Lord Siva

Lord Siva

Tuesday, 17 April 2012

மாரடைப்பைத் தடுக்கும் ரத்தப் பரிசோதனை

Posted On April 17,2012,By Muthukumar
நெஞ்சுப் பகுதியில் லேசாக ஒரு வலி வந்துவிட்டால் போதும். இது மாரடைப்பின் அறிகுறியாக இருக்குமோ, இதயத்தில் ஏதாவது பெரிய பிரச்சினை இருக்குமோ, இப்படி இருக்குமோ இல்லை அப்படி இருக்குமோ என்று உடல் முழுவதும் ஒரு கிலி பரவத் தொடங்கிவிடும். இந்தக் கிலியில் நெஞ்சு பகுதியில் வந்த வலி கூட மறைந்து போயிருக்கும். ஆனால், அந்த சிறிய வலி ஏற்படுத்திய, உளவியல் ரீதியிலான பாதிப்பின் அதிர்வுகள் மட்டும் தொடர்கதை ஆகிவிடும்.
இதயத்தில் ஒரு சிறு வலி வந்தால்கூட `ஐயய்யோ நமக்கு மாரடைப்பு வந்துவிடுமோ' என்ற பயத்தில் பதறிப்போகும் பலருக்கும் நிம்மதி தந்துள்ளது அமெரிக்காவின் ஸ்கிரிப்ஸ் டிரான்ஸ்லேஷனல் சயன்ஸ் இன்ஸ்டிடியூட்டில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்று.
`ஒருவருக்கு மாரடைப்பு ஏற்படும் ஆபத்து இருக்கிறதா?' என்பதை கண்டறிந்து சொல்லிவிடும் ஒரு புதிய ரத்தப் பரிசோதனையை இவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
இதய மருத்துவத்துறையின் லட்சியமே மாரடைப்பு வருமுன் அறிந்து மரணத்தி
லிருந்து மனித உயிர்களை மீட்டுக் கொடுப்பதுதான். அந்த அதிசயத்தை அழகாக செய்து முடிக்கிறது இந்த ரத்தப் பரிசோதனை என்று சிலாகிக்கிறார் இந்த ஆய்வினை மேற்கொண்ட மூத்த ஆய்வாளர்களுள் ஒருவரான மருத்துவர் எரிக் டோபால். மேலும், இந்தக் கண்டுபிடிப்பு, இதய மருத்துவத்தின் எதிர்காலத்தையே மாற்றியமைக்க போகிறது என்கிறார் டோபால்.
அது சரி, இதய நோயாளிகளுக்கு மறுவாழ்வு அளிக்கும் இந்த அதிசய பரிசோதனை எப்படிச் சாத்தியமானது?
மாரடைப்பால் பாதிக்கப்பட்டு, அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட சுமார் 50 இதய நோயாளிகளின் ரத்தத்தில் உள்ள `சுழலும் எண்டோதீலியல் உயிரணுக்கள்' (circulating endothelial cells/CEC) உள்ளிட்ட 5 வெவ்வேறு உயிரணுக்கள் ஆய்வு செய்யப்பட்டன.
இந்த ஆய்வின் முடிவில், ஆரோக்கியமானவர்களுடன் ஒப்பிடுகையில் மாரடைப்பால் பாதிக்கப்பட்டவர்களின் ரத்தத்தில் உள்ள சுழலும் எண்டோதீலியல் உயிரணுக்களின் எண்ணிக்கை, வடிவம் மற்றும் இன்னபிற பண்பு நலன்கள் என அனைத்திலும் பல மாற்றங்கள் இருந்தது கண்டறியப்பட்டது. முக்கியமாக, சுழலும் எண்டோதீலியல் உயிரணுக்கள் அளவில் மிகவும் பெரியதாகவும், பல நியூக்லியஸ்களுடனும் இருந்தது குறிப்பிடத்தக்கது.
