Posted On April 05,2012,By Muthukumar
திரைப்படங்களிலும்,
விளம்பரப் படங்களிலும் வரும் மாடல்களின் ஹை ஹீல்ஸ் செருப்புகள் இளம்
பெண்களை வசீகரிப்பதில் வியப்பில்லை. பிறரால் கவனிக்கப் பட வேண்டும் எனும்
ஆழ்மன ஆர்வம் அவர்களை ஹீல்ஸ் பாதையில் கவனத்தைச் செலுத்த வைக்கிறது.
“ஹை
ஹீல்ஸை” தமிழில் “உயரமான குதிகால்” என்று சொல்லலாமா ? பிழையெனில் தமிழ்
அறிஞர்கள் மன்னிப்பார்களாக ! ஹை ஹீல்ஸ் செருப்புகளைப் போட்டுக்கொண்டு
நடப்பது இன்றைய இளசுகளின் ஃபேஷன். கால்களை நெடு நெடுவெனக் காட்ட வேண்டும்
என விரும்புபவர்களின் சாய்ஸ்களில் முக்கியமானது இது. அதனால் தான் உயரம்
குறைவாக இருக்கும் பெண்கள் தங்களை உயரமாகக் காட்டிக் கொள்ள ஹீல்ஸ்
செருப்புகளில் சரணடைகிறார்கள்.
சிலருக்கு
பாதங்கள் வசீகரமாக இருக்காது. அல்லது அவர்களாகவே அப்படி நினைத்துக்
கொள்வார்கள். அப்படிப்பட்டவர்கள் ஹை ஹீல்ஸ் வசீகரங்களுக்குள் தங்களுடைய
பாதங்களைப் பூட்டி வைக்க முயல்வார்கள்.
அழகிப்
போட்டிகளில் கலந்து கொள்பவர்களைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். அவர்களைக்
கேட்டால் “ஹீல்ஸ் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம்” என்பார்கள். பாதிக்
காசை கால் செருப்புக்கே கரைப்பார்கள். என்ன செய்ய ? தங்கள் வளைவுகளை
வசீகரமாய்க் காட்ட வேண்டிய கட்டாயத்தில் இருப்பவர்கள் அவர்கள். பின்னழகை
எடுப்பாய்க் காட்டுவதில் ஹீல்ஸ் செருப்புகள் கில்லாடிகள்.
“இந்தக்
காலத்துப் பொண்ணுங்களே இப்படித் தான், அந்தக் காலத்துல…” என பாட்டி
புராணத்தை ஆரம்பிக்கிறீர்களா ? கொஞ்சம் வெயிட் பண்ணுங்க ! ஹீல்ஸ்
சமாச்சாரம் இன்று நேற்று வந்த விஷயமல்ல. கி.மு 3500 லேயே எகிப்தில் ஹீல்ஸ்
செருப்புகளைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். ஏழைகள் வெறுங்கால்களோடும்
பணக்காரர்கள் ஹீல்ஸ் செருப்புகளோடும் அலைந்திருக்கிறார்கள். அப்படிப்
பார்த்தால் குறைந்த பட்சம் 5500 ஆண்டுகளுக்கு முன்பே ஹீல்ஸ் தனது ஹிஸ்டரியை
ஆரம்பித்திருக்கிறது !
பண்டைய
ரோமில் விலை மாதர்கள் ஹை ஹீல்ஸ் அணிந்து நடப்பார்களாம். அவர்களுடைய ஹீல்ஸ்
அளவைப் பார்த்து தான் இது எந்த மாதிரிப் பெண் என்பதை ஆண்கள் அடையாளம்
கண்டு கொள்வார்களாம். ஆண்கள் கூட ஹை ஹீல்ஸ் அணிவதுண்டு. குறிப்பாக
ஹாலிவுட்டின் கௌபாய் படம் பார்த்தவர்களுக்கு அது தெரியும்.
