Lord Siva

Lord Siva

Friday 2 December 2011

சர்வாங்க ஆசனம்

Posted On 02,2011,By Muthukumar
ஒட்டு மொத்த உடலின் பாகங்களுக்கும் பலம் தரும் சர்வாங்க ஆசனம் பற்றி பார்க்கலாம். பொதுவாக ஆசனங்களை ஒரு குறிப்பிட்ட வரிசைக்கிரமத்தில் தான் செய்ய வேண்டும். உதாரணமாக சர்வாங்க ஆசனத்தை போன்றே மற்றொரு ஆசனமான சிரசானத்தை செய்து முடித்த பின் கண்டிப்பாக ஏகபாத ஆசனம் என்ற மற்றொரு ஆசனத்தை தொடர்ந்து செய்து விட்டு தான் மற்ற ஆசனங்களை செய்ய வேண்டும்.
அதாவது சிரசானம் செய்யும் போது உடல் தலைகீழான நிலையில் இருக்கும். தலையை தரையில் ஊன்றிய நிலையில் இருப்பதால் இரத்தம் படுவேகமாக தலைப்பகுதியில் பாய்ந்தபடி இருக்கும். இப்படி நிலையில் சிரசில் தேங்கிய இரத்தத்தை உடனடியாக கீழே இறக்க உதவுவது ஏகபாத ஆசனம் மட்டுமே. எனவே, சிரசானத்தை செய்தால் அதற்கு மாற்று ஆசனமாக அடுத்து செய்ய வேண்டியது ஏகபாத ஆசனம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
இது போன்று எந்த ஆசனத்திற்கு எது மாற்று ஆசனம் என்பதை தொடர்ந்து பார்க்கலாம். இப்போது சர்வாங்க ஆசனம் செய்யும் முறை பற்றி இங்கு பார்க்கலாம்.
மிகச்சிறந்த யோககுருவான யோகி.என்.ராஜன் தனது நூலில் சர்வாங்க ஆசனத்தை பற்றி இவ்வாறு குறிப்பிடுகிறார். "ஆசனங்களுள் சிறந்தன, கண்கள் போன்றன இரண்டு. ஒன்று சிரசானம், மற்றொன்று சர்வாங்க ஆசனம். இந்த ஆசனத்தின் பெயரிலிருந்தே எல்லா அங்கங்களும் இயங்குவது போல் தோன்றும். உண்மையில் இந்த ஆசனத்தில் தலை, கழுத்து, இரண்டு தோள்பட்டைகள், இரண்டு கைகளுக்கு தான் வேலை. மற்ற அங்கங்களுக்கு சிறிது கூட வேலையில்லை. அப்படி இருக்க, சர்வாங்க ஆசனம் என்ற பெயர் எப்படி வந்தது? சர்வ அங்கங்களையும் இயக்குவது தைராய்டு கோளம் தான். இது மிக முக்கிய வாய்ந்த ஒரு சுரப்பி. இந்த கோளம் கழுத்தில், அதாவது குரல்வளை என்று சொல்லக்கூடிய இடத்தில் சிறிய தாமரை இதழ் போன்று இரண்டு பக்கங்களிலும் அமைந்துள்ளது. இந்த ஆசனத்தில் கழுத்துத் தான் இரத்தம் தேங்கும் இடம். இந்த இடத்தில் தான் தைராய்டு இருக்கிறது. இரத்தம் நன்கு தேங்குவதால் தைராய்டு என்னும் கோளத்திற்கு இரத்தம் பாய்ச்சப்பட்டு நன்கு பலமடைந்து மற்ற உறுப்புகளை அது நன்கு இயக்குவதால் இது சர்வாங்க ஆசனம் என்று பெயர் வந்தது. "
கிழவன் குமரனாகும் வித்தை:
இந்த உலகில் இளமையை விரும்பாத எந்த கிழவனும் இருக்க முடியாது. அந்த இளமையை பெற எத்தனையோ முறைகள் உள்ளன. அமெரிக்காவில் டாக்டர் வாரனப் என்பவர் கிழவன் குமரனாகும் வித்தையை கண்டுபிடித்தார். அதாவது குரங்கின் தைராய்டை எடுத்து மனிதனுக்கு பொருத்தி விடுவது. இதன் மூலம் மனிதன் இளமையை பெற முடியும் என்று நம்பினார். அப்படி அறுவை சிகிச்சையை மேற்கொள்ளவும் முயற்சி செய்ததாக தெரிகிறது. இப்படி தைராய்டு பொருத்தப்பட்ட மனிதனுக்கு வயதாகும் நிலை தள்ளி போனாலும், குரங்கின் தைராய்டு பொறுத்தப்பட்ட மனிதனின் சுபாவமும் குரங்கு போலவே மாறிப்போனதாக ஆய்வுகள் சொல்கின்றன.
