Lord Siva

Lord Siva

Monday, 19 March 2012

தீக்காயங்களுக்கு மருந்தாகும் `ஹைட்ரோ ஜெல்’

Posted On March 19,2012,By Muthukumar
தீ விபத்துகளால் பாதிக்கப்படுபவர்களுக்கு அதற்குப் பின்னான வாழ்க்கை ஒரு கேள்விக்குறியாகவும் வேதனை நிறைந்ததாகவும் இருக்கும். அதிலும் முதல் நிலை மற்றும் இரண்டாம் நிலை தீக்காயங்களால் பாதிக்கப்படுபவர்களை விட மூன்றாம் நிலை தீக்காயங்களால் பாதிக்கப்படுபவர்களின் நிலைமை மிகவும் பரிதாபமானது.
காரணம், முதல் இரண்டு நிலை தீக்காயங்கள் தோலின் மேற்புறத்தை மட்டுமே வெகுவாக பாதிக்கும் தன்மையுடையவை. ஆனால் மூன்றாம் நிலை தீக்காயங்கள் தோலின் மேற்புறம் தொடங்கி அதனடியில் இருக்கும் தசைகள் வரை மிகுந்த சேதத்தை ஏற்படுத்தக்கூடியது.
ஆக, மூன்றாம் நிலை தீக்காயங்களுக்கான சிகிச்சைகளின் முதல் சவால் முழுமையான தோல் வளர்ச்சியை தூண்டுவது. இரண்டாவதும் மிக முக்கியமானதுமான சவால் தீக்காயங்களால் ஏற்படும் தழும்புகளை நீக்குவது. இதற்கான ஒரு மருந்தை கண்டுபிடித்து அசத்தியிருக்கிறார்கள் அமெரிக்காவின் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பொறி யியல் கல்லூரி, தீக்காய சிகிச்சை பிரிவு மற்றும் நோய்க்குறியியல் துறை ஆய்வாளர்கள்.
தண்ணீர் மற்றும் தண்ணீரில் கரையும் தன்மையுள்ள `டெக்ஸ்ட்ரான்' என்னும் ஒரு வகை சர்க்கரையால் ஆன `ஹைட்ரோ ஜெல்'தான் தீக்காய சிகிச்சைகளுக்கான அந்த அருமருந்து! எலிகளின்மீது நடத்தப்பட்ட முதற்கட்ட ஆய்வில் நிறைந்த பலனை தந்திருக்கும் இந்த ஹைட்ரோ ஜெல், புதிய ரத்த நாளங்கள், தோல் எண்ணையை உற்பத்தி செய்யும் சுரப்பிகள் மற்றும் ரோம வேர் உயிரணுக்களுடன்கூடிய தோல் வளர்ச்சியை தூண்டுகிறது.
இந்த புதிய சிகிச்சை முறையில், பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்ட, பாலிமர்களாலான மும்முனை கட்டமைப்புடைய ஹைட்ரோ ஜெல்லைக் கொண்டு காயங்களுக்கான டிரெஸ்ஸிங் செய்யப்பட்டது. இந்த சிகிச்சை புதிய ரத்த நாளங்களின் வளர்ச்சி மற்றும் சிக்கலான பல படிமங்களுடைய தோலின் மறுவளர்ச்சியை தூண்டியது என்கிறார் மூத்த ஆய்வாளர் ஷெரான் ஜெரெக்ட்.
புதிய தசைவளர்ச்சியை தூண்டும் புதிய ரத்த நாள வளர்ச்சியான `ஆஞ்ஜியோ ஜெனசிஸ்'சை தூண்டி, தீக்காயங்களுக்குள் ரத்த ஓட்டத்தை பாய்ச்சுவதன் மூலம் தோல் மறுவளர்ச்சியை தூண்டுவதே இந்த சிகிச்சையின் நோக்கம் என்கிறார் ஷெரான். இந்த உயிரியல் நிகழ்வுக்கு ஹைட்ரோ ஜெல் ஒரு பாலமாக செயல்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஹைட்ரோ ஜெல் ஆய்வில் மற்றொரு ஆச்சரியம் என்னவென்றால், தொடக்கத்தில் ஹைட்ரோ ஜெல்லுடன் ஸ்டெம் செல்களை புகுத்தி அவற்றைக் கொண்டு தோலின் மறுவளர்ச்சியை தூண்டலாம் என்று முடிவு செய்யப்பட்டது.
ஆனால் அதற்கு முன்பு, வெறும் ஹைட்ரோ ஜெல்லைக் கொண்டு தீக்காய சிகிச்சையை மேற்கொண்டால் எந்த விதமான மாற்றம் நிகழ்கிறது என்பதை கண்டறியும் நோக்கத்துடன் ஹைட்ரோ ஜெல் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. ஆய்வின் முடிவில், தோலின் மறுவளர்ச்சியை தூண்ட ஹைட்ரோ ஜெல் மட்டுமே போதுமானது என்னும் ஆச்சரியமான முடிவு கிடைத்தது என்பதுதான் விசேஷமே!
இது குறித்து கருத்து தெரிவித்த ஜான்ஸ் ஹாப்கின்ஸ் மருத்துவ பள்ளியின் அறுவை சிகிச்சை பேராசிரியரான ஜான் ஹார்மன், `முழுமையான தோல் மறுவளர்ச்சியை தூண்டும் இந்த ஹைட்ரோ ஜெல் ஒரு அற்புத மருந்து என்பதில் சந்தேகமில்லை. காரணம், இதுவரையிலான தீக்காய சிகிச்சைகளில் முழுமையான தோல் மறு வளர்ச்சி என்பது சாத்தியபடவேயில்லை' என்கிறார்.
மேலும், ரத்தத்தில் சுழன்று வரும், உடலின் எல்லாவிதமான உயிரணுக்களாகவும் வளரும் திறனுள்ள ரத்த மஞ்ஞை உயிரணுக்கள் அல்லது ரத்த ஸ்டெம் செல்களை தீக்காயங்களுக்குள் செலுத்துவதன் மூலமே, ஹைட்ரோ ஜெல் தோலின் மறுவளர்ச்சியை தூண்டக்கூடும் என்கிறார் ஹார்மன் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஹைட்ரோ ஜெல் தொடர்பான மேலதிக விலங்கு பரிசோதனைகளுக்குப்பின் மனித பரிசோதனைகள் தொடங்கிவிடும். ஆக, இன்னும் சில வருட பரிசோதனைகள் மற்றும் ஆய்வுகளுக்குப்பின் மனித பயன்பாட்டுக்கு வந்துவிடும் இந்த அற்புத ஹைட்ரோ ஜெல் என்பது மகிழ்ச்சியான தகவல்.
தற்போதுள்ள பிற சிகிச்சைகளை விட மிகவும் விலை குறைந்ததும், பெரிய அளவில் உற்பத்தி செய்யக்கூடியதுமான இந்த ஹைட்ரோ ஜெல்லை அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிறுவனம் ஒரு மருந்தாக அல்லாமல் ஒரு கருவியாகவே பாவிக்கும் என்கிறார் ஷெரான். காரணம், இதில் உயிரியல் மூலக்கூறுகள், மருந்துகள் இப்படி எதுவும் இல்லை என்பதுதான். அட, அப்படியா? ஆச்சரியமாகத்தான் இருக்கிறது!

No comments:

Post a Comment