Lord Siva

Lord Siva

Wednesday, 28 December 2011

கடவுள் கையெழுத்துப் போட்ட சமாச்சாரம்!



குழந்தை வரம் வேண்டுமென்று குலதெய்வத்திற்குக் கிடா வெட்டி வேண்டுதல்….
அரசமரத்தைச் சுற்றிவந்து அடிவயிற்றைத் தினமும் தடவிப் பார்த்தல்…..
எச்சில் இலை எடுத்தல், மண்சோறு சாப்பிடுதல்….
காலம் காலமாக இப்படி என்னென்னவோ வழிமுறைகள் கையாளப்பட்டு வருகின்றன.
இதோ…. இன்னொரு டைப் அறிமுகம்…..
வேலூர் மாவட்டம், விரிஞ்சிபுரத்தில் உள்ளது மரகதாம்பிகை & சுயம்பு மார்கபந்தீஸ்வரர் கோயில்.
ஆண்டுதோறும் கார்த்திகைக் கடைசி ஞாயிறு அன்று இங்குள்ள சிம்மக்குளம் திறக்கப்படும். இந்தக் குளத்தில் நீராடும் பெண்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும், பேய், பிசாசு, பில்லி, சூன்யம், வலிப்பு போன்றவை நீங்கும் என்பது நம்பிக்கை.
குழந்தை வரம் வேண்டும் பெண்கள், சிம்மக்குளத்தில் நீராடி ஈரத்துணியுடன் கோயில் வளாகத்தில் இரவு தூங்க வேண்டும்.
அப்போது அவர்களது கனவில் சுவாமி தோன்றி பழம், பூ, பாலாடை கொடுப்பதும், அடுத்த ஆண்டே அவர்கள் குழந்தைப்பேறு அடைவார்கள் என்பதும் பக்தர்களின் நம்பிக்கை.

அதன்படி, இந்த ஆண்டும் கார்த்திகையின் கடைசி ஞாயிறன்று இந்த விழா நடந்தது.
அப்போது ஏராளமான பெண்கள் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல், குழந்தை வரம் வேண்டி சிம்மக்குளத்தில் நீராடினர். பின்னர் ஈரச் சேலையுடன் கோயில் வளாகத்தில் படுத்து உறங்கினர்.
வேண்டுதல் நிறைவேறினால்… வயிற்றுக் குழந்தையுடன் கோயிலுக்கு வந்து தொட்டில் கட்டிச் செல்வார்களாம்.
அடேங்கப்பா…. இவ்வளவு பேர் இந்தத் தொல்லையில் இருக்கிறார்களா என்ன?
இதுவல்லாமல், வேறு மாதிரியான சில நிகழ்வுகள் நடந்ததாகக் கூடக் கேள்விப்ட்டிருக்கிறோம்.
வரப்புத் தாண்டுதல் என்கிற ஒரு விழா. கும்மிருட்டில், கூட்டத்தோடு கூட்டமாக, பெண்கள் பிறருடன் உறவு கொண்டு வரம் பெறுவது. (வாடகைத் தாய்க்கு எதிர்ப்பதமோ?)
இதில் இன்னொருவகை…. துப்பட்டித் திருவிழா. (விருப்பப் பட்டவர்கள் ஒன்று சேர்ந்து விடிய விடியத் துப்பட்டிக்குள்….).
மீண்டும் ஒருமுறை….. குழந்தை உருவாகும் விதம் பற்றி….. மருத்துவத்துறை ஆராய்ச்சி செய்தால் நல்லது!

இது தொடர்பான….. ஆனால் இதற்குச் சம்பந்தமில்லாத…… ஒரு சின்னக் கதை….. +18 மட்டும் படிக்கலாம்.
மகளிர் அமைப்புகள் ஒன்று சேர்ந்து, மாநாடு ஒன்றுக்கு ஏற்பாடு செய்தார்கள். சிறப்பு அழைப்பாளராகக் கடவுள் அழைக்கப்பட்டிருந்தார்.
எல்லா விஷயங்களும் பேசி முடிக்கப் பட்டபிறகு, இறுதியாக பிரசவ வலி குறித்துப் பேசப்பட்டது.
ஒரு குழந்தை என்பது இருவருக்குமே பொதுவானது. அதில் ஆண்கள் மட்டும் ஜாலியாக இருக்க, நாங்கள் மட்டும் ஏன் வலியில் துடித்துச் சாகவேண்டும்?
எனவே, இனிமேல் பிரசவம் ஆகும்போது, பெண்ணுக்குப் பிரசவ வலி வரக்கூடாது.
அதற்குப் பதிலாக, அந்தக் குழந்தையின் தகப்பன் யாரோ, அவருக்குத்தான் அந்த வலி வரவேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதில் நிறையச் சிக்கல் இருக்கிறது. ஒருமுறைக்கு இருமுறை யோசித்து முடிவெடுங்கள் என்று கடவுள் சொன்ன கருத்து நிராகரிக்கப்பட்டதால், கடவுளும் அந்தத் தீர்மானத்தை ஏற்றுக்கொண்டார்.

இது நடந்து இரண்டு நாட்களுக்குள்….. மாவட்ட மகளிரணித் தலைவிக்குப் பிரசவம்.
கடவுள் கையெழுத்துப் போட்ட சமாச்சாரம் எப்படி வேலை செய்கிறது என்பதைப் பார்ப்பதற்காக, எல்லோரும் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.
மகளிரணித் தலைவியின் வீட்டுக்காரரோ, பிரசவ வலிப் பயத்தில் குட்டிபோட்ட பூனை மாதிரி அங்கும் இங்குமாக அலைந்து கொண்டிருக்கிறார்.
சிறிது நேரத்தில்…. குழந்தை தாயின் உடம்பை உடைத்துக்கொண்டு வெளியே வரத்துடிக்கிறது. ஆனால், அவருக்கு மட்டும் ஒன்றும் ஆகவில்லை. ஒரு வலியும் வரவில்லை.
கடவுள் நம்மை நம்பவைத்து நன்றாக ஏமாற்றிவிட்டார், இதை விடக்கூடாது என்று எல்லோரும் கோபப்படும்போது…….

தோட்டக்காரன் போட்ட சத்தத்தைக் கேட்டுப் பயந்துபோய், ஒட்டுமொத்த மகளிரணியும் அங்கே ஓடிப்போய்ப் பார்த்தால்……
வயிற்றைக் கையில் பிடித்துக்கொண்டு தரையில் புரண்டவாறு துடித்துக் கொண்டிருந்தான் தோட்டாக்காரன்…..
விஷயம் எல்லோருக்கும் எளிதாக விளங்கிவிட்டது….. ஓ….. இதில் நிறையச் சிக்கல் இருக்கிறது, ஒருமுறைக்கு இருமுறை நன்றாக யோசித்து முடிவெடுங்கள் என்று கடவுள் சொன்னது இதைத்தானா?
அடுத்த நொடியே….. தீர்மானம் வாபஸ் என்று கடவுளுக்கு ஈ-மெயில் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டது.

No comments:

Post a Comment