Lord Siva

Lord Siva

Monday, 12 December 2011

பாட்டி வைத்தியம்

Posted On Dec 12,2011,By Muthukumar
"பாட்டி, குழந்தை சாப்பிடவே மாட்டேங்குது''
"அஜீரண கோளாறா இருக்கும். வெத்தலையைக் கிள்ளி வாயில போட்டு மெல்லச்சொல்லு சரியாப் போயிடும்''.
இப்படி வாய் வழியாக, வம்சம் வழியாக மலர்ந்தது தான் பாட்டி வைத்தியம் என்று சொல்லப்படும் இயற்கை வைத்தியம். நாட்டுப்புற வைத்திய முறைகளில் ஒன்றே இயற்கை வைத்தியம். அது மனிதன் உடல் நலம் பேண ஆரம்பித்ததன் வரலாற்றை நினைவுபடுத்துகிறது. நாட்டுப்புற மக்களின் வாழ்வில் பழங்காலம் தொட்டு இன்றுவரை பாரம்பரியமாகப் புழக்கத்தில் இருந்து வரும் நாட்டுப்புற மருத்துவ முறைகளில் தமிழக நாட்டுப்புற மருத்துவம் மிகவும் புகழ்மிக்கது.
***
னுபவத்தின் மூலமாக கற்ற மருத்துவ முறைகளை, பரம்பரையாகப் பின்பற்றி நோய்களைக் குணப்படுத்தும் மருத்துவமே நாட்டுப்புற மருத்துவமாகும். இயற்கையோடு இயைந்து வாழ்க்கை நடத்திய மக்களின் பட்டறிவிலிருந்து தோன்றியது அது. மனிதன் தோன்றிய காலத்திலிருந்தே, நாட்டுப்புற மருத்துவமும் தோன்றியிருக்கக் கூடும். இயற்கை மூலிகைகளின் வளம் அறியப்பட்டு பல்லாயிரம் ஆண்டுகளாக அவை உரிய முறையில் பயன்படுத்தப்பட்டு வருவது சிறப்புக்குரியது. இன்றளவும் புழக்கத்தில் இருப்பது அந்த மருத்துவமுறைக்கு கிடைத்த வெற்றியே. நாட்டுப்புற மருத்துவத்தை இயற்கை மருத்துவம், சித்தமருத்துவம், மந்திர மருத்துவம் என்று முக்கிய பிரிவுகளாக பிரிக்கிறார்கள்.
***
யற்கைப் பொருட்களை மருத்துவத்திற்கு பயன்படுத்திக் கொள்வது இயற்கை மருத்துவமாகும். குறிப்பாக மருந்தாக உட்கொள்வதைவிட உணவாகவே உட்கொள்ளப்படுவது இந்த மருத்துவ முறையின்சிறப்பு. கசப்புக் காய்கறிகள், பழங்கள், இஞ்சி, மிளகு, வெந்தயம் போன்றவற்றை தினமும் உணவில் சேர்த்துக் கொள்வது இயற்கை மருத்துவத்தின் ஒரு பகுதியே. பாட்டி வைத்தியம், கை வைத்தியம், கைமருந்து என்று சொல்லப்படும் வைத்தியமும் இயற்கை வைத்திய முறையே. பெரியோர் சொல்ல இளையோர் கேட்டுப் பயன்படுத்தி வருகிறார்கள். இதற்கு அதிகமான எழுத்து சான்றுகள் கிடையாது. பல கிராமங்களில் இன்றும்கூட கைமருந்தால் குணமாகாத நோய்களுக்கே மருத்துவரை அணுகும் வழக்கம் உள்ளது.
***
குழந்தைகளுக்கான பெரும்பாலான நோய்கள் கைமருத்துவத்திலேயே குணப்படுத்தப் படுகின்றன. தாய்ப்பாலின் மகத்துவமறிந்து மருந்துகளை தாய்ப்பாலில் கலந்துகொடுக்கும் வழக்கம் பழங்காலம் தொட்டே இம்மருத்துவ முறையில் இருக்கிறது. குழந்தைகளுக்கு அடிக்கடி ஏற்படும் சளி, இருமல், கக்குவான், உடற்கட்டிகள், ஜீரணக் கோளாறு போன்றவற்றுக்கு எளிதான மருத்துவ முறைகள் இயற்கை மருத்துவத்தில் உள்ளன. பெரியவர்களுக்கான நோய்களுக்கும் இயற்கை மருத்துவத்தில் தீர்வுகள் உண்டு. உணவுமுறை, தட்ப-வெப்பமாற்றம், சூழல் மாசு, அதிக உழைப்பு, தூக்கமின்மை, மிதமிஞ்சிய உடலுறவு ஆகியவையே நோய்க்கு காரணம் என வரையறுக்கிறது இயற்கை மருத்துவம்.
***
னிதனுக்கு வெப்பத்தினாலும், குளிர்ச்சியினாலும் ஏற்படும் நோய்கள் ஏராளம். அதற்கேற்ப வெப்ப நோய்களுக்கு குளிர்ச்சியான மருந்தும் (சூட்டை தணிக்க மோர் குடிப்பது), குளிர்ச்சியால் ஏற்படும் நோய்களுக்கு சூடான மருந்தும் கொடுப்பது (சளிக்கு ஆவி பிடிப்பது) இயற்கை மருத்துவத்தின் சிறப்பு. உடல் வலிகளுக்கும் நாட்டுப்புற மருத்துவத்தில் எளிய மருத்துவ முறைகள் உள்ளன. தலைவலி, பல்வலி, வயிற்றுவலி, வயிற்றுப் போக்கு, கபம், இருமல், வாதம், மூலம், கால் வீக்கம், மஞ்சள் காமாலை, இளநரை என சகல வித நோய்களுக்கும் இயற்கை மருத்துவத்தில் மருந்து உண்டு. காடு, இயற்கை சார்ந்த பகுதிகளில் வாழும் மக்கள் என்பதால் விஷக்கடிகளுக்கு சிறப்பு மருந்துகளும் நிறைய உண்டு.
