மட்டுமே கடவுளாக போற்றுகின்ற சித்தர்களும் உண்டு. ஆன்மீகத்தில் தன்னையே கடவுளென போதிக்கும் வகையிலும் சிலர் வருகின்றார்கள். மனதினை அடக்கி ஆளும் வகையிலே யோகிகளாகவும், பல துறைகளில் சிறந்து விளங்கும் ஞானிகளாகவும் இருந்திருக்கின்றனர். இப்படி பல்வேறுபட்ட கருத்துகளை சித்தர்கள் பாடல்கள் நமக்கு சொல்லுகின்றன. குறிப்பாக நான்கு வழிகள்.

1. சாலோகம் – இறைவனோடு ஒரே இடத்தில் இருக்கும் நிலை.

2. சாமீபம் – இறைவனை நெருங்கியிருக்கும் நிலை.

3. சாரூபம் – இறைவனை உருப்பெற்று விளங்கும் பேறு.

4. சாயுச்சியம் – இறைவனுடன் இரண்டறக் கலத்தல் நிலை.ஜீவாத்மா பரமாத்மாவுடன் ஐக்கியமாகும் நிலை.

அகத்தியர் லிங்க வழிபாட்டினை விரும்பியவராக இருந்துள்ளார். பாம்பாட்டி சித்தர், அகப்பேய் சித்தர் போன்றோர் மனதினையை கடவுளாக நினைத்துள்ளனர். இப்படி பலவகையான கொள்கைகள் உடையவர்களாக சித்தர்கள் இருந்தாலும் அவர்கள் அனைவரும் சொன்னது மனதினை வென்று உயரிய வழிக்கு செல்லும் முறை மட்டுமே.

சித்தர்களினால் ஏற்பட்ட பலன் –

சித்தர்களின் அறிவு திறத்தால் ரசவாதம், நாடிசோதிடம், பட்சி சாத்திரம், சித்த வைத்தியம், யோகா, தியானம் போன்ற பல துறைகளில் முன்னேற்றம் ஏற்பட்டது. இவர்களைப் பற்றி ஆய்வு செய்தவர்கள் தற்போது உள்ள சோதனைக் கூடங்கள் போல சிலவற்றை அமைத்து சித்தர்கள் தங்களது துறையில் வல்லுனர்கள் ஆனார்கள் என்கின்றனர். அது மட்டுமல்லாது உலோக வகைகள், உப்பு வகைகள், பாஷாண வகைகள், வேர் வகைகள், பட்டை வகைகள், பிராணிகளி்ன் உடம்பிலே உற்பத்தியாகும் கோரோசனை கஸ்தூரி, மூத்திரம், மலம் முதலியவைகளின் குணங்களை ஆராய்ந்து கண்டிருக்கின்றனர். முழுக்க முழுக்க காட்டிலும் குகையிலும் ஆராட்சி செய்ததால் மக்களுக்கு தெரியாத பல அரிய மூலிகைகளையும், முறைகளையும் சித்தர்கள் அறிந்து வைத்திருந்தனர்.

ஆயகலைகள் அறுபத்தி நான்கு -

சித்தர்கள் ஆயகலைகள் அறுபத்தி நான்கில் (சிலவற்றை தவிர) சிறந்து விளங்கியிருக்கின்றனர். அறுபத்தி நான்கிலும் சிறந்து விளங்கியதாக கூட கருத்துகள் நிலவுகின்றன. இக்கூற்று எந்தளவுக்கு உண்மை என தெரியவில்லை.ஆனால் ஒவ்வொறு சித்தரும் ஒரு கலையிலாவது சிறந்து விளங்கியிருக்கின்றனர். போகர் என்னும் சித்தர் சிற்பங்களை வடிப்பதில் வல்லவராக திகந்திருக்கிறார், பாம்பாட்டி சித்தர் விஷமுறிவு மருத்துவதுறையிலும், அகத்தியர் முதலானோர் எழுத்தாற்றல் கலையிலும் சிறந்து விளங்கி உள்ளதற்கான குறிப்புகள் கிடைக்கின்றன.

சரி அறுபத்தினான்கு கலைகள் என்னென்ன? என்று தெரிந்தால் தானே நாம் ஒரு முடிவுக்கு வர இயலும். அதற்காக இங்கே பட்டியல். இந்த பட்டியலும் காலத்திற்கு ஏற்றாற் போல மாறுபட்டுள்ளது.

