Lord Siva

Lord Siva

Sunday, 18 March 2012

வந்து விட்டது `நவீன மாத்திரை’


Posted On March 18,2012,By Muthukumar
நமக்கு உடல் உழைப்பு குறைந்து, உற்றார் உறவினரை சார்ந்து வாழத் தொடங்கிவிட்டாலே பிரச்சினைதான். ஏனென்றால், `எப்போது இவரை முதியோர் இல்லத்தில் சேர்த்துவிடலாம்' என்று சிந்திப்பவர்கள் அதிகரித்துவிட்ட காலமிது. இது போதாதென்று வயோதிகத்துடன் சேர்த்து நோய்களாலும் பாதிக்கப்பட்டால் கேட்கவே வேண்டாம். வீட்டுப் பெரியவர்களின் நிலைமை மேலும் திண்டாட்டம் தான்.
காரணம், அன்றாட உணவு மட்டுமின்றி வேளாவேளைக்கு அந்த மாத்திரை, இந்த மாத்திரை என்று சில பல மாத்திரைகளை தவறாமல் சாப்பிட்டே ஆக வேண்டும். தவறினால் நிலைமை இன்னும் மோசமாகிவிடும்.
இத்தகைய பிரச்சினைகளால் அல்லல்பட்டுக் கொண்டிருக்கும் நம் தாத்தா, பாட்டிகளின் வயிற்றில் பாலை வார்க்க வந்துவிட்டது `ஸ்மார்ட் பில்' என்றழைக்கப்படும் புத்திசாலி மாத்திரை! இதற்கு ஹீலியஸ் மாத்திரை என்று பெயர்.
ஒருவர் எப்போது மாத்திரை உட்கொள்கிறார், அதன் அளவு என்ன, அடுத்த மாத்திரையை அவர் எப்போது உட்கொள்ள வேண்டும், அவருடைய இதயத்துடிப்பு மற்றும் உடல் வெப்ப அளவு என்ன என்பன போன்ற பல விவரங் களை நோயாளிகளுக்கும், மருத்துவர்களுக்கும் சேகரித்துக்கொடுக்கிறது இந்த புத்திசாலி மாத்திரை. அது மட்டு மல்லாமல், நோயாளி நன்றாக உறங்குகிறாரா, உடற்பயிற்சி செய்கிறாரா, இல்லையா? போன்ற கூடுதல் விவரங்களையும் கூட சேகரிக்கும் திறனுள்ளது இந்த மாத்திரை என்பது இதன் கூடுதல் விசேஷம்!
அமெரிக்காவின் `புரோட்டியஸ் பயோ மெடிக்கல்' என்னும் நிறுவனம், அதிபுத்திசாலித்தன மான இந்த தொழில்நுட்பத்தை உலகுக்கு பரிசளித்திருக்கிறது.
அது சரி, இந்த `ஸ்மார்ட் பில்'லை பயன்படுத்துவது எப்படி?
நோய்களுக்கான மாத்திரைகளுடன் சேர்த்து, கரையும் தன்மையுள்ள மைக்ரோ சிப் அல்லது சென்சாருடைய ஒரு மாத்திரையையும் நோயாளியை உட்கொள்ள வேண்டும். மாத்திரைகளுடன் வயிற்றுக்குள் செல்லும் இந்த மைக்ரோ சிப், வயிற்றிலுள்ள அமிலங்களால் கரைக்கப்படும்போது, அதிலிருந்து உருவாகும் டிஜிட்டல் சிக்னல் கையில் அல்லது தோளில் ஒட்டப்பட்டிருக்கும் ஒரு பட்டைக்கு அனுப்பப்படுகிறது.
வயிற்றிலிருந்து பட்டைக்கு வரும் டிஜிட்டல் சிக்னல்கள் வாசிக்கக்கூடிய விவரங்களாக டீகோட் செய்யப்படுகின்றன. பின்னர் இந்த விவரங்களை நோயாளிகளும், மருத்துவர்களும் தங்கள் கம்ப்யூட்டர் அல்லது ஸ்மார்ட் போனில் டவுன்லோடு செய்துகொண்டு தேவைக்கேற்ப பயன்படுத்திக்கொள்ளலாம்.
பிரிட்டனில் விரைவில் விற்பனைக்கு வரவிருக்கும் இந்த ஹீலியஸ் மாத்திரை, இதயக் கோளாறுகள் மற்றும் நீரிழிவு நோயாளிகளுக்கு பிரத்தியேகமாக அளிக்கப்பட இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஏனென்றால், பிற நோயாளிகளைக் காட்டிலும் இவ்விரு வகையான நோயாளிகளும் விதவிதமான பல மாத்திரை மறக்காமல் உட்கொள்ள வேண்டியவர்கள்.
இதய மற்றும் நீரிழிவுக்கான மாத்திரைகளுடன் சேர்த்து, 5 மாத்திரைகளை உடைய அட்டையில் ஹீலியஸ் மாத்திரைகள் கிடைக்கும். அவற்றின்மேல் அரிசி அளவுடைய ஒரு சென்சார் ஒட்டப்பட்டிருக்கும்.
முக்கியமாக, 5 அல்லது அதற்கும் மேற்பட்ட வித்தியாசமான மாத்திரைகளை, மூன்று வேளைகளும் மறக்காமல் உட்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் வயதான நோயாளிகளுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று கூறப்படுகிறது. வயதான நோயாளிகள், ஞாபக மறதியால் உட்கொள்ளத் தவறும் மாத்திரைகளின் மதிப்பு 400 மில்லியன் பவுண்டு (சுமார் 3ஆயிரம் கோடி) என்று கூறப்படுகிறது. இதனால் 50 சதவீதம் நோயாளிகளுக்கு முழுமையான சிகிச்சை பலன் கிடைப்பதில்லை என்கிறது ஒரு புள்ளி விவரம்.
இத்தகைய பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்போகும் ஹீலியஸ் மாத்திரையை, வருகிற செப்டம்பர் மாதம் முதல் விற்பனை செய்ய இருக்கிறது பிரிட்டனின் லாய்டு பார்மசி நிறுவனம்.

No comments:

Post a Comment