Posted On Jan 07,2012,By Muthukumar
மருத்துவரிடம் வருபவர்களில் பலர் களைப்பாயிருக்கு என்று சொல்லுவார்கள்.டொனிக் குடித்தால், அல்லது ஒரு சேலைன் ஏற்றினால் அது குணமாகிவிடும் எனப் பலரும் நம்புகிறார்கள்.
ஆனால் அது உண்மையா?
காய்ச்சல் வயிற்றோட்டம், வாந்தி போன்ற நோய்களால் போஷாக்கு இழந்தவர்கள் களைப்பாக இருந்தால் அது புரிந்து கொள்ளக் கூடியதே.
ஆனால் நோய்களால் பீடிக்கப்பட்டவர்கள் மட்டுமின்றி மிகவும் ஆரோக்கியமான உடல் நிலையில் இருப்பவர்கள் அல்லது அவ்வாறு பார்வைக்குத் தென்படுபவர்கள் கூட களைப்பு எனச் சொல்லிக் கொண்டு வருவார்கள்.
- 'சத்தெல்லாம் பிழிஞ்சு எடுத்த மாதிரிக் கிடக்கு',
- 'உடம்புக்கு ஏலாதாம்',
- 'ஒண்டுமே செய்ய முடியுதில்லை'
- வழமைபோல இயங்க முடியாதிருத்தல்,
- ஊக்கக் கேடு,
- உற்சாகமின்மை,
- சோம்பலாக இருத்தல்
பெரும்பாலும் இக் களைப்பு என்பது உடலின் ஒருவித தற்காப்பு முயற்சியாகும்..
- கடுமையான உழைப்பு,
- உளநெருக்கீடு,
- போதிய ஓய்வின்மை,
- உற்சாகமற்ற சூழல்
- போதிய ஓய்வு எடுத்ததும்,
- நன்கு தூங்கி எழுந்ததும் அல்லது
- மகிழ்ச்சியான சூழல் கிட்டியதும்
பெரும்பாலும் களைப்பு என்பது கடுமையான நிலை அல்ல. ஆபத்தாக இருக்காது. பயப்பட வேண்டியதும் இல்லை.
மருத்துவரிடம் தெளிவாகச் சொல்லுங்கள்
ஆனால் அவ்வாறு செய்தும் (போதிய ஓய்வு, நிம்மதியாக தூக்கம், மகிழ்ச்சியான சூழல்) அது மாறவில்லை எனில் மருத்துவரை நாட வேண்டிய தேவை ஏற்படும்.
மருத்துவரிடம் செல்ல நேர்ந்தால் களைப்பு எத்தகைய வேலைகளின் போது ஏற்படுகிறது. வேலைகளுடன் தொடர்பில்லை எனின் எந்த நேரத்தில் ஏற்படுகிறது போன்றவற்றைக் கவனித்துச் சொல்லுங்கள்.
- காலையில் படுக்கையிலிருந்து விழித்தெழும்போதே சோர்வாக இருந்து அது நாள் முழுவதும் தொடர்ந்தால் மனச்சோர்வின் அறிகுறியாக இருக்கக் கூடும்.
- மாறாக காலையில் மிக உற்சாகமாக இருந்து நேரம் செல்லச்செல்ல களைப்பு அதிகரித்துச் சென்றால் அது தைரொயிட் சுரப்பி குறைவாக வேலை செய்வதாக இருக்கலாம்.
- அல்லது காலையில் நலமாக இருந்து சற்று நேரம் செல்ல சோர்வும் தலைவலியும் சேர்ந்து வந்தால் அது சைனஸ் நோயாக இருக்கலாம்.
காரணங்கள் என்ன?
இரத்தசோகை
எமது நாட்டிலும் மேலும் பல கீழைத்தேச நாடுகளிலும் இரத்தசோகை பரவலாக இருக்கிறது. பொதுவாக ஹீமோகுளோபிலின் அளவு
- ஆண்களில் 13 கிராம் (Hb 13gm) ஆகவும்
- பெண்களில் 12கிராம் ;(Hb 12gm) ஆகவும் இருக்க வேண்டும்.
இது குறைவாக இருந்தால் மூளை உட்பட உடல் உறுப்புகளுக்கு போதிய ஒட்சிசன் கிடைக்காது. இதனால் சோர்வும் களைப்பும் மந்தநிலையும் ஏற்படலாம். பிள்ளைகள் மனமூன்றிப் படிக்க முடியாது சோர்வு தடுக்கும். சுறுசுறுப்பு குறையும்.
இது படிப்படியாக ஏற்படும் நிலை என்பதால் நோயாளியால் புரிந்து கொள்ள முடியாதிருக்கலாம். உடல், முகம், கண், நாக்கு போன்றவை வெளிறலாக இருப்பதை வைத்து மருத்துவரால் அறிய முடியும். சுலபமான இரத்தப் பரிசோதனை மூலம் நிச்சயமாக அறிய முடியம்.