ரத்த ஓட்டத்தில் சுழன்று கொண்டிருக்கும், மிகவும் அரிதான, ரத்த நாளங்களின் தோலை உருவாக்கும் உயிரணுக்களையே சுழலும் எண்டோதீலியல் உயிரணுக்கள் என்கிறார்கள். `வாஸ்குலோ ஜெனிசிஸ்' என்றழைக்கப்படும் ரத்த நாளங்களின் வளர்ச்சிக்கு இந்த உயிரணுக்கள்தான் அடிப்படை என்பது குறிப்பிடத்தக்கது. இவை மாரடைப்பால் சேதமடைந்த ரத்த நாளங்களுடைய தோலின் மறுவளர்ச்சியை தூண்டி இதயத்தை மறுபடியும் சீராக செயல்பட வைக்கின்றன என்கிறது இதய அறிவியல்.
ஆக, இந்த சுழலும் எண்டோதீலியல் உயிரணுக்கள் எண்ணிக்கையில் குறைந்தாலோ அல்லது அவற்றின் வடிவம் மற்றும் செயல்பாட்டில் தவறான மாற்றங்கள் நிகழ்ந்தாலோ, மாரடைப்பு அல்லது இன்னபிற காரணங்களால் சேதமடையும் ரத்த நாளங்களின் மறுவளர்ச்சி பாதிக்கப்படுகிறது. இதனால் (மறுபடியும்) மாரடைப்பு ஏற்படும்போது மரணம் நிகழ்கிறது.
ஆனால், சுழலும் எண்டோதீலியல் உயிரணுக்களின் தன்மையை முன்னரே பரிசோதித்துக் கண்டறிவதன் மூலம், அதற்கான தகுந்த சிகிச்சைகளை மேற்கொண்டு, வரவிருக்கும் மாரடைப்பினை தவிர்க்க முடியும். அதைத்தான் இந்த புதிய ரத்தப் பரிசோதனை செய்கிறது என்கிறார்கள் மருத்துவர்கள். அதனாலேயே சுழலும் எண்டோதீலியல் உயிரணுக்களை வரவிருக்கும் மாரடைப்பினை கண்டறியும் `பயோ மார்க்கர்' அல்லது `அடையாளம் காட்டிகள்' என்கிறார்கள்.
வருடத்துக்கு 25 லட்சம் அமெரிக்கர்கள் மற்றும் பல லட்சம் இதர உலக நாட்டவர்களின் உயிர்களை பலி கொண்டுவரும் மாரடைப்பினை வருமுன் கண்டறிந்து, தக்க சமயத்தில் சரியான சிகிச்சைகளை மேற்கொள்ள உதவும் இந்த அதிசய பரிசோதனை எவ்வளவு இன்றியமையாத ஒன்று என்பது சொல்லி புரியவேண்டியதில்லை.
இந்த ரத்தப் பரிசோதனை, இன்னும் சில மேலதிக பரிசோதனைகளுக்கு பின்னர் மக்கள் பயன்பாட்டுக்கு தயாராகும் என்கிறார்கள் இதன் கண்டுபிடிப்பாளர்கள். இந்த பரிசோதனை மக்கள் பயன்பாட்டுக்கு வர இன்னும் ஓரிரண்டு வருடங்கள் பிடிக்கும் என்கிறார் இதனை கண்டறிந்த மருத்துவக் குழுவின் தலைமை மருத்துவர்களுள் ஒருவரான மருத்துவர் ராகவா கொல்லப்புடி.

