Lord Siva

Lord Siva

Saturday, 31 March 2012

ஆஸ்துமாவை நினைத்து அலற வேண்டாம்..!

Posted On March 31,2012,By Muthukumar
பெண்கள் தயங்கி, தடுமாறி, மறைக்கும் நோய்களில் ஆஸ்துமா முக்கியமானது. திருமணமாகாத இளம்பெண்கள், ஆஸ்துமா இருப்பதை ஒத்துக்கொண்டால் தனக்கு திருமணமே ஆகாது என்று நினைக்கிறார்கள்.
ஏற்றுமதி தொழிலகம் ஒன்றில் வேலைபார்த்து வந்த 32 வயது பெண் ஒருவர், சில ஆண்டுகளாக ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்ட நிலையில் என்னிடம் சிகிச்சைக்கு வந்தார். தனக்கு ஆஸ்துமா இருப்பது மற்றவர்களுக்கு தெரிந்துவிடக்கூடாது என்பதற்காக அவர் திருமணமே செய்துகொள்ளவில்லை.
சிகிச்சைக்கு பிறகு குணமடைந்தார். நோயின் தாக்கம் இல்லாமல் போனதால் அவர் உடலும் பொலிவு பெற்றது. திருமணத்திற்கும் சம்மதித்துவிட்டார்.
திடீரென்று ஒருநாள் குடும்பத்தோடு வந்து என்னை சந்தித்தார். திருமணம் நடக்க இருப்பதைக்கூறி, அழைப்பிதழை கொடுத்தார். கட்டாயம் வந்து, வாழ்த்தவேண்டும் என்றார். நானும் சரி என்றேன்.
மறுநாள் அதே பெண் செல்போனில் என்னிடம் தொடர்பு கொண்டார். `திருமணத்திற்கு நிச்சயம் நீங்கள் வருவீர்களா?' என்றார். `நான் வரவேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள்தானே?' என்றேன். `ஆமாம் டாக்டர்.. ஆனால் நீங்கள் பலருக்கும் தெரிந்தவர். ஒருவேளை உங்களை பார்த்துவிட்டு என் கணவர், `ஆஸ்துமாவிற்கு சிகிச்சை அளிக்கும் இவரை உனக்கு எப்படி தெரியும்?' என்று கேட்டால், எனக்கு ஆஸ்துமா இருந்ததை நான் ஒத்துக்கொள்ள வேண்டியதாகிவிடும் அல்லவா..' என்றார். நான் அந்தப் பெண்ணின் மனநிலையை புரிந்துகொண்டு போனிலே என் வாழ்த்துக்களை தெரிவித்துவிட்டேன்.
இந்திய பெண்களில் பெரும்பாலானவர்கள் இப்படி ஆஸ்துமா நோய் இருப்பதையும், சிகிச்சை பெறுவதையும் அல்லது சிகிச்சை பெற்றதையும் மறைக்கும் மனோபாவத்தில்தான் இருக்கிறார்கள். அதற்கு யாரையும் குறை சொல்லமுடியாது. காரணம் நாம் வாழும் சமூக நிலை அப்படி!
நான் ஒரு புள்ளிவிபரத்தை சொன்னால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். இந்தியாவில் 30 சதவீதம் பேருக்குத்தான் ஆஸ்துமா பாதிப்பு இருக்கிறது. ஆனால் ஆஸ்திரேலியாவில் 40 சதவீதம் பேருக்கும், நியூசிலாந்தில் 75 சதவீதம் பேருக்கும் இந்த பாதிப்பு இருக்கிறது. ஆனால் அவர்கள் அதை ஒத்துக்கொண்டு, சிகிச்சை பெற்று, நீண்ட காலம் நிம்மதியாக வாழ்கிறார்கள். நாம்தான் மறைக்கிறோம். நம்மில் சிலர் ஆஸ்துமா என்பதை ஒத்துக்கொள்ளாமல் மற்றவர்களிடம் தனக்கு சிறுநீரக நோய், புற்றுநோய் என்றெல்லாம் கூறுகிறார்கள். அப்படி சொல்வதை தவிர்க்கவேண்டும்.