ஒவ்வோர்
காலகட்டத்திலும் ஹை ஹீல்ஸ் மாற்றங்களும், ஏற்றங்களும் அடைந்து கொண்டே
இருந்தது. இன்றைக்கு அது நவீன வடிவத்தை உள்வாங்கி வசீகரமாய் இருக்கிறது.
கடையில
போய் பார்த்தா பல அளவுகளில் செருப்புகள் இருக்கும் இல்லையா ? இதில் எது ஹை
ஹீல்ஸ் எது லோ ஹீல்ஸ் தெரியுமா ? பொதுவாக செருப்பின் குதிகால் உயரம் 6
சென்டி மீட்டர் வரை உயரமாய் இருந்தால் அது லோ ஹீல்ஸ் ! 8.5 சென்டீ மீட்டர்
வரை இருந்தால் நடுத்தர ஹீல்ஸ் ! அதைத் தாண்டினால் அதை ஹை ஹீல்ஸ்
என்பார்கள். இது செருப்புகளின் கணக்கு !
“இந்த ஹை ஹீல்ஸ் கண்டு பிடிச்சவனுக்கு கோயில் கட்டிக் கும்பிடணும்” என்று ஒரு முறை மர்லின் மன்றோ ரொம்பவே
உணர்ச்சி வசப்பட்டுப் பேசியிருந்தார். அவரை உறை பனியில் செய்த கவர்ச்சிச்
சிலையாய்க் காட்டியதில் ஹை ஹீல்ஸின் பங்கு கணிசமானது ! எனவே அவர் அப்படிச்
சொன்னதில் எந்த ஆச்சரியமும் இல்லை !
ஆனால்
சாதாரணமாய் பயன்படுத்தலாமா இதை ? விருப்பம் போல போட்டுக் கொண்டு நடக்கலாமா
? சாதாரணச் செருப்பு அணிவதற்கும் ஹீல்ஸ் அணிவதற்கும் ஏதேனும் வித்தியாசம்
உண்டா ?
ஆஸ்திரேலியாவிலுள்ள
கிரிஃபித் பல்கலைக்கழக ஆய்வு என்ன சொல்கிறது தெரியுமா ? ஹை ஹீல்ஸ் போடும்
பெண்கள் நடக்கும் போது ஏகப்பட்ட எனர்ஜியைச் செலவழிக்கிறார்களாம். தொடர்ந்து
கொஞ்ச நாள் ஹை ஹீல்ஸ் போட்டால் அதன் பிறகு நடக்கும் முறையே மாறிவிடுமாம்.
அதன் பின் ஹை ஹீல்ஸ் போடாவிட்டால் கூட நடப்பதற்காய் உடல் அதிக அளவு
எனர்ஜியைச் செலவிடுமாம்.
“நமது
உடலிலுள்ள உறுப்புகளெல்லாம் ஒரு குறிப்பிட்ட சமநிலையில் அமைந்திருக்கிறது.
ஹை ஹீல்ஸ் காலில் சமநிலை அமைப்பை மாற்றி வைக்கிறது. அதன் பின் புதிய
நிலையையே சாதாரண நிலை என மூளை எழுதிக் கொள்கிறது. இதனால் தான் தினமும்
ஹீல்ஸ் போடும் பெண்கள், பின்னர் ஹீல்ஸ் போடாவிட்டால் கூட அவர்களுடைய உடல்
சமநிலைக்கு வருவதில்லை. அதுவே அதிக எனர்ஜி செலவாகக் காரணம்” என்கிறார்
டாக்டர் நெயில் ஜெ குரோலின்.
நிறைய
தூரம் நடக்க வேண்டியவர்கள், படிகளில் ஏறி இறங்க வேண்டியவர்களுக்கெல்லாம்
ஹை ஹீல்ஸ் காலில் இருக்கும் எமனைப் போல ! கொஞ்சம் சறுக்கினாலும் கால் பணால்
! ஹை ஹீல்ஸ் போட்டு காலைச் சுளுக்கிக் கொண்டவர்களில் லிஸ்ட் சீனச் சுவரை
விட நீளமானது !