சளி, பீனிசம்
தூசி, காலநிலை மாற்றங்கள். கடுமையான மணங்கள், மகரந்தம், போன்றவற்றிற்கு ஓவ்வாமை உள்வர்களுக்கு அடிக்கடி சளி, தும்மல், முக்கடைப்பு போன்ற அறிகுறிகள் தோன்றும். சிலருக்கு அது சைனஸ் தொல்லையாக மாறிவிடுவதும் உண்டு.
சைனசைடிஸ் என்பது மண்டை ஒட்டில் நாசிக்கு அண்மையாக இருக்கும் காற்றறைகளில் அழற்சியும் கிருமித்தொற்றம் ஏற்படுவதாகும். இவை யாவும் தலைப்பாரம், களைப்பு, சோர்வுத்தன்மை போன்ற அறிகுறிகளை ஏற்படுத்தும். ஆஸ்த்மாவும் இத்தகைய ஒரு ஒவ்வாமைச் சளி நோயே.
மேலைநாடுகளில் வசந்த காலங்களில் பெரும்பாலும் காணப்படும் Hay Fever இத்தகையதே. இங்கு காலவேறுபாடுகள் தெளிவாக இல்லாத நிலையில் பலருக்கும் நாளாந்தம் தொல்லை கொடுக்கிறது.
நீடித்து தொல்லை கொடுக்கும் வலிகள்
மனிதர்களுக்கு பலவிதமான உடல் வலிகள் ஏற்படுகின்றன. உதாரணமாக மோட்டார் சைக்கிளில் செல்லும் போது வீழ்ந்துவிட்டால் அடிபட்ட வலி தாங்க முடியாததாக இருக்கும். ஆனால் இது தற்காலிகமானது.சில நாட்களில் குணமாகிவிடும்.
ஆனால் வேறுபல வலிகள் வாரக்கணக்கிலோ மாதக் கணக்கிலோ அன்றி வாழ்நாள் பூராவும் தொல்லை கொடுக்கலாம்.
- மூட்டுவாதங்கள்,
- முள்எலும்பு நோய்கள்
- புற்று நோய்களால் ஏற்படுவது
மது மற்றும் போதைப் பொருட்கள்
இன்று எமது சமுதாயத்தில்
- மதுப்பாவனை அதிகரித்து வருகிறது.
- போதைப் பொருட்களும் பலரை வசீகரிக்கின்றன.
- சிகரட்டும் இதில் அடங்கும்.
நீங்கள் அவ்வாறு உபயோகிப்பவராயின்
- அதனை உடனே நிறுத்துங்கள்.
- குறைத்துக் குறைத்து நிறுத்தலாம் என எண்ணினால் நீங்கள் உங்களையும் மற்றவர்களையும் ஏமாற்றுவதாகவே இருக்கும்.
- நீங்களாக நிறுத்துவது கடினமாக இருந்தால் மருத்துவ உதவியை நாடுங்கள்.
உங்களது கணவன் அல்லது மகனது நடத்தையில் திடீர் மாற்றங்கள் ஏற்பட்டால் அவதானியுங்கள். சில நேரங்களில் சோர்வும் வேறு நேரங்களில் அதிக உற்சாகமும் காணப்பட்டால் இதுவும் மது அல்லது போதைப் பொருள் காரணமாக இருக்கலாம். இப்பொழுது பல பெண்களும் இதில் அடங்குகிறார்கள்.
தூக்கக் குறைபாடு
பொதுவாக ஒருவருக்கு தினமும் 6-7 மணிநேரத் தூக்கம் தேவை. இல்லாவிடின் மூளையால் சமாளிக்க முடியாது. ஏனெனில் நீங்கள் தூங்கும் போதுதான் மூளையானது தனக்குக் கிடைத்த தகவல்களை ஒழுங்குபடுத்திச் சேமிக்கின்றது. போதிய தூக்கம் இல்லாவிடில் அதைச் செய்ய முடியாது சோர்வுறும்.
தூக்கக் குறைபாடு ஏற்படுவதற்கு உங்கள் வேலைப்பளுவும் காரணமாக இருக்கலாம். அல்லது நோய்களும் காரணமாக இருக்கலாம். உடல் நோய்கள் மட்டுமின்றி மன உளைச்சல்களும் தூக்கத்தைக் கெடுக்கும்.
போதிய தூக்கம் என்பது படுக்கையில் கிடக்கும் நேரமல்ல.
அமைதியாகத் தூங்கும் நேரம் என்பதாகும்.
