posted on march 22,2012,by muthukumar |
சாப்பிட உட்கார்ந்தால் நமக்கு முன்பு இருக்கும் உணவுகளை பார்த்து முதலில்
கண்கள் ஆசைப்படும், பிறகு கைகள், அதன்பிறகு நாக்கு, கடைசியாகத்தான் வயிறு!
ஆனால், உணவை பார்த்து ஆசைப்படுவதுடன் கண்களின் வேலை முடிந்துவிடும். உணவை
எடுத்து வாயில் வைத்தவுடன் கையின் வேலையும், ருசிப்பதுடன் நாக்கின்
வேலையும் முடிந்து போகிறது.
ஆனால்,
நாம் உண்ணும் உணவை செரிமானம் செய்யும் முக்கியமான, கடினமான வேலையை
வயிறுதான் செய்கிறது. வேடிக்கை என்னவென்றால், தேவைப்படும் உணவு
கிடைத்தவுடன் `இனி வேண்டாம், போதும்' என்று வயிறு மூளைக்கு சிக்னல்
செய்துவிடுகிறது. உடனே மூளை, இந்த சிக்னலை கைகள், கண்கள், நாக்கு என
எல்லாவற்றுக்கும் அனுப்பி `உணவு உண்பதை நிறுத்து' என்று ஆணையிடுகிறது.
ஆனால்,
உணவின் மீதுள்ள பேராசையால் கண்கள், கைகள், நாக்கு எல்லாம் சேர்ந்து
தேவைக்கு அதிகமான உணவுகளை தொடர்ந்து வயிற்றுக்குள்ளே தள்ளிக்கொண்டே
இருக்கின்றன. விளைவு, உடல் பருமன், அதைத்தொடர்ந்து வரும் இதய நோய்கள்,
மூளைக் குறைபாடுகள் என பல ஆரோக் கியம் சார்ந்த பிரச்சினைகள் உருவாகின்றன.
இதனால், மனிதனின் ஆயுட்காலம் வெகுவாக குறைந்துவிடுகிறது என்கிறது அறிவியல்.
இந்த
பிரச்சினைக்கு ஒரே தீர்வு உணவுக் கட்டுப்பாடுதான் என்கிறார்கள்
விஞ்ஞானிகள். அதாவது, உணவுக் கட்டுப்பாட்டை கடைபிடித்தால் நீண்ட ஆயுளுடன்
ஆரோக்கியமாக வாழலாம். ஆனால், `ஒரு நாள் விட்டு ஒரு நாள் விரதம் இருந்தால்
மூளையின் திறன் அதிகமாகிறது, உடல் எடையும் குறைகிறது. இதனால் ஆயுட்காலம்
அதிகரிக்கிறது' என்கிறது அமெரிக்காவின் `நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் ஏஜிங்'
ஆய்வு மையத்தின் சமீபத்திய ஆய்வு ஒன்று.
விலங்குகள்
மீதான முதற்கட்ட ஆய்வில், மிகவும் குறைந்தபட்ச கலோரிகளை உண்டுவந்த
விலங்குகள் சாதாரண விலங்குகளை விட இரு மடங்கு அதிக நாட்கள் வாழ்ந்தது
கண்டறியப்பட்டது. இந்த ஆய்வுக்கு பின்னர், இந்த உணவுக்கட்டுப்பாட்டு முறையை
மனிதர்கள் மீதான ஆய்விலும் பயன்படுத்தினர். ஆய்வின் இறுதியில், இந்த
உணவுக்கட்டுப்பாட்டு முறை இதயம், ரத்த நாளங்கள் மற்றும் மூளை ஆகியவற்றை
வயோதிகம் சார்ந்த நோய்களான அல்சீமர்ஸ் போன்றவற்றிலிருந்து பாதுகாக்கிறது
என்பது தெரியவந்தது.