ரத்த அழுத்தத்திற்கான சிகிச்சையில் புரட்சி

Posted On April 17,2012,By Muthukumar
ரத்த அழுத்தம் எந்த கட்டத்தில் இருந்தாலும், அதற்கான சிகிச்சை இருக்கிறதென்றாலும், இந்த பாதிப்பை தெரிந்து கொண்ட உடனே, சிகிச்சை எடுத்துக் கொண்டால், பல தேவையற்ற விளைவுகளையும், சிக்கலையும் தவிர்க்கலாம். உலக மக்கள் தொகையில் பாதிபேர், ரத்த அழுத்த நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இப்போது, 22 - 30 வயது நிரம்பியவர்களுக்குக் கூட, உயர் ரத்த அழுத்தம் இருப்பதை காணமுடிகிறது. குறிப்பாக, ஐ.டி., துறையிலுள்ள இளைஞர்கள், அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இதில், பெண்களும் அடங்குவர். கிடைத்த நேரத்தில், தகாத உணவு சாப்பிடும் பழக்கத்தால் இந்த நிலை.
இந்த ரத்த அழுத்த நோயின் விளைவுகள், வயது ஏற ஏற, அதிகமாகி கொண்டே வருகிறது. "ஸ்டிரோக்' என்ற, மூளையில் ரத்த கட்டி ஏற்பட்டு, தலை சுற்றல், மயக்கம், உடலின் பாதி செயலிழப்பு, இதய ரத்த குழாய் அடைப்பினால் ஏற்படும் மாரடைப்பு, மார்புவலி, மூச்சு இரைப்பு, படபடப்பு, இதய வீக்கம், இதயச் செயலிழப்பு, சிறுநீரக பாதிப்பு போன்றவை, உயர் ரத்த அழுத்தத்தின், தகாத விளைவுகள். இதனால், குடும்ப அமைதி இன்மை, பொருளாதார சீரழிவு, மருத்துவ செலவு போன்றவை ஏற்படுகின்றன. இந்த ரத்த அழுத்தத்தினால், ஸ்டிரோக் ஏற்பட்டு, பக்கவாதம் வந்து தடுமாறும் முதியோருக்கு, பராமரிப்புக்கான மருத்துவச் செலவு ஏற்படுகிறது. மேலும், இவர்களை கவனிக்க, தனிநபர் தேவை. இதனால், குடும்பத்தில் பொருளாதார சிக்கல் ஏற்படுகிறது. ஆக, முதியோர் வாழ்க்கை நரகமாகிறது. இந்த பாதிப்போடு, இதய நோயும் ஏற்பட்டு விட்டால், இந்த முதியவரை, குடும்பத்தின் மற்ற உறுப்பினர்கள், பாரமாக கருதுகின்றனர். இன்றைய இளைய சமூகத்தினரிடையே, முதியோர், வீட்டின் மூலையில் கிடக்கும் குப்பை போல் ஆகின்றனர்.
1ஏன் உயர் ரத்த அழுத்தம் குறைவதில்லை?
நவீன வாழ்க்கையின் வேகத்தில், பரபரப்பான நிலையற்ற வேலை, ஊதிய பற்றாக்குறை, ஆகியவற்றால், மன அழுத்தம், அடிக்கடி ஓய்வில்லாமல் பிரயாணம் செய்வது, சரியாக மருந்து, மாத்திரைகள் சாப்பிடாமல் இருப்பது, ஆகிய காரணங்களால், ரத்த அழுத்தம் குறையாத நிலை ஏற்படுகிறது. தனி மனித ஒழுக்கத்தை கடைப்பிடிக்காதது தான், இதற்கு காரணம். உடற்பயிற்சி, நடைபயிற்சி, கடுமையான உணவு கட்டுப்பாடு இல்லாததும், முக்கிய காரணம்.
2சிக்கலான உயர் ரத்த அழுத்தத்தை எப்படி கண்டறிவது?
