Lord Siva

Lord Siva

Thursday, 22 March 2012

சரும நோயை நீக்கும் அழிஞ்சல்

Posted On March 22,2012,By Muthukumar


மருத்துவத் தன்மை மிகுந்த மரங்களுள் அனஞ்சி என அழைக்கப்படும் அழிஞ்சில் மரமும் ஒன்று.
இது தென்னிந்தியா, மியான்மர் போன்ற வெப்பம் மிகுந்த பகுதிகளில் அதிகம் வளர்கிறது.  இதன் விதை, பட்டை இரண்டும் மருத்துவப் பயன் கொண்டவை.
Tamil    -  Azhingil

English    - Sage-leaved alangium
Sanskrit    - Ankola
Telugu    - Ankolam
Malayalam    - Ankolam
Botanical name - Alagium salvifolium
அங்கோல வித்தை யயின்றான்முன் போலவினை
யங்கோல வித்தை யடங்குமே-யங்கோல
முண்டா மரைவாசி யுட்பலமே லாகியதை
யுண்டா மரைவாசி யுள்
- தேரையர் நளவெண்பா
பொருள் - அழிஞ்சில் வாதம், பித்தம், கபம் என்னும் முக்குற்றத்தை சீராக்குகிறது.  பித்தத்தை அதிகரிக்கும் தன்மை கொண்டது.
அழிஞ்சில் பட்டையை இடித்து தூளாக்கி நீரில் கொதிக்க வைத்து குடிநீராக்கி அருந்தி வந்தால் உடலில் உள்ள தேவையற்ற விஷநீர்கள் வெளியேறும்.
இரத்தத்தில் கலந்துள்ள தேவையற்ற ரசத் தாதுக்களை வெளியேற்றும்.
வயிற்றுப் புழுக்களை வெளியேற்றும்.  குடல் புண்ணை ஆற்றும்.
மலச்சிக்கலைப் போக்கும்.  நாள்பட்ட மலத்தை இளக்கும் தன்மை கொண்டது.
சிறுநீரைப் பெருக்கும்.  வியர்வையைத் தூண்டி சருமத்தைப் பாதுகாக்கும்.
உடல் சூட்டைத் தணிக்கும்.  நோயுற்ற உடலைத் தேற்றும்.
அழிஞ்சில் விதையைக் காயவைத்து அதன் பருப்பை அரைத்து வெள்ளாட்டுப் பாலில் கலந்து கொதிக்க வைத்து அருந்தினால் இளைத்த உடல் தேறும்.
அழிஞ்சலின் வேர்ப்பட்டையை காயவைத்து பொடியாக்கி தேங்காய் எண்ணெயில் குழைத்து மேகப்புண், சீழ் வடிகின்ற புண், சொறி, சிரங்கு மீது தடவி வர புண்கள் விரைவில் ஆறும்.
இதன் பட்டை மற்றும் வேரிலிருந்து தயாரிக்கப்படும் தைலம் மூட்டுவலி, கீழ்வாதம் போன்றவற்றிற்கு நல்ல நிவாரணம் அளிக்கும்.
பாத வெடிப்பு, பாத எரிச்சலுக்கு இத்தைலத்தைத் தடவி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
முகப்பரு, முகத்தில் சுருக்கம், முகக் கருமை இவற்றையும் போக்கும்.
அழிஞ்சில் விதையிலிருந்து எடுக்கப்படும் தைலம் குஷ்ட நோய்க்கு பயன்படுத்தப் படுகிறது.
அழிஞ்சில் மரத்தின் மருத்துவப் பயன்களைப் பற்றி அகத்தியர் 12,000 என்ற நூலில் முழுமையாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment