Lord Siva

Lord Siva

Tuesday, 17 April 2012

மாரடைப்பைத் தடுக்கும் ரத்தப் பரிசோதனை

Posted On April 17,2012,By Muthukumar
நெஞ்சுப் பகுதியில் லேசாக ஒரு வலி வந்துவிட்டால் போதும். இது மாரடைப்பின் அறிகுறியாக இருக்குமோ, இதயத்தில் ஏதாவது பெரிய பிரச்சினை இருக்குமோ, இப்படி இருக்குமோ இல்லை அப்படி இருக்குமோ என்று உடல் முழுவதும் ஒரு கிலி பரவத் தொடங்கிவிடும். இந்தக் கிலியில் நெஞ்சு பகுதியில் வந்த வலி கூட மறைந்து போயிருக்கும். ஆனால், அந்த சிறிய வலி ஏற்படுத்திய, உளவியல் ரீதியிலான பாதிப்பின் அதிர்வுகள் மட்டும் தொடர்கதை ஆகிவிடும்.
இதயத்தில் ஒரு சிறு வலி வந்தால்கூட `ஐயய்யோ நமக்கு மாரடைப்பு வந்துவிடுமோ' என்ற பயத்தில் பதறிப்போகும் பலருக்கும் நிம்மதி தந்துள்ளது அமெரிக்காவின் ஸ்கிரிப்ஸ் டிரான்ஸ்லேஷனல் சயன்ஸ் இன்ஸ்டிடியூட்டில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்று.
`ஒருவருக்கு மாரடைப்பு ஏற்படும் ஆபத்து இருக்கிறதா?' என்பதை கண்டறிந்து சொல்லிவிடும் ஒரு புதிய ரத்தப் பரிசோதனையை இவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
இதய மருத்துவத்துறையின் லட்சியமே மாரடைப்பு வருமுன் அறிந்து மரணத்தி
லிருந்து மனித உயிர்களை மீட்டுக் கொடுப்பதுதான். அந்த அதிசயத்தை அழகாக செய்து முடிக்கிறது இந்த ரத்தப் பரிசோதனை என்று சிலாகிக்கிறார் இந்த ஆய்வினை மேற்கொண்ட மூத்த ஆய்வாளர்களுள் ஒருவரான மருத்துவர் எரிக் டோபால். மேலும், இந்தக் கண்டுபிடிப்பு, இதய மருத்துவத்தின் எதிர்காலத்தையே மாற்றியமைக்க போகிறது என்கிறார் டோபால்.
அது சரி, இதய நோயாளிகளுக்கு மறுவாழ்வு அளிக்கும் இந்த அதிசய பரிசோதனை எப்படிச் சாத்தியமானது?
மாரடைப்பால் பாதிக்கப்பட்டு, அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட சுமார் 50 இதய நோயாளிகளின் ரத்தத்தில் உள்ள `சுழலும் எண்டோதீலியல் உயிரணுக்கள்' (circulating endothelial cells/CEC) உள்ளிட்ட 5 வெவ்வேறு உயிரணுக்கள் ஆய்வு செய்யப்பட்டன.
இந்த ஆய்வின் முடிவில், ஆரோக்கியமானவர்களுடன் ஒப்பிடுகையில் மாரடைப்பால் பாதிக்கப்பட்டவர்களின் ரத்தத்தில் உள்ள சுழலும் எண்டோதீலியல் உயிரணுக்களின் எண்ணிக்கை, வடிவம் மற்றும் இன்னபிற பண்பு நலன்கள் என அனைத்திலும் பல மாற்றங்கள் இருந்தது கண்டறியப்பட்டது. முக்கியமாக, சுழலும் எண்டோதீலியல் உயிரணுக்கள் அளவில் மிகவும் பெரியதாகவும், பல நியூக்லியஸ்களுடனும் இருந்தது குறிப்பிடத்தக்கது.
ரத்த ஓட்டத்தில் சுழன்று கொண்டிருக்கும், மிகவும் அரிதான, ரத்த நாளங்களின் தோலை உருவாக்கும் உயிரணுக்களையே சுழலும் எண்டோதீலியல் உயிரணுக்கள் என்கிறார்கள். `வாஸ்குலோ ஜெனிசிஸ்' என்றழைக்கப்படும் ரத்த நாளங்களின் வளர்ச்சிக்கு இந்த உயிரணுக்கள்தான் அடிப்படை என்பது குறிப்பிடத்தக்கது. இவை மாரடைப்பால் சேதமடைந்த ரத்த நாளங்களுடைய தோலின் மறுவளர்ச்சியை தூண்டி இதயத்தை மறுபடியும் சீராக செயல்பட வைக்கின்றன என்கிறது இதய அறிவியல்.
ஆக, இந்த சுழலும் எண்டோதீலியல் உயிரணுக்கள் எண்ணிக்கையில் குறைந்தாலோ அல்லது அவற்றின் வடிவம் மற்றும் செயல்பாட்டில் தவறான மாற்றங்கள் நிகழ்ந்தாலோ, மாரடைப்பு அல்லது இன்னபிற காரணங்களால் சேதமடையும் ரத்த நாளங்களின் மறுவளர்ச்சி பாதிக்கப்படுகிறது. இதனால் (மறுபடியும்) மாரடைப்பு ஏற்படும்போது மரணம் நிகழ்கிறது.
ஆனால், சுழலும் எண்டோதீலியல் உயிரணுக்களின் தன்மையை முன்னரே பரிசோதித்துக் கண்டறிவதன் மூலம், அதற்கான தகுந்த சிகிச்சைகளை மேற்கொண்டு, வரவிருக்கும் மாரடைப்பினை தவிர்க்க முடியும். அதைத்தான் இந்த புதிய ரத்தப் பரிசோதனை செய்கிறது என்கிறார்கள் மருத்துவர்கள். அதனாலேயே சுழலும் எண்டோதீலியல் உயிரணுக்களை வரவிருக்கும் மாரடைப்பினை கண்டறியும் `பயோ மார்க்கர்' அல்லது `அடையாளம் காட்டிகள்' என்கிறார்கள்.
வருடத்துக்கு 25 லட்சம் அமெரிக்கர்கள் மற்றும் பல லட்சம் இதர உலக நாட்டவர்களின் உயிர்களை பலி கொண்டுவரும் மாரடைப்பினை வருமுன் கண்டறிந்து, தக்க சமயத்தில் சரியான சிகிச்சைகளை மேற்கொள்ள உதவும் இந்த அதிசய பரிசோதனை எவ்வளவு இன்றியமையாத ஒன்று என்பது சொல்லி புரியவேண்டியதில்லை.
இந்த ரத்தப் பரிசோதனை, இன்னும் சில மேலதிக பரிசோதனைகளுக்கு பின்னர் மக்கள் பயன்பாட்டுக்கு தயாராகும் என்கிறார்கள் இதன் கண்டுபிடிப்பாளர்கள். இந்த பரிசோதனை மக்கள் பயன்பாட்டுக்கு வர இன்னும் ஓரிரண்டு வருடங்கள் பிடிக்கும் என்கிறார் இதனை கண்டறிந்த மருத்துவக் குழுவின் தலைமை மருத்துவர்களுள் ஒருவரான மருத்துவர் ராகவா கொல்லப்புடி.

No comments:

Post a Comment