சுளுக்கோட
போனா பரவாயில்லை, கொஞ்சம் தைலத்தைத் தடவிட்டு நம்ம வேலையைப் பார்க்கப்
போகலாம். ஆனால் ஹீல்ஸ் மேட்டர் அவ்வளவு சின்னதல்ல. ஹீல்ஸ் போட்டால் கால்
முட்டிகள், இணைப்புகளில் அதிக அழுத்தம் ஏற்பட்டு அவை வலுவிழக்கும் என்கிறது
இன்னொரு ஆராய்ச்சி.
ஹீல்ஸ்
போட்டு நடக்கும் போது உருவாகும் அதிர்வுகள் உடலின் மூட்டு இணைப்புகளில்
எத்தகைய பாதிப்புகளை ஏற்படுத்தும் எனும் ஆராய்ச்சியில் இந்த முடிவு
எட்டப்பட்டது. ஹீல்ஸ் போட்டு நடக்கும் போது உருவாகும் அதிர்வுகள்
சாதாரணமாய் நடப்பதை விட மிக அதிகம் என்பதால் இந்தப் பாதிப்பும் அதிகம்
என்கிறார் ஆராய்ச்சியாளர் டேனியல் பார்கேமா.
ஆஸ்டியோஆர்த்ரடிஸ்
(Osteoarthritis) எனும் மூட்டுகளைச் சிதைக்கும் நோய் கூட ஹீல்ஸ் அணிவதால்
வரலாம் என அதிர்ச்சியளிக்கிறார் யூ.கேயிலுள்ள ஆராய்ச்சியாளர் பேராசிரியர்
ரெட்மான்ட்.
இதையெல்லாம்
விட முக்கியமான சிக்கல் முதுகு வலி. ஹை ஹீல்ஸ் உடலின் சம நிலையை
பாதிக்கிறதில்லையா ? அதனால் முதுகெலும்புக்கு அழுத்தம் அதிகமாகிறது. அது
ஒரு பேலன்ஸ் இல்லாத நிலையில் இருக்கும். முதுகுக்கு அசௌகரியம் வரும்போது
வலி வருவது இயல்பு தானே ! அப்படி வலியை வலியப் போய் அழைப்பது தான் ஹீல்ஸ்
அணிவதால் ஆய பயன் !
நமது
பரம்பரை வைத்தியர்களிடம் கேட்டுப் பாருங்கள். உடலின் அத்தனை
உறுப்புகளுக்குமான தொடர்பு பாதத்தில் இருக்கிறது என்பார்கள். அந்த
நரம்புகள் தூண்டப்படும் போது முழு உடலுக்கும் இரத்த ஓட்டம் அதிகரிக்கிறது.
செருப்புகள் ஒரு வகையில் அந்த தூண்டுதலைத் தடுக்கின்றன. இந்த ஹை ஹீல்ஸ்
அந்த தூண்டுதலை ரொம்பவே பாதிக்கும். இது உடல்வலியுடன், தலைவலியையும்
உருவாக்கி விடும் என்கின்றனர் மருத்துவர்கள்.
ரொம்ப
சோர்வாக இருக்கும் போது பாதங்களைக் கொஞ்சம் வெது வெதுப்பான தண்ணீரில்
கழுவினால் சுகமாய் இருக்கும் இல்லையா ? அதன் காரணமும் இந்த நரம்புகள் தான்.
ஹீல்ஸ் போடுபவர்கள் அடிக்கடி இப்படி கால்களைக் கவனிக்கலாம் !
ஹீல்ஸ்
போட்டு நடக்கும் போதும் சாதாரணமாக நடப்பதைப் போல முதலில் குதி கால், பிறகு
முன்கால் என நடக்க வேண்டும் என்கின்றனர் அழகுக் கலை நிபுணர்கள்.