பல ஆண்டுகளாக இருக்கும் ரத்த அழுத்தம், மேற்கூறிய காரணங்களால், மருந்துகளால் குறைக்க முடியாத நிலை ஏற்பட்டு, சிக்கலாகி விடுகிறது. ஒரு மாத்திரையின் அளவை, இரண்டு, மூன்று, நான்கு என்று கூட்டிய பிறகும், ரத்த அழுத்தம் குறைந்து, 130 / 90க்குள் வரவில்லை எனில், இது, சிக்கலான உயர் ரத்த அழுத்தம் என்று அழைக்கப்படுகிறது. விருதாசலத்திலிருந்து வரும், 58 வயதுள்ள என் நோயாளி ஒருவருக்கு, ரத்த அழுத்தம், 180/140க்கு குறைவதில்லை. இவருக்கு, எல்லாவித மருந்து மாத்திரைகள் கொடுத்தும் பலனில்லை. ஆஞ்சியோ கிராம் செய்யும் போது, மருந்து உள்ளே செலுத்திய நேரத்தில் மட்டும், ரத்த அழுத்தம் குறைந்தது. அதன் பின், அழுத்தம் பழையபடி, "எகிறி' விட்டது.
3ரத்த அழுத்தத்தில் சிறுநீரக பங்கு என்ன?
சில சமயங்களில், சிறுநீரகத்தில் ரெனின் என்ற, நொதி வெளி வருகிறது. இது, ராஸ் என்ற செயல்முறையை தூண்டுகிறது. இதனால், மூளையிலுள்ள நரம்பு மண்டலத்தை இயக்கி, ரத்த நாளத்தை சுருங்க வைத்து, உயர் ரத்த அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. இந்த ரத்தநாள சுருக்கத்தினால் ஏற்படும் பின்விளைவு தான், ரத்த அழுத்தம். ஆக, முக்கிய காரணி சிறுநீரகத்தின் ரத்த நாளத்திலுள்ள, சிம்பதிட்டிக் நரம்புகள் தான். இதன் இயக்கத்தால் தான், ரத்த அழுத்தம் ஏற்படுகிறது. இதற்குத் தீர்வு, "ரீனல் நெர்வ்
டீனெர்வேஷன்' என்ற சிகிச்சை முறை.
4"ரீனல் நெர்வ் டீனெர்வேஷன்' இந்தியாவுக்கு வருமா?
முடியாது. காரணம், இந்த முறைக்கு செலவு அதிகம். அரசும் இதை அறிமுகப்படுத்த, ஏகப்பட்ட செலவாகும். இந்தியாவிலுள்ள கார்ப்பரேட், டிரஸ்ட் மருத்துவமனைகளுக்கு இது வர முடியும். இந்த சிகிச்சைமுறை, ஆய்வுகளில் உள்ளது.
இந்த சிகிச்சையின் பலன், எப்படி, எத்தனை நாள் இருக்கும், திரும்பவும் உயர் ரத்த அழுத்தம் வருமா, நரம்பு உயிர் பெற்று எழுந்து, ரத்த அழுத்தம் மீண்டும் திரும்புமா என்பது போன்ற, ஆயிரக்கணக்கான கேள்விகளுக்கு பதில் இல்லை!
பொறுத்திருந்து பார்ப்போம்.
"ரீனல் நெர்வ் டீனெர்வேஷன்' சிகிச்சை முறை
இது, 2011ல், பாரீசில் நடந்த, ஐரோப்பிய இதய நோய் கழகத்து ஆண்டு மாநாட்டு துவக்க உரையாக இருந்தது. சிறுநீரகத்திற்கு ரத்தத்தை எடுத்துச் செல்லும் ரத்த நாளத்தின் உட்சுவரில், இந்த "ரீனல்' நரம்புகள், வேர்கள் போல் படர்ந்திருக்கும். இந்த நரம்புகளின் இயக்கத்தால் தான், உயர் ரத்த அழுத்தம் ஏற்படுகிறது. இந்த நரம்புகளை செயல் இழக்க செய்ய வேண்டும்.
எப்படி?
தொடைவழியாக, ரத்த குழாய் மூலம், ஒரு பிளாஸ்டிக் குழாயை உள்நோக்கி ஊடுருவி, சிறுநீரக ரத்த நாளத்தினுள் குழாயை செலுத்தி, இந்த சிகிச்சை முறைக்கு என, தயார் செய்யப்பட்ட கத்தீட்டரையும், உட்செலுத்த வேண்டும். குழாயின் முனையில், ஆர்.எப்., தகடு இருக்கும். இதை, ரீனல் ரத்த நாளத்தின் உட்பகுதியில் செலுத்தி, ஆர்.எப்., மெல்லிய பாட்டரி மூலம் இயக்க வேண்டும். இந்த அதிர்வு அலைகளால், நுண் நரம்புகள் துண்டிக்கப்பட்டு செயலிழக்கின்றன. இதனால், ரத்த அழுத்தம் குறைகிறது.

