Posted On Dec 27,2011,By Muthukumar |
புராணத்தில்
அந்தாகன் என்றொரு கொடிய அரக்கன் இருந்ததாகவும், உலக மக்களை
கொடுமைப்படுத்திய அவனை அழிக்க சிவன் முயன்றபோது அவன் உடலில் இருந்து
விழுந்த ஒவ்வொரு துளி ரத்தத்தில் இருந்தும் அவனைப் போன்ற ஒரு அரக்கன்
உருவானதாகவும் ஒரு கதை உண்டு. இறுதியில், அந்த அரக்கனை அழிக்கச் சென்ற
தேவி, அந்தாகனின் உடலில் இருந்து வெளியாகும் ரத்தத் துளிகள் கீழே விழும்
முன் குடித்துவிட, அந்தாகன் அழிக்கப்பட்டான் என்கிறது புராணம்!
கிட்டத்தட்ட, இந்த கதையில் வரும் அரக்கன் `அந்தாகன்' போலத்தான் கொடிய உயிர்க்கொல்லி நோயான புற்றுநோயும்!
எப்படி என்கிறீர்களா?
புற்றுநோயைப்
பொறுத்தவரை, அதை தொடக்கத்திலேயே அறுவை சிகிச்சை செய்து அகற்றிவிட்டால்,
அதன் வளர்ச்சியை கட்டுப்படுத்தி புற்றுநோயை முழுவதுமாக குணப்படுத்திவிட
முடியும். ஆனால், ஒரு புற்றுநோய் நன்றாக வளர்ந்து, பரவும் திறனுள்ள
புற்றணுக்களைக் கொண்ட ஒரு கட்டியாக மாறிவிட்டபின் அறுவை சிகிச்சை செய்தால்,
அதிலிருந்து வெளியாகும் திரவம் அல்லது புற்றணுக்கள் சுற்றியுள்ள
ஆரோக்கியமான உயிரணுக்களையும் பாதித்து புற்றுநோயை மீண்டும்
உண்டாக்கிவிடும்.
இப்பொழுது புரிகிறதா, எப்படி அந்தாகனும் புற்றுநோயும் கிட்டத்தட்ட ஒரே மாதிரி என்று?
இந்த
நிலையில் புற்றுநோயை அழிக்க ஒரு புதிய முயற்சி எடுத்து அதில் வெற்றியும்
கண்டிருக்கிறோம் என்கிறார் அமெரிக்காவின் தேசிய புற்றுநோய் ஆய்வு
நிலையத்தின் ஆய்வாளர் ஹிசாடாகா கொபாயாஷி.
மருத்துவர்கள்,
புற்றுநோய் கட்டியை அறுவை சிகிச்சை செய்து அகற்றும்போது, ஆரோக்கியமான
தசையும் நீக்கப்படுவதை இயன்ற அளவு தவிர்க்கவே முயற்சி செய்வார்கள். ஆனால்,
ஆரோக்கியமான உயிரணுக்களுடன் கலந்திருக்கும் புற்றணுக்களை இனம் கண்டறிவது
மிக மிக கடினமான ஒன்று. இந்த சிக்கல் காரணமாக, புற்றுநோய்க்கான
சிகிச்சைகளின் போது பல புற்றணுக்கள் தப்பித்துவிடுகின்றன. இவ்வாறு
தப்பித்துவிடும் புற்றணுக்கள் மீண்டும் புற்றுநோய் வளர காரணமாகின்றன.
ஆக,
புற்றுநோய் மருத்துவத்தின் தலையாய நோக்கம் புற்றணுக்களை எல்லாம் இனம்
கண்டு அழிப்பது. இந்த நோக்கத்துடனான பயணத்தில்தான் புற்றணுக்களை அடையாளம்
காட்டும் திறனுள்ள `ஒளிரும் ஸ்ப்ரே'யை கண்டுபிடித்திருக்கிறார் ஆய்வாளர்
கொபாயாஷி. அதாவது, ஒரு அறுவை சிகிச்சையின் போது ஒளிரும் தன்மையுள்ள இந்த
ஸ்ப்ரேயை, புற்றுநோய் கட்டிமீது தெளிப்பார்கள். இந்த ஸ்ப்ரே தெளிக்கப்பட்ட
சில நிமிடங்களிலேயே, நோயாளியின் உடலின் எந்தெந்த பகுதியில் புற்றணுக்கள்
இருக்கின்றன என்பதை துல்லியமாக அடையாளம் காட்டிவிடும். இதன் மூலம்,
ஆரோக்கியமான உயிரணுக்களை தவிர்த்து, புற்றணுக்களை மட்டும் அறுவை செய்து
அகற்ற முடியும். இந்த ஸ்ப்ரே செயல்படும் விதம் குறித்து எலிகளின் மீது
ஆய்வு நடத்திக் காண்பிக்கப்பட்டது.
இனி, ஒளிரும் ஸ்ப்ரே எப்படி செயல்படுகிறது என்று பார்ப்போம்.
புற்றணுக்களில்
மட்டும் y glutamyl transpeptidase என்றொரு என்சைம் அளவுக்கதிகமாக
உற்பத்தியாகிறது. இது ஆரோக்கியமான உயிரணுக்களில் இல்லை. புற்றணுக்களை ஒளிர
வைக்கும் ஸ்ப்ரேவில் இந்த என்சைமின் செயல்பாட்டுக்கு தேவையான மூலப்பொருள்
இருக்கிறது. புற்றணுக்களிலுள்ள என்சைமுடன் ஸ்ப்ரேவிலுள்ள வேதியியல்
மூலப்பொருள் இணையும்போது அந்த புற்றணுவும் ஒளிர்கிறது.
புற்றுநோய்
மருத்துவத்தின் இந்த புதிய யுக்திக்கு ஒரேயொரு தடைக்கல் மட்டும்
இருக்கிறது. அதாவது, புற்றணுக்களை அடையாளம் காட்டும் இந்த ஸ்ப்ரே மருந்து
செயல்படத் தேவையான என்சைமான y glutamyl transpeptidase, எல்லா
புற்றணுக்களிலும் உற்பத்தியா வதில்லை. மாறாக, மிகவும் வேகமாக வளரும்
தன்மையுள்ள புற்றணுக்களில் மட்டுமே உற்பத்தியாகிறது. இதனால் என்ன பிரச்சினை
என்று கேட்டால், மிகவும் வேகமாக வளரும் புற்றணுக்கள் மட்டும் அடையாளம்
காணப்பட்டு அழிக்கப்பட்டுவிடும். ஆனால், மெதுவாக வளரும் தன்மையுள்ள, y
glutamyl transpeptidase உற்பத்தியாகாத புற்றணுக்கள் சிகிச்சையிலிருந்து
தப்பித்துவிடும். இத்தகைய பிரச்சினை இருந்தாலும் கூட, சினைப்பை,
கருப்பைவாய், குடல் மற்றும் பெருங்குடல் புற்றுநோய் களுக்கான சிகிச்சைக்கு,
இந்த புதிய வகை ஒளிரும் ஸ்ப்ரே மருந்து மிகவும் பயனுள்ள ஒன்று
என்கிறார்கள் புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணர்கள்!
No comments:
Post a Comment