"எனக்கு மூச்சு இழுப்பு ஏற்படுகிறது. அது ஆஸ்துமாவா?" - என்று பலர் சந்தேகம் கேட்கிறார்கள். மூச்சு இழுப்பெல்லாம் ஆஸ்துமா இல்லை. மூச்சு இழுப்பு, மார்பை இறுக்கிப்பிடித்தல் போன்ற தன்மை, இருமல், மூக்கு சளி, தும்மல்.. இவைகள் தொடர்ந்தால் அது ஆஸ்துமா!
மூக்கு சளி, தும்மலோடு ஒருவர் தொடர்ந்து பத்து வருடங்களாக கஷ்டப்பட்டுக்கொண்டிருந்தால், அவரை பரிசோதித்தால், அவர் 50 சதவீதம் ஆஸ்துமா நோயாளியாக இருப்பதற்கு வாய்ப்
பிருக்கிறது.
ஒருவருக்கு ஆஸ்துமா உருவாகி, மூக்கு சளி- இருமல் மூலம் அது வெளிப்பட்டு, மூச்சு இளைப்பு தோன்றி, அப்போது இருமலோடு மூச்சுவிடும்போது பூனை சத்தம்போல் வெளிவந்தால் அதற்கு முழுமையான சிகிச்சையை உடனடியாக மேற்கொள்ளவேண்டும். இல்லாவிட்டால் அது குணப்படுத்த முடியாத `சி.ஓ.பி.டி' என்ற நிலையை எட்டிவிடும்.
நுரையீரலில் உருவாகும் இருமல், சளி போன்றவை தொடர்ந்தால், நாளடைவில் அது நுரையீரல் ரத்த குழாய்களை இறுக்கமாக்கிவிடும். அதனால் ரத்த அழுத்தம் ஏற்பட்டு, இதயத்திற்கு ரத்தம் செல்வது குறையும். அப்போது இதயம் தேவைக்கு அதிகமாக வேலை செய்யும். அதனால் களைப்பாகி, இதயம் தன் செயல்திறனை இழந்துவிடும்.
மேற்கண்ட பாதிப்பிற்கு உள்ளாகிறவர்களுக்கு கால்கள் வீங்கும். வயிற்றில் நீர்கோர்க்கும். முகமும் வீங்கி காணப்படும். குனிய முடியாமல், நிமிர முடியாமல் அவதிப்படுவார்கள். இவர் அசையவேண்டும் என்றால் துணைக்கு ஒருவர் வரவேண்டும். நெபுலைசர் போன்ற கருவியையும், மருந்துகளையும் எப்போதும் உடன் கொண்டு செல்லவேண்டியதிருக்கும். எப்போது அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்படும், எப்போது அவருக்கு இதய நெருக்கடி ஏற்படும் என்றும் சொல்ல முடியாது.
இந்த அளவுக்கு ஒருவர் ஆஸ்துமாவால் பாதிக்கப்பட என்ன காரணம்? தும்மல், சளி, இருமல், மூச்சு இளைப்பு போன்றவைகளை அவர் அலட்சியப்படுத்தியதுதான் காரணம்.
உணவில் சுகாதாரம் மிக அவசியம். தரையில் விழுந்த உணவை எடுத்து சாப்பிட்டால் `அஸ்கரியஸ்' என்ற கிருமி, அந்த உணவு வழியாக உடலுக்குள் சென்றுவிடும். அது உடலுக்குள்ளே முட்டையிட்டு, குஞ்சு பொரிக்கும். அவை மூச்சுக்குழாய் சென்று, அங்குள்ள திசுக்களை சேதமாக்கும். நச்சு பொருட்களையும் அங்கே உருவாக்கி மூச்சு குழாயை, மூச்சுவிட முடியாத அளவிற்கு சுருக்கிவிடும். அப்போது ஏற்படும் ஆஸ்துமாவை `லாப்ளர் சிண்ட்ரோம்' என்று கூறுகிறோம். இதை எளிதாக குணப்படுத்திவிடலாம்.