இல்லாவிட்டால் நடப்பது சிரமமாய் இருக்குமாம். எதுவானாலும் வீட்டில் நன்றாக
நடக்கப் பழகிவிட்டு விழாவுக்குச் செல்லுங்கள். நூறு பேர் மத்தியிலே தடுமாறி
விழுந்தா நல்லாவா இருக்கும் ?
மெட்டடார்சல்ஜியா (Metatarsalgia ) என
மருத்துவம் அழைக்கும் ஓரு நிலை பாதங்களில் ஏற்படும் வலி தொடர்பானது.
பாதத்தில் விரல்களுக்குக் பின்னால் பாதப் பந்து எனுமிடத்தில் எழும் இந்த
வலியை வெற்றிலை பாக்கு வைத்து அழைக்கிறது ஹை ஹீல்ஸ் ! அதே போல தான்
ஹேமர்டோஸ்(Hammertoes) எனும் நிலையும். இது விரல்களின் இயல்பான வடிவம் மாறி
வளைந்தும் நெளிந்தும் போவது. புனியன் (Bunion) என்பது பெருவிரலை வளையச்
செய்வது ! இவையெல்லாம் ஹை ஹீல்ஸ் பயன்படுத்துவதால் வரும் சிக்கல்கள்.
ஹை
ஹீல்ஸ் தொடர்ந்து அணிந்தால் பாதத்திலுள்ள தசைகள் இறுக்கமாகி அது பின்னர்
இலகுவாகாமல் போய்விடும். அதிக எடையுள்ளவர்கள் ஹீல்ஸ் அணிந்தால் சிக்கல்கள்
இரண்டு மடங்காகி விடும் என்பது கூடுதல் அதிர்ச்சி.
தாய்மை
நிலையில் இருப்பவர்கள் ஹை ஹீல்ஸ் பயன்படுத்துவதைத் தவிர்ப்பது ரொம்ப ரொம்ப
நல்லது. அவர்களுடைய உடலில் ஹீல்ஸ் செருப்புகள் தேவையற்ற அழுத்தத்தைக்
கொடுக்கும். தடுமாறி விழுந்தாலும் சிக்கல் தானே !
மருத்துவர்கள்
பொதுவாகச் சொல்லும் அறிவுரை ஒன்று தான். ஹீல்ஸ் அணிவதை கூடுமானவரை
தவிருங்கள். போட்டே ஆகவேண்டுமெனில் அவ்வப்போது போடுங்கள். அதுவும் எடுத்த
எடுப்பிலேயே ஏணி மாதிரி ஹீல்ஸ் எடுத்து காலில் மாட்டாதீர்கள். சின்ன ஹீல்ஸ்
போட்டுப் பழகி, பிறகு கொஞ்சம் கொஞ்சமாய் ஹை ஹீல்ஸ் போடுவதே நல்லது.
அப்போது தான் உங்களால் தடுமாறாமல் நடக்கவும் முடியும், உங்கள் உடல் கொஞ்சம்
கொஞ்சமாய் மாற்றத்தை ஏற்றுக் கொள்ளவும் செய்யும்.
ஹை
டெக் அழகியாய் அழகாய்த் தெரியவேண்டும் என்பதற்காக அசௌகரியத்தை விலை
கொடுத்து வாங்குவது தான் ஹை ஹீல்ஸ் சமாச்சாரம். ஒரு அவசரத்துக்கு ஓடக் கூட
முடியாத ஹை ஹீல்ஸ் உங்களுக்கு தேவையா என்பதை யோசியுங்கள். தற்காலிக அழகை
விடவும் முக்கியமானது நிரந்தர ஆரோக்கியம் ! சொல்ல வேண்டியதைச் சொல்லி
விட்டேன், மற்றதெல்லாம் உங்கள் கையில்… சாரி, காலில் ! !
No comments:
Post a Comment