Lord Siva

Lord Siva

Tuesday, 6 December 2011

மூலிகை மருத்துவம்: தலையே சுமையானால் என்ன செய்வது?

Posted On Dec 06,2011,By Muthukumar
தலைமுடி நமக்கு எவ்வளவு அழகைத் தருகிறதோ அவ்வளவு அழுக்கையும் தருகிறது. கேசப்பராமரிப்பு மிகவும் முக்கியமாகும். கேசத்தின் கதகதப்பும் நெருக்கமும் கூடுதலான ரத்த ஓட்டமும் ரோமக்கால்களுக்கு பலத்தை தருகிறதோ இல்லையோ, பேன்களுக்கு தலையில் வசிக்க போதுமான இடத்தையும் வளத்தையும் தருகிறது. கேசத்தின் அருமை இளமையில் தெரியாது.
வயது அதிகரிக்கும்போது கேசத்தின் இழப்பு பெரும் கவலையாகிவிடும். முடியை இழப்பது என்பது தங்களின் அழகை அல்லது மதிப்பை குறைத்துக் கொள்வதற்கு சமமாக கருதப்படுவதால், முடி உதிர்தல் பெரும்பாலானவர்களுக்கு கவலையை ஏற்படுத்திவிடுகிறது. முடியை சுத்தமாக பராமரிக்காவிட்டால், அழகும் ஆரோக்கியமும் பாதிக்கப்படுகிறது. படுக்கையில் பேன் 10 பாய் தாண்டும் என குறிப்பிடப்படும். இது ஒருவரிடமிருந்து மற்றவருக்கு பரவி, பல்கி பெருகி, கேசத்தின் ஆரோக்கியத்தை கெடுப்பதுடன் பல்வேறு தொற்று நோய்களையும் ஏற்படுத்திவிடுகின்றன. பேன் தொல்லை உள்ளவர்கள் தங்கள் முடியை சுத்தமாக வைத்துக் கொள்வதுடன் விரல் நகங்களையும் வெட்டிவிட வேண்டும்.
இல்லாவிட்டால் பேனின் ஒவ்வாமையால் ஏற்படும் அரிப்பினால் தலையில் தோன்றும ரத்தக்கசிவில் பேன்கள் முட்டையிட்டு, பல்கி பெருகுகின்றன ஆகவே அடிக்கடி சொறிவதை தடுக்க வேண்டும். வாரம் இரண்டு அல்லது மூன்று முறையாவது சிகைக்காய் தூள், கஞ்சி, செம்பரத்தைப்பூ மற்றும் இலை, வெந்தயம், வேப்பிலை, மலைவேம்பு இலை ஆகியவற்றை அரைத்து தலையில் தேய்து குளித்துவர வேண்டும். இதனால் தலை சுத்தமாக இருப்பதுடன் ரோமக்கால்களும் வலுவடைகின்றன. ஷாம்பு, சோப்பு போன்றவற்றை உபயோகிப்பதால் தலையில் வறட்சி ஏற்பட்டு, சிறிய வெடிப்புகள் தோன்றி, அவற்றில் பேன்கள் எளிதில் வளர ஆரம்பிக்கின்றன. பேன்தொல்லை உள்ளவர்களுக்கு தலையில் ஏதோ குறுகுறுவென்று ஓடுவது போன்ற உணர்வு, திடீரென்ற அரிப்பு, தலையில் புல்லரித்தல் போன்ற உணர்வு ஆகியன ஏற்படும். தலையின் பின்புறம், காதின் பின்புறம், வகிடு உள்ள பகுதிகள் ஆகியவற்றில் அரிப்பும், திடீர் வியர்வையும் தோன்றும். பேன்களை நீக்க நெருக்கமான சீப்புகளால் தலை சீவும்பொழுது ரோமக்கால்கள் அவற்றில் சிக்கி, சிதைந்துவிடுகின்றன.
இதனால் முடி உதிரத் தொடங்குகின்றது. நரைமுடிகள் சீப்புகளில் சிக்கும்பொழுது அழுத்தி சீவி பிடுங்குவதால் அருகிலுள்ள முடிகளும் விரைவில் நரைக்கின்றன. இது மட்டுமின்றி, தலையில் நுண்கிருமிகள் வளருவதுடன் தலையை சொறியும்பொழுது பேனுடன் முட்டைகளும் நக இடுக்கின்வழியாக நீர் மற்றும் உணவுடன் கலந்து வயிற்றுக்குள் சென்ற�¯ உபாதைகளை ஏற்படுத்துகின்றன. பேன்தொல்லை உள்ளவர்களுக்கு காதின் கீழே, கழுத்தின் கீழே நெறிக்கட்டிகளும் உண்டாகின்றன. பெரும்பாலானோர் பேனின் கொடுமையால் மொட்டையடித்து, ரோமத்தை இழந்து வேதனைப்படுவதும் உண்டு. தலையில் தோன்றும் பேன்களை எந்தவித பக்கவிளைவுகளும் இன்றி நீக்கும் அற்புத மூலிகை பேன்கொட்டை என்ற காக்கைக்கொல்லி விதை.
அனமிர்டா காக்குலஸ் என்ற தாவரவியல் பெயர் கொண்ட மினிஸ்பெர்மேசியே குடும்பத்தைச் சார்ந்த கொடிகளின் உலர்ந்த பழங்களே காக்கைகொல்லி விதை என்றும், பேன்கொட்டை என்றம் அழைக்கப்படுகிறது. இதன் கொட்டையிலுள்ள பிக்ரோடாக்சின் என்ற நச்சுப்பொருள் பேன்களை கொல்வதுடன், பேன்களினால் தலையில் தோன்றும் புண்களையும் குணப்படுத்துகின்றன. 10 பேன்கொட்டை விதைகளை ஒன்றிரண்டாக இடித்து, 200 மிலி தேங்காய் எண்ணெயில் கலந்து லேசாக கொதிக்கவைத்து, பதத்தில் வடிகட்டி, 10 நாட்கள் கழித்து தலையில் தேய்த்துவர பேன்கள் கொஞ்சங், கொஞ்சமாக மடியும். மலைவேம்பு இலை, வேப்பிலை , வெந்தயம், கறிவேப்பிலை மற்றும் பேன்கொட்டை ஆகியவற்றை சமஅளவு எடுத்து, வெந்நீர் விட்டு மைய அரைத்து, தலையில் பூசி 30 நிமிடங்கள் வைத்திருந்து , தலையை அலசிவர பேன்கள் செத்து வெளியேறும். இந்த விதைகளை உள்ளே சாப்பிட்டு விடக்கூடாது.

No comments:

Post a Comment