Posted On Jan 07,2012, By Muthukumar
மலம் கழித்துவிட்டுக் கழுவும்போது அதில் ஏதோ கட்டியாகத் தட்டுப்பட்டது.
மூல வருத்தமோ, வேறு ஏதாவது ஆபத்தான கட்டியாக இருக்குமோ எனப் பயந்து வந்தாள் ஒரு நோயாளி.
மலவாயிலில் அரிப்பாக இருக்கிறது என சொன்னார் மற்றொரு ஐயா.
பரிசோதித்துப் பார்த்தபோது அவர்களுக்கு குதத்தை அண்டிய பகுதியில் சிறிய தோல் வளர்த்திகள் தென்பட்டன. (Anal Skin Tags) என ஆங்கிலத்தில் சொல்லுவார்கள்.
இவற்றின் தோற்றத்தில் பல மாறுபாடுகள் இருக்கக் கூடும். குறிப்பிட்ட ஒரு வடிவமாக இருக்காது. நீளமாக, உருண்டையாக, தட்டையாக, பெயரற்றவை எனப் பல்வேறு வடிவங்களில் இருக்கலாம். சதைக்கட்டி போலவும் இருக்கலாம்.
இவை காண்பதற்கு அரிதானவை அல்ல. பல நோயாளிகளுக்கு இருக்கின்றன. பலருக்கு அவ்வாறு இருப்பது தெரிந்திருப்பதில்லை.
இவை ஆபத்தானவை அல்ல. பொதுவாக எந்தத் துன்பத்தையும் கொடுப்பதில்லை. பேசா மடந்தைகளாக அடங்கிக் கிடக்கும். மிகச் சிலருக்கு அரிப்பு, வலி தோன்றலாம்.
பொதுவாக இவை குதம் சம்பந்தப்பட்ட வேறொரு நோயுடன் தொடர்புடையதாக இருக்கும். அல்லது அதன் தொடர்ச்சியாக அல்லது பின்விளைவாக இருக்கும்.
எவ்வாறு ஏற்படுகிறது?
- மலம் இறுகும்போதுஇ முக்கிக் கழிக்க நேரிடும். அவ்வேளையில் குதத்தில் சிறு உராய்வுகள் அல்லது காயங்கள் ஏற்பட வாய்ப்புண்டு. இவை காலகதியில் குணமாகும்போது அதில் சிறுதோல் வளர்ச்சியாக மாறும்.
- அல்லது வெளியே இறங்கிய 'வெளிமூலம்'(External hemorrhoid)சரியான சிகிச்சையின்றி தானாகக் குணமடையும்போதும் அவ்விடத்தில் சிறு தோல்வளர்ச்சியாக வெளிப்படும்.
- குதப் பகுதியில் முன்பு செய்யப்பட்ட சத்திரசிகிச்சையின் விளைவாகவும் தோல் வளர்வதுபோலத் தோன்றும்.
வலி வேதனை எவையும் ஏற்படுவதில்லை ஆதலால் நோயாளியின் கவனத்தை ஈர்ப்பதில்லை. தற்செயலாக மலம் கழுவும்போது அது இருப்பதை உணரக் கூடும்.
அவ்வாறான தோற்சிறு கட்டியுடன் வலியிருப்பதாக நோயாளி சொன்னால்; பெரும்பாலும் குதத்துடன் சேர்ந்த மூல வீக்கம், குத வெடிப்பு, போன்ற வேறு ஏதோ நோயும் சேர்ந்திருப்பதாகக் கருதலாம்.
இந்நோயுள்ளவர்கள் குதவாயிலை மிகவும் சுத்தமாக வைத்திருப்பது அவசியம். மலம் கழித்துவிட்டுக் கழுவும்போது பெரும்பாலும் ஒரு பக்கமாகவே கழுவுவோம்.
பெரும்பாலானவர்கள் குதத்தின் பின் பக்கத்தில் ஆரம்பித்து முன்னுக்கு வருமாறு தமது விரல்களைத் தேய்த்தே கழுவுவார்கள். இதனால் தோல் வளர்த்தியின் மறுபுறத்தில் மலம் சிறுதுணிக்கைகளாக அடையும் சாத்தியம் உண்டு. கட்டிகள் பல அவ்வாறான இருந்தால் சுத்தத்தைப் பேணுவது மேலும் சிரமமாகும்.
சுகாதாரக் குறைவு காரணமாக அவ்விடத்தில் அழற்சி ஏற்படும். இது அரிப்பை ஏற்படுத்தும். அரிப்பு அடங்கச் சொறியும்போது புண்பட்டால் கிருமித் தொற்றும் ஏற்பட்டு நிலையை மோசமாக்கும்.
சிகிச்சை
எந்தவித பிரச்சனையும் இல்லாவிட்டால் அவ்வாறான தோற்சிறு கட்டிகளுக்கு யாதொரு சிகிச்சையும் அவசியமில்லை. அரிப்பு, வலி, சுகாதாரத்தைப் பேணுவதில் சிரமம் போன்ற பிரச்சனைகள் ஏற்பட்டால் அவற்றை வெட்டி நீக்கிவிடலாம்.
அவ்விடத்தை மரக்கச் செய்ய ஊசி போட்டுவிட்டு சிறு சத்திர சிகிச்சை மூலம் அகற்றலாம். மருத்துவ நிலையத்தில் உள்நோயாளியாக அனுமதிபெற்று நின்று செய்ய வேண்டியதில்லை. பெரும்பாலும் வெளிநோயாளியாகச் செய்துவிட்டு சிறிது நேரத்தில் வீடு திரும்பக் கூடிய சாதாரண சிக்கிச்சையே இது.
வீக்கமடைந்த பப்பிலே (Enlarged Papillae) , வைரஸ் வோர்ட், நீர்க்கட்டி (Polyps), போற்றவையும் குதத்தருகே தோன்றக் கூடும். எனவே மருத்துவரின் ஆலோசனை பெற்று சரியாக நோயை நிர்ணயிப்பது அவசியம்.
குத வெடிப்பு (Anal fissure)
பிஸ்டுலா (fistula) போன்ற கிருமித் தொற்றுள்ள மலக்குடல் சார்ந்த புண்களில்,
Fistula in ano |
No comments:
Post a Comment