முதல் பட்டியல் -
1. எழுத்திலக்கணம் (அக்கரவிலக்கணம்);
2. எழுத்தாற்றல் (லிகிதம்);
3. கணிதம்;
4. மறைநூல் (வேதம்);
5. தொன்மம் (புராணம்);
6. இலக்கணம் (வியாகரணம்);
7. நயனூல் (நீதி சாத்திரம்);
8. கணியம் (சோதிட சாத்திரம்);
9. அறநூல் (தரும சாத்திரம்);
10. ஓகநூல் (யோக சாத்திரம்);
11. மந்திர நூல் (மந்திர சாத்திரம்);
12. நிமித்திக நூல் (சகுன சாத்திரம்);
13. கம்மிய நூல் (சிற்ப சாத்திரம்);
14. மருத்துவ நூல் ( வைத்திய சாத்திரம்);
15. உறுப்பமைவு நூல் (உருவ சாத்திரம்);
16. மறவனப்பு (இதிகாசம்);
17. வனப்பு;
18. அணிநூல் (அலங்காரம்);
19. மதுரமொழிவு (மதுரபாடணம்);
20. நாடகம்;
21. நடம்;
22. ஒலிநுட்ப அறிவு (சத்தப் பிரமம்);
23. யாழ் (வீணை);
24. குழல்;
25. மதங்கம் (மிருதங்கம்);
26. தாளம்;
27. விற்பயிற்சி (அத்திரவித்தை);
28. பொன் நோட்டம் (கனக பரீட்சை);
29. தேர்ப்பயிற்சி (ரத ப்ரீட்சை);
30. யானையேற்றம் (கச பரீட்சை);
31. குதிரையேற்றம் (அசுவ பரீட்சை);
32. மணிநோட்டம் (ரத்தின பரீட்சை);
33. நிலத்து நூல்/மண்ணியல் (பூமி பரீட்சை);
34. போர்ப்பயிற்சி (சங்கிராமவிலக்கணம்);
35. மல்லம் (மல்ல யுத்தம்);
36. கவர்ச்சி (ஆகருடணம்);
37. ஓட்டுகை (உச்சாடணம்);
38. நட்புப் பிரிப்பு (வித்துவேடணம்);
39. காமநூல் (மதன சாத்திரம்);
40. மயக்குநூல் (மோகனம்);
41. வசியம் (வசீகரணம்);
42. இதளியம் (ரசவாதம்);
43. இன்னிசைப் பயிற்சி (காந்தருவ வாதம்);
44. பிறவுயிர் மொழியறிகை (பைபீல வாதம்);
45. மகிழுறுத்தம் (கவுத்துக வாதம்);
46. நாடிப்பயிற்சி (தாது வாதம்);
47. கலுழம் (காருடம்);
48. இழப்பறிகை (நட்டம்);
49. மறைத்ததையறிதல் (முஷ்டி);
50. வான்புகவு (ஆகாயப் பிரவேசம்);
51. வான்செலவு (ஆகாய கமனம்);
52. கூடுவிட்டுக் கூடுபாய்தல் (பரகாயப் பிரவேசம்);
53. தன்னுருக் கரத்தல் (அதிருசியம்);
54. மாயச்செய்கை (இந்திரசாலம்);
55. பெருமாயச்செய்கை (மகேந்திரசாலம்);
56. அழற்கட்டு (அக்கினித் தம்பனம்);
57. நீர்க்கட்டு (சலத்தம்பனம்);
58. வளிக்கட்டு (வாயுத்தம்பனம்);
59. கண்கட்டு (திருட்டித்தம்பனம்);
60. நாவுக்கட்டு (வாக்குத்தம்பனம்);
61. விந்துக்கட்டு (சுக்கிலத்தம்பனம்);
62. புதையற்கட்டு (கனனத்தம்பனம்);
63. வாட்கட்டு (கட்கத்தம்பனம்);
64 சூனியம் (அவத்தைப் பிரயோகம்).


