மிகவும் எளிமையான இந்த ஆசனத்தை எவரும் இலகுவாக செய்ய முடியும். இந்த ஆசனம் செய்வதால் நீண்ட கால இடுப்பு வலி மறைந்து போகிறது. இடுப்பு பலம் பெறுகிறது. முதுகில் வலி, தோள் பகுதிகளில் சிலருக்கு காணப்படும் வலி இந்த ஆசனத்தால் நீங்கும். உடலின் ஜீவநாடிகள் ஆசனத்தின் மூலம் பலம் பெறுவதால் வாத ரோகங்கள் அண்டாது.
திரிகோணாசனத்தால் முதுகெலும்பு நன்றாக பக்கங்களில் திரும்பி வளைவதால், இளமையான தோற்றம் ஏற்படுகிறது. இனி இந்த ஆசனத்தை செய்வது பற்றி பார்க்கலாம்.
திரிகோணாசனம் செய்யும் முறை:
கால்களை அகலமாக விரித்து நிற்கவும். இரண்டு கால்களுக்கும் இடையில் அவரவர் உயரத்திற்கு தகுந்தபடி இரண்டு அடி முதல் மூன்று அடிகள் ஒவ்வொரு குதிகாலுக்கும் இடையில் இடைவெளி இருக்கலாம்.
முதுகுதண்டு வளையாமல் நேராக நிமிர்ந்து நிற்கவும். இரண்டு கைகளையும் தோளுக்கு நேராய் பக்கவாட்டில் உயர்த்தி நிறுத்தவும். உள்ளங்களை தரையை பார்த்தவாறு இருக்கும் நிலையில் வைத்துக் கொள்ளவும். இப்பொழுது மூச்சை நன்றாக இழுக்கவும்.
இந்த நிலையில் ஏழு முதல் பத்து எண்ணும் வரை இருக்கவும். பிறகு மூச்சை இழுத்துக் கொண்டே நேராய் நிமிர்ந்து கைகளை பக்கவாட்டில் விரித்தபடியான நிலைக்கு வரவும். இப்போது கைகளை கீழே தொங்கப்போட்டு விடாமல் அப்படியே ஐந்து முதல் பத்து எண்ணும் வரை நின்று கொண்டே மூச்சை இழுக்கவும்.
பிறகு மூச்சை விட்டுக் கொண்டே வலது கைப்பக்கம் இடுப்பை வளைத்துக் குனிந்து, வலது கைவிரல் நுனிகள் வலது காலின் கணுக்காலுக்கு ஒட்டினாற் போல் தரையில் படும்படியான நிலையில் நிறுத்தவும். இந்த நிலையில் பத்து எண்ணும் வரை இருக்கவும். பிறகு மூச்சை இழுத்துக் கொண்டே நிமிர்ந்து கைகளை விரித்து நின்ற நிலைக்கு வரவும். இப்படி இரண்டு பக்கங்களிலும் குனிந்து நிமிர்ந்து செய்தால் அது ஒரு திரிகோண ஆசனம் என்று கணக்கிடலாம்.
இது போல் ஒரு முறைக்கு ஆறு தடவைகள் வரை செய்யலாம். இது அர்த்த திரிகோணாசனம் என்று அழைக்கப்படுகிறது.
பூரண திரிகோணாசனம்:
முதலில் முதுகெழும்பு வளையாமல் கால்களை மேலே சொன்ன நிலையில் இரண்டு குதிகால்களுக்கும் இடையில் இரண்டு அடி முதல் மூன்றடி அகல இடைவெளி இருக்கும் படி வைத்துக் கொண்டு நிமிர்ந்து நிற்கவும். இப்போது கைகள் இரண்டையும் பக்கவாட்டில் நேராக நீட்டிய படி வைத்திருக்கவும். இப்போது மூச்சை நன்றாக இழுத்து, இடுப்பை மட்டும் இடதுபக்கம் நன்றாக திருப்பி, மூச்சை விட்டுக் கொண்டே குனிந்து வலது கைவிரல்கள் இடது கால் கணுக்காலை ஒட்டி தரையில் படும்படி தொடவும்.
இடது கை மேல் நோக்கி தூக்கியிருக்க, தலையைத் திருப்பி இடது கைநுனி விரல்களை பார்க்கவும். இந்த நிலையில் ஏழு முதல் 10 எண்ணும் வரை இருக்கலாம். பிறகு மூச்சை இழுத்துக் கொண்டே நிமிர்ந்து முதலில் சொன்னபடி முதுகுஎழும்பு வளையாமல் பக்கவாட்டில் கைகளை விரித்தவாறு உள்ள நிலைக்கு வரவும். இப்போது மீண்டும் மூச்சை இழுத்து இடுப்பை வலது பக்கம் திருப்பி, இடது கைவிரல்கள் வலது கணுக்காலை ஒட்டிய தரையை தொடும்படி முயற்சி செய்யவும்.
இந்த நிலையில் வலது கையை மேல் தூக்கி நிமிர்த்தி தலையை திருப்பி வலது கை நுனி விரல்களை பார்க்க முயற்சிக்கவும். இப்படியே ஏழு முதல் பத்து எண்ணும் வரை இருக்கவும். இது மாதிரி இரண்டு பக்கங்களிலும் செய்தால் ஒரு திரிகோணாசனம் செய்ததாகும். இது போல் ஒரு முறைக்கு 4 முதல் ஏழு தடவைகள் வரை செய்யலாம்.
குறிப்புகள்:
ஆசனம் செய்ய விரும்புபவர்கள் இரண்டு திரிகோணாசனங்களையும் செய்யலாம். சிலருக்கு உடல் மிகவும் குண்டாக இருக்கும். அவர்கள் பக்கவாட்டில் குனிவது மிகவும் சிரமமாக இருக்கும். அவர்கள் தங்களால் இயன்ற அளவு பக்கவாட்டில் குனிந்தாலும் கூட ஆசனத்தின் பலன்கள் உண்டு. ஒரு பக்கம் குனிந்து திரிகோணாசனம் செய்து விட்டு மறுபக்கம் அரைகுறையாக சாய்ந்து திரிகோணாசனம் செய்வர். இது தவறு. ஒரு பக்கம் எந்த அளவுக்கு குனிந்து நிமிர்கிறோமோ, அதே அளவு மறுபுறத்திலும் குனிந்து நிமிரவேண்டும். குறிப்பாக, ஒரு பக்கம் குனிந்து எழும் போது, முழுவதுமாக முதுகெலும்பு வளையாமல் நேராக நிமிர்ந்து நின்ற நிலைக்கு வந்த பிறகு தான் அடுத்த பக்கத்திற்கு குனிய வேண்டும். இது மிகவும் முக்கியம்.
பெண்களை பொறுத்த மட்டில் அவர்கள் கர்ப்பமானது தெரிய வந்தால், கர்ப்பமான இரண்டு தொடக்க மாதங்கள் வரை இந்த ஆசனத்தை செய்யலாம். பிறகு இந்த ஆசனத்தை தொடரக்கூடாது. அதே போல் மாதவிலக்கானவர்கள், அந்த காலகட்டத்திலும் இந்த ஆசனங்களை செய்வது கூடாது.
No comments:
Post a Comment