தூக்கத்தில் மூச்சுத் திணறல் (Sleep Apnea) சிலருக்கு ஏற்படுவதுண்டு. இதை நீங்கள் உணர மாட்டீர்கள். கூடத் தூங்குபவர் நீங்கள் அமைதியாகத் தூங்குவதையும் திடீரென திணறுவதையும் அவதானிக்கக் கூடும். அவ்வாறெனில் மருத்துவரை கலந்தாலோசிக்கவும்.
Delighful drowsiness Thanks:- http://www.paintinghere.com |
தைரொயிட் சுரப்பி நோய்கள்.
தைரொயிட் சுரப்பி என்பது எமது கழுத்தில் குரல்வளையை அண்டியிருக்கும் ஒரு சுரப்பியாகும். இது தைரொஸ்சின் என்ற ஹோர்மோனைச் சுரக்கிறது. இது குறைவாகவோ அன்றி அதீதமாகவோ சுரந்தால்
- களைப்புச் சோர்வு,
- வியர்வை,
- குளிர் தாங்க முடியாமை,
- படபடப்பு,
- எடை குறைதல் அல்லது அதிகரித்தல்
TSH, FT4 போன்ற இரத்தப் பரிசோதனைகள் மூலம் இதனைக் கண்டறியலாம்.
இப்பிரச்சனை உள்ளவர்களுக்கு சுரப்பியில் வீக்கம் பெரும்பாலும் இருப்பதில்லை. அதே நேரம் கழுத்தில் களலை இருக்கும் அனைவருக்கும் இந்நோய் இருக்கிறது எனவும் கருத வேண்டாம்.
மனச்சோர்வு
பெரும்பாலானவர்களுக்கு களைப்பு என்பது மனத்தோடு சேர்ந்தது.
- மனச்சோர்வு (Depression)
- உள நெருக்கீடு (Stress)
- மனப் பதகளிப்பு (Anxiety)
இதை நோயுள்ளவர்கள் உணர்வதில்லை. உடலில் உள்ள பிரச்சனைக்கு மனம் காரணமாக இருக்கும் என்பதை மருத்துவர் கூறினாலும் பலரும் ஏற்றுக் கொள்வதில்லை.
'எனக்கு ஒரு கவலையும் இல்லை. யோசனையும் இல்லை' என மறுப்பவர்கள் ஏராளம்.
காரணம் மனநோய்கள் பற்றி எமது சமூகத்தில் இருக்கும் தப்பான அபிப்பிராயம்தான். விசர், பைத்தியம், அங்கொடை எனப் பல பிம்பங்கள் மனநோய்கள் பற்றி அவர்களுக்கு உண்டு.
வேலைத் தளத்தில் உள்ள நெருக்கீடு, பரீட்சையில் உச்ச மார்க் பெற வேண்டும் என்ற துடிப்பு, வீட்டிலும் சமூகத்திலும் நிதம் சந்திக்கும் சாதாரண பிரச்சனைகள் கூட உளநெருக்கீட்டிற்கு காரணமாகலாம் என்பதை பலரும் புரிந்து கொள்வதில்லை.
எனவே நெருக்கீடுகள் உங்கள் களைப்புக் காரணமாக இருக்கலாம் என்றால் அதை உங்கள் மருத்துவரிடம் கூறுங்கள். அல்லது மருத்துவர் அவை பற்றி தானாக விசாரித்தால் தயங்காமல் வெளிப்படையாகப் பேசி உங்கள் பிரச்சனைக்கு தீர்வு காண முயலுங்கள்.
வேறு தீவிர காரணங்கள்
அவை தவிர பல தீவிர நோய்களும் களைப்புக்கு காரணமாக இருக்கலாம்.
- நீரிழிவு,
- இருதயச் செயலிழப்பு,
- சிறுநீரகச் செயலிழப்பு,
- ஈரல் செயலிழப்பு,
- சயரோகம்.
- புற்றுநோய்கள்,
- எயிட்ஸ் கூட காரணமாகலாம்.
நீங்கள் செய்ய வேண்டியது
எனவே போதியளவு தூக்கம், போஷாக்கான உணவு, தினசரி உடற்பயிச்சி, அளவான வேலை, போதிய ஓய்வு, மகிழ்ச்சியான சூழலுக்கு மாறுதல், மன அடக்கப் பயிற்சி (யோகா,தியானப் பயிற்சி), போதைப் பொருள் தவிர்ப்பு போன்ற ஆரோக்கியமான வாழ்க்கை முறைகளைக் கடைப்பிடித்துப் பாருங்கள்.
அவ்வாறு செய்தும் உங்கள் களைப்புக் குறையாவிட்டால் மருத்துவ ஆலோசனை பெறுவது மிகவும்அவசியம்.
No comments:
Post a Comment