வேறு நோய்களுக்கு சாப்பிடும் ஒரு சில மாத்திரைகளின் ஒவ்வாமையாலும் மூச்சுகுழாய் திடீரென சுருங்கி, அதிக நீர் சுரந்து இருமல், மூச்சு இழுப்பை உருவாக்கும். இதனை, `டிரக் இன்டியூஸ் ஆஸ்துமா' என்கிறோம்.
தீவிரமான மன அழுத்தமும் ஆஸ்துமாவை உருவாக்கும். அதனை `சைக்கோஜெனிக்' ஆஸ்துமா என்கிறோம். கணவருடனான உறவு சீர்கேட்டால் மனைவிக்கு மன அழுத்தம் வரலாம். பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் மாணவிகளுக்கு படிப்பின் குறைபாடுகளாலோ, ஆசிரியர், சக மாணவ மாணவிகள் கேலி, கிண்டல், அவமானம் போன்றவைகளாலோ இத்தகைய மன அழுத்தம் ஏற்படும். அதனால் மூச்சுவிட திணறுவார்கள். அதனை நினைத்து பயந்து, தேவையற்ற மருத்துவம் செய்துவிடாத அளவிற்கு பெற்றோர் விழிப்புணர்வுடன் இருக்கவேண்டும். இதற்கு கவுன்சலிங் தேவைப்படும்.
சிலர் எல்லைமீறி அளவுக்கு அதிகமாக உடற்பயிற்சி செய்வார்கள். அப்போது ரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்கள் உடைந்து சிதறி, மெல்லிய நச்சு பொருள் உருவாகும். அது மூச்சு குழாய், நுரையீரலை பாதிக்கும். இதனை `உடற்பயிற்சியால் உருவாகும் ஆஸ்துமா'
என்கிறோம்.`ஆஸ்பர்சில்லோசிஸ்' என்ற காளான் பூச்சிகளால் ரத்தத்தில் ஈஸ்னோபில் எண்ணிக்கை அதிகரிக்கும். அதனால் ஏற்படும் நச்சுப்பொருள் நுரையீரலை பாதித்து ஆஸ்துமாவை ஏற்படுத்தும். அடிக்கடி ஜூரம், மூச்சு இழுப்பு, இருமல், மார்புவலி, எடை குறைவு, நிமோனியா போன்றவை எல்லாம் தோன்றும். இதனை `அக்யூட் ஈஸ்னோபீலிக் சிண்ட்ரோம்' என்கிறோம். இவர்களுக்கு சளியில் ரத்தம் இருக்கும். அதனால் காசநோய் என்று நினைத்துவிடக்கூடாது.
இந்த வகை ஆஸ்துமாவை ஸ்டீராய்ட் மருந்து கொடுத்து கட்டுப்படுத்தவேண்டும். நாளடைவில் நோய் கட்டுப்படும் போது ஸ்டீராய்ட் அளவை குறைக்கவேண்டும். `ஸ்டீராய்ட் பக்க விளைவை ஏற்படுத்துமே' என்பார்கள். உண்மைதான். சிலருக்குதான் பக்கவிளைவு ஏற்படும். பக்கவிளைவைவிட உயிர் முக்கியம். அதனால் நோயின்தன்மைக்கு தக்கபடி ஸ்டீராய்ட் கொடுத்துதான் ஆகவேண்டும். ஸ்டீராய்டின் பக்கவிளைவுகளை குறைக்கவும் மருந்து கொடுத்து ஆஸ்துமாவை கட்டுப்படுத்த வேண்டும்.
மக்கள் ஆஸ்துமாவை பற்றி நன்றாக புரிந்துகொண்டு, விழிப்புடன் இருந்து நோய் தாக்காமல் பார்த்துக்கொள்ளவேண்டும். ஒருவேளை நோய் தாக்கிவிட்டால் உடனே அறிகுறிகளை உணர்ந்து, பரிசோதித்து சரியான சிகிச்சை கொடுத்தால் ஆஸ்துமாவை வந்த சுவடே தெரியாமல் போக்கிவிடலாம். விழிப்போடு இருப்போம்.. ஆஸ்துமாவை வெல்வோம்!

No comments:

Post a Comment