ஆனால் இப்படி எந்த அறுவை சிகிச்சையும் இல்லாமல் மனிதன் எப்போதும் இளமையாகவே இருக்க ஒரு வழி உள்ளதென்றால், அது சர்வாங்க ஆசனத்தின் மூலம் தைராய்டு சுரப்பியை நன்றாக இயங்க செய்து எப்போதும் இளமை தோற்றத்தை தக்க வைத்துக் கொள்வது தான். இளமை நீடித்து நிற்க காரணம், தைராய்டு சுரப்பி தான். அந்த தைராய்டை மிகுந்த ஆரோக்கியமாக வைப்பது சர்வாங்க ஆசனம். இந்த சர்வாங்க ஆசனத்தை செய்யும் முறை பற்றி இங்கு பார்க்கலாம்.
சர்வாங்க ஆசனம்:
விரிப்பில் மல்லாந்து படுக்கவும். இரண்டு கைகளும் உடலை ஒட்டிய நிலையில் இருக்கவும். இரண்டு கால்களையும் சேர்த்து வைத்துக் கொள்ளவும். மூச்சைப் பிடித்து இரண்டு கால்களையும் அப்படியே மேலே தூக்கவும். இத்துடன் இடுப்பையும் தூக்கி முழு உடலும் மேல் நோக்கிய நிலையில் இருக்கும் படி வரவும். (படத்தில் உள்ள படி)பிறகு இரண்டு கைகளையும் மடக்கி இடுப்புக்கு கீழே பிடித்து, உடலை நேராய் நிமிர்த்தவும். தலை முன்பக்கம் குனிந்து முகவாய்க்கட்டை மார்பில் அழுந்தும்படி பார்த்துக் கொள்ளவும். மூச்சை சாதாரணமாய் விடவும் வாங்கவும் செய்யவும்.
முதுகும் கால்களும் வளையாமல் நேராய் சேராய் இருக்க வேண்டும். கால்களை விறைப்பாய் வைத்துக் கொள்ளக் கூடாது. மிக தளர்த்தியாக தொய்யும் படி விட்டு விடவும். வாய் மூடியிருக்க வேண்டும். கைகளின் மேல் சரீர பாரம் முழுவதையும் போட்டு பிடிக்க கூடாது. கைகள் உடலை லேசாய் தாங்கியிருக்க வேண்டும். ஒவ்வொவருக்கும் பலம் இருக்கும் வரை இந்த ஆசனத்தில் இருந்து விட்டு பிறகு ஆசனததை கலைக்கலாம். இறங்கும் போது இடுப்பின் அடியில் தாங்கும் கைகளை தளர்த்தி கைகளின் மேலேயே உடலை மெதுவாக நழுவ விட்டு கொண்டே வந்து கால்களை தரையில் அமர்த்தவும். பிறகு கைகளை பக்கங்களில் நீட்டி வைத்து இளைப்பாறவும்.
மற்ற பயிற்சிகளை செய்து உடலை தன்வசத்தில் வைத்திருப்பவர்களுக்கு இந்த சர்வாங்கசனத்தை செய்வது சுலபமாக வரும். எந்த வித உடற்பயிற்சியும், யோகாசன பயிற்சியும் செய்யாதவர்களுக்கு இது சற்று கடினமாக இருக்கும். சிலருக்கு இரண்டு கால்களை மட்டும் தான் தூக்க வரும். இடுப்பை தூக்க முடியாத படி சிரமப்படுவார்கள். ஆனாலும் விடாமுயற்சியுடன் கைகளை நன்கு ஊன்றி, முடிந்த மட்டும் உடலைத் தூக்க முயற்சி செய்ய வேண்டும். அப்படியும் தூக்க முடியவில்லையானால், இடுப்பை பாதி தூக்கிய நிலையில் கால்களை உயர்த்திய படி சற்று நேரம் இருக்க முயற்சி செய்யுவும். கால்களை தரையில் வைத்து விடக்கூடாது. கைகளை இடுப்புக்கு அடியில் கொடுத்து தாங்கிக் கொள்ளும் போது கால்கள் தரைக்கு வராது.
இது போல் 5 முதல் 6 தடவைகள் வரை பயிற்சி செய்தால் கூட நல்ல பலன் உண்டு. இந்த ஆசனம் பலருக்கும் தொடக்க கட்டத்தில் உடனடியாக செய்ய வராது. ஆனால் நாளாவட்டத்தில் சுலபமாக செய்ய கற்றுக் கொண்டு விடலாம். சிலர் உடல் முழுவதையும் தூக்கி முழு ஆசன நிலையையும் எட்டி விடுவார்கள். ஆனால் முகவாய்க்கட்டையானது மார்பில் இடிக்கும் அளவு செய்ய வராது. சிலர் வாயை ஆ வென்று திறந்து முகவாய்க்கட்டையை வைத்து மார்பை இடிக்க முயலுவார்கள். ஆனால் அப்படி செய்வது கூடாது. இந்த ஆசனம் செய்யும் போது வாய் மூடியே இருக்க வேண்டும்.
இப்படி முகவாய்க் கட்டை இடிக்க வராத நிலை இருப்பவர்கள், கைகளை இடுப்புக்கு அடியில் இன்னும் பலமாய் கொடுத்து முதுகை சரியாக நிமிர்த்தினால் முகவாய்க்கட்டை மார்பில் இடித்து ஜாலந்திர பந்தம் ஏற்படும்.