வேறொரு பட்டியல்

1. பாட்டு (கீதம்);
2. இன்னியம் (வாத்தியம்);
3. நடம் (நிருத்தம்);
4. ஓவியம்;
5. இலைப்பொட்டுக் (பத்திர திலகம்) கத்தரிக்கை;
6. பல்வகை யரிசி பூக்களாற் கோலம் வைத்தல்;
7. பூவமளியமைக்கை;
8. ஆடையுடை பற்களுக்கு வண்ணமமைக்கை;
9. பள்ளியறையிலும் குடிப்பறையிலும் மணி பதிக்கை;
10. படுக்கையமைக்கை;
11. நீரலை அல்லது நீர்க்கிண்ண இசை (ஜலதரங்கம்);
12. நீர்வாரி யடிக்கை;
13. உள்வரி (வேடங்கொள்கை);
14. மாலைதொடுக்கை;
15. மாலை முதலியன் அணிகை;
16. ஆடையணிகளாற் சுவடிக்கை;
17. சங்கு முதலியவற்றாற் காதணியமக்கை;
18. விரை கூட்டுகை;
19. அணிகலன் புனைகை;
20. மாயச்செய்கை (இந்திரசாலம்);
21. குசுமாரரின் காமநூல் நெறி (கௌசுமாரம்);
22. கைவிரைவு (ஹஸ்தலாவகம்);
23. மடைநூலறிவு (பாகசாத்திர வுணர்ச்சி);
24. தையல்வேலை;
25. நூல்கொண்டு காட்டும் வேடிக்கை;
26. வீணை யுடுக்கைப் பயிற்சி (வீணை டமருகப் பயிற்சி);
27. விடுகதை (பிரேளிகை);
28. ஈற்றெழுத்துப் பாப் பாடுகை;
29. நெருட்டுச் சொற்றொடரமக்கை;
30. சுவைத்தோன்றப் பண்ணுடன் வசிக்கை;
31. நாடகம் உரைநடை (வசனம்) யிவற்றினுணர்ச்சி;
32. குறித்தபடி பாடுகை (ஸமஸ்யாபூரணம்);
33. பிரம்பு முத்தலியவற்றாற் கட்டில் பின்னுதல்;
34. கதிரில் நூல் சுற்றுகை;
35. மரவேலை;
36. மனைநூல் (வாஸ்து வித்தை);
37. காசு, மணி நோட்டம் (நாணய ரத்னங்களின் பரிசோதனை);
38. நாடிப்பயிற்சி (தாதுவாதம்);
39. மணிக்கு நிறமமைக்கையும் மணியின் பிறப்பிட மறிகையும்;
40. தோட்டவேலை;
41. தகர்ப்போர் சேவற்போர் முதலிய விலங்கு பறவைப்போர்;
42. கிளி நாகணங்கட்குப் பேச்சுப் பயிற்றுவகை;
43. உடம்பு பிடிக்கையும் எண்ணைய் தேய்க்கையும்;
44. குழூவுக்குறி (சங்கேதாக்ஷரங்களமத்துப் பேசுகை);
45. மருமமொழி (ரகசிய பாஷை);
46. நாட்டுமொழி யறிவு (தெசபாஷை யுணர்ச்சி);
47. பூத்தேர் (புஷ்பரதம்) அமக்கை;
48. முற்குறி (நிமித்தம்) அமைக்கை;
49. பொறியமைக்கை;
50. ஒருகாலிற் கொள்கை (ஏகசந்தக்கிராகித்வம்);
51. இருகாலிற் கொள்கை (துவிசந்தக்கிராகித்வம்);
52. பிதிர்ப்பா (கவி) விடுக்கை;
53. வனப்பு (காவியம்) இயற்றுகை;
54. உரிச்சொல்லறிவு (நிகண்டுணர்ச்சி);
55. யாப்பறிவு;
56. அணியறிவு (அலங்காரவுணர்ச்சி);
57. மாயக்கலை (சாலவித்தை);
58. ஆடையணியுந் திறமை (உடுத்தலிற் சாமர்த்தியம்);
59. சூதாட்டம்;
60. சொக்கட்டான்;
61. பாவை (பொம்மை), பந்து முதலியன வைத்தாடுகை;
62. யானயேற்றம், குதிரையேற்றம் பயிற்சி;
63. படக்கலப் பயிற்சி;
64. உடற் (தேகப்) பயிற்சி (சது.).

போர் பயிற்சிகள், யானையேற்றம்,குதிரையேற்றம் போன்ற மன்னர்கள் செய்யக்கூடிய கலைகளில் சித்தர்கள் தேர்ச்சி பெற்றிருப்பது சந்தேகமே. சில சித்தர்கள் மன்ன்னாக இருந்து பின் சித்தர்களாக மாறியவர்கள் என்பதனை நாம் மறக்க கூடாது. ஆனால் அழற்கட்டு (அக்கினித் தம்பனம்), நீர்க்கட்டு (சலத்தம்பனம்), வளிக்கட்டு (வாயுத்தம்பனம்), கண்கட்டு (திருட்டித்தம்பனம்), நாவுக்கட்டு (வாக்குத்தம்பனம்), விந்துக்கட்டு (சுக்கிலத்தம்பனம்),புதையற்கட்டு (கனனத்தம்பனம்),வாட்கட்டு (கட்கத்தம்பனம்),சூனியம் போன்றவற்றில் தேர்ந்திருப்பதற்கான வழிகள் உண்டு. சித்தர்களைப் பற்றிய செவிவழிச் செய்திகள் இதை உறுதி படுத்துகின்றன.

எந்தெந்த சித்தர்கள் எவற்றில் வல்லவர்கள் என்பதினை அவர்களுடைய தனிப்பட்ட வரலாறு இடுகைகளில் இடுகின்றேன். கொஞ்சம் பொருத்து கொள்ளுங்கள்.

No comments:

Post a Comment