Posted On March 22,2012,By Muthukumar |
மனிதனுக்கு
உண்டாகும் கொடிய நோய் என்பது அவரவரர் தலைவிதியோ அல்லது ஜீன்களில் ஏற்படும்
மரபணு மாற்றமோதான் காரணம் என்று எண்ணிக்கொண்டிருக்கும் வேளையில், சில
வாழ்வியல் காரணிகள் தான் இத்தகைய நோய்கள் வருவதற்கு முக்கிய காரணங்கள் என
லண்டன் பல்கலைக் கழக பேராசிரியர் மேக்ஸ் பார்கின் தலைமையிலான விஞ்ஞானிகள்
கண்டறிந்துள்ளனர். அவை,
புகையிலை
போடுவது, புகைப்பழக்கம், மதுபானப் பழக்கம், உடலின் கூடுதலான எடை, போதிய
அளவு பழங்கள், காய்கறிகள் சாப்பிடாமல் இருப்பது, போதுமான அளவு சூரிய ஒளி
படாமல் இருப்பது, போதிய உடற்பயிற்சி இல்லாமல் இருப்பது, தாய்ப்பால்
புகட்டாமல் இருப்பது, ஹார்மோன் மருந்துகளை அதிகம் உட்கொள்வது, வேகாத
மாமிசம் உண்பது, போதிய நார்ச்சத்துள்ள உணவுகளை உண்ணாமல் இருப்பது, அதிக
உப்பு சேர்த்து சாப்பிடுவது..
இவைதான்
மனிதனை தாக்கும் கொடிய நோய்களின் ஆரம்பக் காரணியாகும். அதற்கு நாம் செய்ய
வேண்டியது சில வாழ்வியல் முறைகளை கடைப்பிடிப்பதுதான்.
இந்த வாழ்வியல் முறைகளால் நாம் கொடிய நோய்கள் ஏற்படுவதைத் தவிர்க்க முடியும்.
இதற்கு சில வாழ்வியல் மாற்றங்கள் இதோ..
· அதிகாலையில் சூரியயோதயத்திற்கு முன் எழுந்திருக்க வேண்டும்.
· எழுந்தவுடன் காலைக்கடன்களை முடித்துவிட வேண்டும்.
· காலை, மாலை தினமும் 20 நிமிடங்களாவது அவசியம் எளிய உடற்பயிற்சிகள் செய்ய வேண்டும்.
அவற்றில் சில..
நடத்தல்,
20 முறை குனிந்து நிமிர்தல், 20 முறை நன்றாக உட்கார்ந்து எழுதல், நின்ற
இடத்தில் மூன்று நிமிடங்கள் ஓடுவது, 2 நிமிடங்கள் நின்ற இடத்தில்
குதித்தல், 50 முறை கயிற்றாட்டம் (ஸ்கிப்பிங்) போடுதல், கை, கால் விரல்களை
நீட்டி மடக்குதல், இது தவிர, மூச்சுப் பயிற்சி 5 நிமிடம் கண்களுக்கு
பயிற்சி 3 நிமிடம்..
· தகுந்த யோகாசனங்களை முறைப்படி கற்று செய்ய வேண்டும்.
· நல்ல காற்றோட்டமும், வெளிச்சமும் உள்ள வீடுகளில் வசிக்க வேண்டும்.
· உறங்குவதும், நல்ல காற்றோட்டமுள்ள அறையாக இருக்க வேண்டும்.
·
பெரும் தீனியை ஒழிக்க வேண்டும். உணவருந்தும்போது பேசக் கூடாது. மௌனமாக
நன்றாக மென்று, சுவைத்து சாப்பிட வேண்டும். மாமிசத்தையும், அதிக உப்பு,
காரத்தையும் குறைக்க வேண்டும்.
·
தினசரி ஏதேனும் ஒருவேளை பச்சையாக உட்கொள்ளும் பழங்கள் காய்கள்,
பழச்சாறுகள் போன்றவற்றை உட்கொள்ள வேண்டும். மற்ற இரு வேளைகளில் வழக்கமான
சமைத்த உணவுகள் உட்கொள்ளலாம். இடைப்பட்ட வேளையில் நொறுக்குத்தீனி
தவிர்க்கப்பட வேண்டும்.
· நிற்கும்போதும் நடக்கும்போதும், உட்காரும் போதும் நன்கு நிமிர்ந்து இருக்க வேண்டும்.
· பகல் உணவை விட இரவு உணவு அளவு குறைவாகவும், இரவு 8 மணிக்குள்ளும் முடித்துக்கொள்ள வேண்டும். காலம் கடந்து சாப்பிடக் கூடாது.
· இரவில் சாப்பிட்டதும் சற்று உலாவிவிட்டு தூங்கச் செல்ல வேண்டும்.
· உணவருந்திய உடனே வேலைகள் செய்வதோ, குளிப்பதோ கூடாது.
· ஏழு மணி நேரத்திற்கு குறையாமல் தூங்க வேண்டும்.
· உப்பு, சர்க்கரை, காரம், புளிப்பு, முதலியவைகளை இயன்ற அளவு குறைத்து சாப்பிட வேண்டும்.
· மனதை அமைதியாக வைத்துக்கொள்ள வேண்டும்.
· தினமும் போதுமான அளவு தண்ணீர் அருந்த வேண்டும்.
·
தலைவலி, காய்ச்சல், முதுகுவலி, மூட்டுவலி, வயிற்றுவலி இவைகளுக்கு கடையில்
கிடைக்கும் மருந்துகளை சாப்பிடக் கூடாது. தேவையற்ற ஹார்மோன் மாத்திரைகள்
உட்கொள்ளக்கூடாது. மருத்துவர் ஆலோசனையின் பேரில் மட்டுமே மாத்திரைகளை
உபயோகிக்க வேண்டும்.
· ஆறு மாதத்திற்கு ஒருமுறை மலைப் பிரதேசங்களுக்குச் சென்று தூய காற்றை நுரையீரல் முழுக்க நிரப்பிக் கொண்டு வாருங்கள்.
இத்தகைய வாழ்வியல் முறைகளை கடைபிடித்தால், நோய் என்னும் அரக்கனை அண்ட விடாமல் தடுக்கலாம்.
No comments:
Post a Comment