இந்த ஆசனத்தில் கால்கள் தலைக்கு நேராய் இருக்க வேண்டியது முறையானாலும், சிலருக்கு அப்படி நேராய் வைத்திருக்க வேண்டுமானால், சிரமமிருக்கும். அப்படி வைப்பதால், கைகள் அதிக பலத்துடன் இடுப்பை தாங்கிப் பிடிக்க வேண்டியதிருக்கும். இதனால் சிலருக்கு கைகள் மரத்து போக வாய்ப்புண்டு. எனவே கைகள் மீது உடல் எடை முழுவதையும் போட்டு விடாமல், லேசாய் பிடித்துக் கொள்ள வேண்டும். அப்படி செய்தால் இந்த குறைகள் எல்லாம் ஏற்படாது.
சிலர் கால்களை விரைப்பாய் வைத்துக் கொள்வார்கள். அப்படி வைத்துக் கொண்டால், கால்களுக்கு அதிக ரத்தம் செல்லும். அதனால் நமது மனமும் அந்த இடத்துக்கே செல்லும். நமக்கு தைராய்டு கோளத்துக்கே அதிக இரத்தம் பாய வேண்டியதால், நமது மனத்தை தைராய்டு கோளத்தினிடமே செலுத்த முயற்சிக்க வேண்டும். முதலில் இந்த ஆசனம் செய்பவர்களுக்கு முதுகு, கழுத்து முதலியவை வலிக்கும். சில நாட்களில் வலி மறைந்து விடும்.
நீண்ட நேரம் செய்பவர்களுக்கு முழங்கை, கழுத்துப் பின்புறம் முதலிய இடங்களில் காய்ப்பு கட்டி விடும். எனவே, முடிந்த வரை இந்த பயிற்சியை நீண்ட கால அளவில் பயிற்சி எடுத்து கூட செய்ய கற்றுக் கொள்ள வேண்டும்.
பலன்கள்:
உயிர்க்கோளமாகிய தைராய்டு இந்த ஆசனத்தால் நன்றாக பலன் பெறுகிறது. இதனால் சகல நோய்களும் விலகுகிறது. நரம்பு பலகீனம், ரத்தமின்மை, சோம்பல், தலைவலி, அசீரணம், மலச்சிக்கல், மூலம், வயிற்றுவலி, குன்மம், மூத்திரக் கோளாறுகள், மார்பு வலி, இருதய பலவீனம், ரத்தக் கொதிப்பு, அப்பெண்டிசிடிஸ், சகலவாதங்கள், காலில் குத்தல், பெரும் வியாதி, காலின் கணுக்களில் நீர் தங்குதல், மலேரியா, மற்ற ஜுரங்கள், மலட்டு தனம், தைமஸ் கிளாண்ட், வீர்யமின்மை, மலட்டு தனம், கண்டமாலை, ஆல்புமின், சர்க்கரை வியாதி கோளாறுகள், வயிற்று போக்கு, மனநிலை கோளாறுகள், வலிப்பு நோய்கள் உள்பட பல வியாதிகள் தீரும்.
குறிப்பு:
இந்த ஆசனத்தை கர்ப்பிணி பெண்கள் மூன்று மாதங்கள் வரை செய்யலாம். இந்த ஆசனம் செய்யும் போது இருமல், தும்மல், கொட்டாவி முதலியன வந்தால் அல்லது வரும் போல் இருந்தால் உடனே சர்வாங்கசனத்திலிருந்து இறங்கி பின்பு தான் இருமவோ, தும்மவோ செய்ய வேண்டும். ஆசனத்தில் இருக்கும் போதே செய்தால் மார்பு பிடிப்பு, கழுத்து சுளுக்கு, காதுக் கோளாறுகள் போன்றவை உண்டாகும். ஆசனத்தில் இருக்கும் போது எச்சில் விழுங்குதல் கூடாது. ஆசனத்தை கலைத்த பின்பு தான் எச்சில் விழுங்க வேண்டும்.
யோக ஆசனங்களை செய்பவர்கள் சில முத்திரைகளை கற்றுக் கொள்வது சிறந்தது என்று சொல்லி வருகிறோம். ஆசனத்தில் இருந்து தியானிக்கும் போது முத்திரைகளையும் கையாளுவதால் குறிப்பிடத்தக்க பலன்கள் உண்டு. இதில் இங்கு தியான முத்திரை குறித்து பார்க்கலாம். இந்த தியான முத்திரை  என்பது ஆட்காட்டி விரலையும், பெருவிரலையும் அதிக அழுத்தம் தராமல் சீராக அழுத்திய நிலையில் இருப்பது.
இந்த முத்திரையால் மூளையின் சக்தி அதிகரிக்கும். நினைவாற்றல், அறிவாற்றல் வளரும். படபடப்பு, மனதை ஒரு நிலைப்படுத்த முடியாமல் போதல், தூக்கமின்மை போன்ற பிரச்சினைகள் தீரும்.
தொடர்வோம்.

No comments:

Post a Comment