Friday, 13 April 2012

பன்றிக் காய்ச்சல் -தடுப்பூசி அவசியமா

Posted On April 13,2012,By Muthukumar
"பன்றிக் காய்ச்சல் தொடர்பான சுகாதாரத் துறை அமைச்சரின் அறிவிப்பும்; காய்ச்சலை பரப்பும் வைரஸ் பற்றிய தகவலும், பன்றிக் காய்ச்சல் தடுப்பூசி குறித்த குழப்பத்தை, மக்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.தமிழகத்தில், பன்றிக் காய்ச்சலின் தாக்கம் அதிகம் உள்ள, சென்னை மற்றும் கோவை மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள், தடுப்பூசி விஷயத்தில் குழப்பமான மனநிலையில் உள்ளதாகத் தெரிகிறது. அவசியமில்லை:"தொற்று நோய் அளவுக்கு, பன்றிக் காய்ச்சலின் தாக்கம் இல்லாததால், தடுப்பூசி தேவையில்லை' என, சுகாதாரத் துறை அமைச்சர் கூறுகிறார். ஆனால், காய்ச்சலால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை, நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.மேலும், காய்ச்சலை பரப்பும், "எச்1 என்1' வைரஸ், பருவ நிலைக்கு ஏற்ப, தன்னை
தகவமைத்துக் கொள்ளும்; பன்றிக் காய்ச்சல் தடுப்பூசி, ஓராண்டில் காலாவதி ஆகிவிடும் போன்ற தகவல்கள், தடுப்பூசி தொடர்பான குழப்பத்தை அதிகரித்துள்ளது.
காலாவதி தேதி...:இதுகுறித்து, தடுப்பு மருத்துவப் பிரிவைச் சேர்ந்த நிபுணர் ஒருவர் கூறியதாவது: பன்றிக் காய்ச்சலுக்கான தடுப்பூசி, ஓராண்டிற்குள் காலாவதி ஆகும்படி இருந்தால், அதில் பயன்படுத்தப்படும் வேதிப் பொருட்களின் இயல்பும் காரணமாக இருக்கலாம். "எச்1 என்1' வைரஸ், உருமாற்றம் பெற்று விட்டதாக, உலக சுகாதார நிறுவனம், இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.எனவே, கடந்த முறை தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் (ஓராண்டிற்கு முன்), தற்போது மீண்டும் போட வேண்டிய அவசியம் இல்லை. மற்றவர்கள், பன்றிக் காய்ச்சலின்
பீதியிலிருந்து விடுபட, தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம்.வெளிச் சந்தையில் கிடைக்கும், "பான்டிபுளு' தடுப்பூசியின் காலாவதி தேதியை, கவனித்து வாங்க வேண்டும். மருத்துவரின் ஆலோசனைப்படி மட்டுமே, இதை போட்டுக் கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
பரிசோதனைக்கு ரூ.3,000:பன்றிக் காய்ச்சல் நோய் கண்டறிவதற்கான பரிசோதனை செய்ய, 12 தனியார் ஆய்வகங்களுக்கு, தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. ஆய்வக உரிமையாளர்களுடன், சுகாதாரத் துறை அமைச்சர் விஜய், நேற்று முன்தினம் ஆய்வுக் கூட்டம் நடத்தினார். கூட்டத்தில், நோய் கண்டறியும் பரிசோதனைக்கு, 5,000 முதல், 7,000 ரூபாய் வரை இருந்த கட்டணத்தைக் குறைத்து, 3,000 ரூபாய் மட்டுமே, அனைத்து அங்கீகரிக்கப்பட்ட தனியார் ஆய்வகங்களும் வசூலிக்க வேண்டும் என, அமைச்சர் வேண்டுகோள் விடுத்தார். ஆய்வக உரிமையாளர்கள், இதை ஏகமனதாக ஏற்றுக் கொண்டனர்.பன்றிக் காய்ச்சல் நோய் குறித்த பரிசோதனை விவரங்களை, அரசுக்கு உடனுக்குடன் தெரிவிக்க, அனைத்து அங்கீகரிக்கப்பட்ட ஆய்வகங்களும் அறிவுறுத்தப்பட்டுள்ளன. தனியார் ஆய்வகங்களில் மேற்கொள்ளப்படும் பரிசோதனை, அரசின், "கிங்' நிலைய ஆய்வகத்தின் மூலம், தரக் கட்டுப்பாடுக்கு உட்படுத்தப்படும் என்றும் கூட்டத்தில் முடிவெடுக்கப் பட்டது