Lord Siva

Lord Siva

Monday, 19 March 2012

பயமுறுத்தும் குறட்டை

Posted On March 19,2012,By Muthukumar
திருப்தியாகச் சாப்பிட்டதன் அடையாளமாகவே முன்பு குறட்டை கருதப்பட்டது.
ஒரு அறையின் கதவை மூடிய பிறகும் கூட அறைக்குள் தூங்குபவரின் குறட்டைச் சத்தம் வெளியே கேட்டால் அது மிகவும் ஆபத்தானது. இத்தகைய குறட்டைக்கு ஹீரோயிக் ஸ்நோரிங் என்று பெயர்.
மூச்சுப்பாதையில் ஏற்படும் தடை காரணமாகவே, குறட்டை ஏற்படுகின்றது. குறட்டைப் பிரச்சனை உள்ளவர்களுக்கு மூக்கின் பின்புறமும் தொண்டைக்குழியும் சேரும் இடத்தில் உள்நாக்கிலும் அதன் அருகில் உள்ள தசைகளிலும் அழற்சி ஏற்படும். இதனால் தூக்கத்தில் மூச்சு தடைப்பட்டு ஏற்படுகின்ற இந்த தசை அதிர்வு குறட்டையாக வெளியில் கேட்கின்றது.
உடல் ஆரோக்கியமாக உள்ளவர்களுக்குக் கூட இரவில் தூங்கும் போது ஆறு அல்லது ஏழு முறை 10 வினாடிகள் மூச்சு தடைப்படும். இது இயல்பாக ஏற்படக்கூடியது.
ஆனால் குறட்டைப் பிரச்சனை உள்ளவர்களுக்கு இவ்வாறு 30 அல்லது 40 முறை மூச்சு தடைப்பட வாய்ப்பு உண்டு. இதனால் மூச்சு தடைப்பட்டு, ரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவு குறைந்து விடும். இதனால் உடலில் கார்பன் டை ஆக்ஸைடு அளவு அதிகரித்துவிடும். ஆக்ஸிஜன் அளவு குறைவதால் உடலின் முக்கிய உறுப்புகளான மூளை, இதயம், சிறுநீரகம் ஆகியவற்றில் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புண்டு. நினைவுத்திறன், மூளையின் கணிக்குள் திறன் குறைவு ஆரம்பிக்கும். ஆண்மைக் குறைவு ஏற்படவும் வாய்ப்பு உண்டு.
ஆஸ்துமா, மார்புக்குழல் பிரச்சனையைக் குறட்டை தீவிரப்படுத்தும். குறட்டைப் பிரச்சனை உள்ளவர்கள், இரவில் அடிக்கடி மூச்சுத் தடைப்படும் நிலையில் திடீரென எழுந்து மீண்டும் தூங்கி விடுவார்கள். இவ்வாறு தூக்கத்தில் நடுவில் எழுந்திருப்பது அவர்களுக்கு நினைவிருக்காது. உடலின் சுயபாதுகாப்பு காரணமாகவே, மூளையில் உள்ள தூக்கத்திற்கான பகுதி செயலாக்கம் பெற்று, இவர்களைத் தட்டி எழுப்புகின்றது.
குறட்டைப் பிரச்சனை தீவிரமாகும் நிலையில் இரவில் தூக்கம் அடிக்கடி தடைபடும். இதனால் பகலில் அலுவலக நேரங்களில் இவர்களுக்குத் தவிர்க்க இயலாத தூக்கம் வரக்கூடும். இத்தகையோர் வாகன ஓட்டுநர்களானால், விபத்துக்களும் ஏற்படுவதுண்டு.
சிகரெட், மது போன்றவை குறட்டைப் பிரச்சனையைத் தீவிரப்படுத்தும் தன்மை உடையவை.
பெண்களை விட ஆண்கள் அதிகம் குறட்டை விடுகின்றார்கள். உடல் பருமன், காரணமாகவும் குறட்டைப் பிரச்சனை ஏற்படுகின்றது. குறட்டைப் பிரச்சினை உள்ளவர்களுக்கு உடலில் ஆக்ஸிஜன் அளவு 50 சதவீதத்திற்கும் கீழே இறங்க வாய்ப்பு உண்டு. இதனால் இதயத்துடிப்பு, ரத்த அழுத்தம் போன்றவற்றில் மாறுதல்கள் ஏற்படும். மாரடைப்பு நோய் ஏற்பட வாய்ப்புகள் அதிகம் உண்டு.
குறட்டைப் பிரச்சனை தீவிரமாக இல்லாவிட்டால் மாத்திரை எதுவும் தேவையில்லை. உடல் பருமனைக் குறைத்தல், புகை - மது பழக்கங்களைக் கைவிடுதல் பலன் அளிக்கக்கூடும். பிரச்சனை தீவிரமாக இருப்பின் டான்சிலுக்கு அருகில் குறட்டைக்குக் காரணமாக இருக்கும் சதையை லேசரைக் கொண்டு பஸ்பமாக்கி விடுவதே நவீன சிகிச்சை முறையாகும். இச்சிகிச்சைக்கு Laser Assisted Uvulo plasty என்று பெயர்.

No comments:

Post a Comment