`உணவுக்
கட்டுப்பாட்டில், ஒரு நாள் விட்டு ஒரு நாள் உணவு உண்ணும் முறையை
கடைபிடிப்பதால், உடல் செயல்பாடுகள் சார்ந்த உளைச்சல்களை, பாதிப்புகளை
சமாளிக்கும் திறன் நரம்புகளில் (நரம்பு உயிரணுக்கள்) தூண்டிவிடப்படுகிறது
என்பதை கண்டுபிடித்தோம்' என்கிறார் இந்த ஆய்வை மேற்கொண்ட மூத்த ஆய்வாளர்
பேராசிரியர் மார்க் மேட்சன்.
இந்த
ஆய்வுக்கான சோதனையில், இரு குழுக்களாக பிரிக்கப்பட்ட எலிகளில் ஒரு குழு
எலிகளுக்கு ஒரு நாள் விட்டு ஒரு நாள் உணவு கொடுக்கப்பட்டது. மற்றொரு குழு
எலிகளுக்கு தினமும் உணவு கொடுக்கப்பட்டது. இந்த இரு குழுக்களில் உள்ள
எலிகள் அனைத்துக்கும் உணவு கொடுக்கப்பட்டபோது, தேவைக்கு அதிகமான அளவுகளில்
கொடுக்கப்பட்டது. ஆனால், அவை அனைத்தும் ஒரே அளவு கலோரிகளை எடுத்துக்கொண்டன.
முக்கியமாக,
ஒரு நாள் விட்டு ஒரு நாள் உணவு கொடுக்கப்பட்ட எலிகள் நீரிழிவு நோயுடன்
தொடர்புடைய `இன்சுலின்' என்னும் ஹார்மோனை குறைவான அளவிலேயே உற்பத்தி
செய்தன. உணவுக்குப் பின்னான உடலின் சர்க்கரை அளவுகளை கட்டுப்படுத்தும்
பண்புள்ள இன்சுலின் ஹார்மோன், அதிக அளவுகளில் சுரந்தால் மூளையின் திறன்
குறைந்து போவதோடு, நீரிழிவு நோய் ஏற்படும் ஆபத்தும் அதிகமாகும் என்பது
குறிப்பிடத்தக்கது.
மேலும்,
சோதனைக்கு பின்னர் இரு குழுவின் எலிகளுடைய மூளைகளும் பரிசோதிக்கப்பட்டது.
ஒரு நாள் விட்டு ஒரு நாள் உணவு கொடுக்கப்பட்ட எலிகளின் மூளையிலுள்ள
`சினாப்ஸ்' என்னும், மூளை உயிரணுக்களுக்கு இடையிலான தொடர்புகளின்
செயல்பாடுகள் மேம்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. இந்த சினாப்ஸ், மூளையில்
புதிய உயிரணுக்களின் உற்பத்தியை அதிகரிப்பதோடு, அவற்றுக்கு உளைச்சல் அல்லது
பாதிப்புகளை தாங்கும் சக்தியையும் கொடுக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கு
முந்தைய உணவு கட்டுப்பாடு தொடர்பான ஆய்வுகளில், சில நாட்கள் உணவு உண்ணாமல்
விரதம் இருப்பதன் மூலம் புற்றுநோய் சிகிச்சையின் பலனை அதிகரிக்கலாம் என்று
கண்டறியப்பட்டது. ஆரோக்கியமான உயிரணுக்களை பட்டினி போடுவதன் மூலம் அவற்றை
`சர்வைவல் மோடு'க்கு கொண்டு செல்கிறோம். இதனால் அவற்றுக்கு புற்றுநோய்
சிகிச்சையான கீமோதெரபியினால் ஏற்படும் சேதங்களை எதிர்கொண்டு
தாக்குப்பிடிக்கும் திறன் கிடைக்கிறது என்பதே இதற்கு காரணம் என்கிறார்கள்
விஞ்ஞானிகள்.
இதிலிருந்து,
`உணவே மருந்து, மருந்தே உணவு' என்று நம் முன்னோர்கள் சொன்னது
அறிவியல்பூர்வமாக உண்மைதான் என்பது புரிகிறது. ஆக, உணவுக்கட்டுப்பாடுதான்
`ஆரோக்கியமான நீண்ட ஆயுட்காலத்தை பெறுவதற்கான சுலபமான வழி'.
No comments:
Post a Comment