***
யற்கை மருத்துவத்தில் மூலிகை இணைந்த மருத்துவ முறை சித்த மருத்துவமாக கருதப்படுகிறது. இது தமிழ் மருத்துவம் என்றே வழங்கப்படுகிறது. எளிதில் கிடைக்கும் மூலிகைகளைக் கொண்டு சிக்கனமான, பக்க விளைவுகளற்ற மருத்துவ சிகிச்சை அளிப்பது இதன் சிறப்பு. சித்தர்களான முன்னோர் அருளிய மருத்துவமே சித்தமருத்துவம் எனப்படுகிறது. `உடம்பால் அழியின் உயிரால் அழிவர்` என்று பாடிய திருமூலர் உள்ளிட்ட 18 சித்தர்கள், சித்த மருத்துவ முறைகளை பாடல் வடிவில் எழுதி வைத்துவிட்டுச் சென்றிருக்கிறார்கள். இவை நோய்க் காரணங்களை தெளிவாக விளக்குவதோடு சாதாரண மக்களாலும் பின்பற்றத்தக்க எளிய மருத்துவ சிகிச்சையை தீர்வாகத் தருகிறது.
***
நாட்டுப்புற மருத்துவ முறையில் மந்திரமருத்துவமும் ஒன்று. பழங்கால மனிதனின் மனரீதியான அச்சத்தைப் போக்கவும், இயற்கையைக் கட்டுப்படுத்தி பயன்பெறவும் உருவாக்கியதே மந்திர மருத்துவமாகும். மருத்துவம் இல்லாத நோய்களுக்கும், தீராத நோய்களுக்கும் மந்திர மருத்துவத்தை நாடுவது வழக்கமாக இருக்கிறது. தெய்வக்குற்றம், தீய ஆவிகளின் செயல், செய்வினை, பில்லிசூனியம், முன்னோர் செய்த பாவம் ஆகியவையே நோய்க்காரணம் என்கிறது மந்திர மருத்துவம். கோடாங்கி கேட்டல், வேப்பிலை அடித்தல், திருநீறு போடுதல், மந்திரித்தல் முறைகளில் நோய்களுக்கு சிகிச்சை அளிக்கிறார்கள். இது முழுக்க முழுக்க நம்பிக்கை மருத்துவம் என்பதால் உளவியல் மாற்றங்களிலேயே இதன் பயன்பாடு இருக்கிறது.
***
ருத்துவர், மருத்துவச்சி, நாட்டு வைத்தியர் போன்ற பெயர்களில் நாட்டுப்புற மருத்துவர்கள் இருந்துள்ளனர். முதியோர்களும், மூலிகையின் பயன் அறிந்தோரும் நாட்டுப்புற மருத்துவர்களே. செவிவழியாக, மரபு வழியாகவும், பழக்கப் பயிற்சியினாலும் இவர்கள் மருத்துவம் செய்கின்றனர். பரம்பரை பரம்பரையாக வைத்தியம் பார்ப்பவர்களும் உண்டு. பரம்பரை மருத்துவர்கள் சிலர், சில மருத்துவமுறைகளை வெளியே சொல்லாமல் ரகசியம் காத்து வந்துள்ளனர். வெளியே சொன்னால் பலிக்காது என்பது அவர்களது நம்பிக்கை. மருத்துவ உலகம் வெகு வேகமாக வளர்ந்துவிட்ட பின்னரும், இயற்கை மருத்துவமும், நாட்டுப்புற மருத்துவமும் நிலைத்திருப்பது அதன் பெருமையைக் காட்டுகிறது.
***
`பத்து மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம்`, `ஆற்றுநீர் வாதம் போக்கும், அருவி நீர் பித்தம் போக்கும், சோற்று நீர் இரண்டும் போக்கும்`, `சனி தோறும் நீராடு`, நோயைக்கட்ட வாயைக்கட்டு`, `ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி` போன்ற பழமொழிகள் இயற்கை மருத்துவத்தை காலம்தோறும் சுமந்து வந்தவையாகும். நாட்டுப்புற பாடல்களிலும் மருத்துவ விளக்கங்கள் இருக்கின்றன. சித்தமருத்துவப் பாடல்கள் மருத்துவக் களஞ்சியமாக திகழ்கின்றன. நாட்டுப்புற மருத்துவம் உடல், மனம் சமூகத்தோடு பிணைந்திருப்பதால் சக்தி உடையதாக விளங்குகிறது. இயற்கை சார்ந்த வாழ்க்கை முறைக்கும், உணவுப் பழக்கத்திற்கும் மக்கள் மாற மனங்கொண்டு வருவது இயற்கை மருத்துவத்தின் சிறப்பே!

No comments:

Post a Comment