Lord Siva

Lord Siva

Wednesday, 11 April 2012

ரத்த அழுத்தத்தை அதிகமாக்கும் வலி நிவாரண மாத்திரைகள்

Posted On April 11,2012,By Muthukumar
ரத்த அழுத்தம் என்பது சத்தமே இல்லாமல் ஆளையே சாய்த்துவிடக் கூடிய ஓர் ஆபத்தான நோய். மாரடைப்பு உள்ளிட்ட பல இதய நோய்களை ஏற்படுத்துவதால் ரத்த அழுத்தமானது ஒரு நோயாக கருதப்படுகிறது.
ரத்த அழுத்தம் ஏற்படுவதற்கு சிறுநீரகக் குறைபாடு மற்றும் நாளமில்லா சுரப்பி புற்றுநோய்கள் போன்றவை காரணமாக இருக்கக் கூடும் என்ற ஒரு சந்தேகம் மருத்துவர்களிடையே இருக்கிறது. ஆனால் உடல் வலியை போக்க கொடுக்கப்படும் வலி நிவாரணிகள் கூட ரத்த அழுத்தத்துக்கு காரணமாக இருக்கக்கூடும் என்கிறது இஸ்ரேலிலுள்ள டெல் அவிவ் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் எகுட் கிராஸ்மேன் என்பவரின் சமீபத்திய ஆய்வு.
வலி நிவாரண மருந்துகளிலுள்ள வேதியல் மூலக்கூறுகள், நேரடியாகவோ அல்லது ரத்த அழுத்தத்துக்கான மருந்துகளின் செயல்பாடுகளில் குறுக்கிடுவதன் மூலமாகவோ, ரத்த அழுத்தத்தை அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது என்று விளக்குகிறார். முக்கியமாக, மருந்துகள் மூலம் உண்டாகும் இந்த ரத்த அழுத்தத்திற்கு, நாம் பயன்படுத்தும் பல மருந்துகள் காரணமாக இருக்கும் என்பது மருத்துவ உண்மை. ஆனால் இது குறித்த புரிதல் மருத்துவர்கள், நோயாளிகள் என இரு சாராருக்குமே இல்லை என்பதுதான் மிகவும் ஆபத்தானது என்கிறார் கிராஸ்மேன்.
இது தவிர சிலர் தாமாகவே மருந்துக்கடைகளுக்குச்சென்று நோய் அறிகுறிகளைத்தெரிவித்து மருந்துகள் வாங்குகிறார்கள். இந்த சுய மருத்துவம் மிக ஆபத்தானது. இதுவும் ரத்த அழுத்தம் அதிகரிக்க ஒரு காரணமாக அமைகிறது.
இந்த ஆய்வுகள் மூலம் எந்தெந்த மருந்துகள் ரத்த அழுத்தத்துடன் தொடர்புடையவை என்று கண்டறிந்துள்ளனர். உதாரணமாக, கர்ப்பத்தடை மாத்திரைகள், மனச்சோர்வுக்கான மாத்திரைகள், காயங்கள் மூலமாக உண்டாகும் வலியை போக்கும் மாத்திரைகள் மற்றும் பாக்டீரியாவுக்கு எதிரான கிருமி நாசினிகள் என நீள்கிறது மருந்துகளின் பட்டியல்.
இத்தகைய மருந்துகளால் நோயாளிகளுக்கு ரத்த அழுத்தம் ஏற்பட்டால் அதை சரி செய்ய வேண்டியது மருத்துவர்களுடைய பொறுப்பு. அதனால் இம்மருந்துகளுடைய அளவை குறைப்பது அல்லது ரத்த அழுத்தத்துக்கான ஒரு மருந்தை சேர்த்துக் கொடுப்பது போன்ற வழிமுறைகளை மருத்துவர்கள் கையாள வேண்டியது அவசியம் என்கிறார் பேராசிரியர் கிராஸ்மேன்.
எது எப்படியிருந்தாலும், வலி நிவாரண மருந்துகள் மூலமாக உண்டாகும் ரத்த அழுத்தம் குறித்த விழிப்புணர்வை மருத்துவர்களும், நோயாளிகளும் பெற்றிருக்க வேண்டியது அவசியம். பெரும்பாலான மருத்துவர்கள் இதை கருத்தில் கொள்வதில்லை, சிலருக்கு இது குறித்து தெரிவதேயில்லை. இந்த மருத்துவ உண்மை குறித்த புரிதலை ஏற்படுத்திக் கொண்டு தங்கள் நோயாளிகளை ரத்த அழுத்தத்திலிருந்து காப்பாற்ற வேண்டியது மருத்துவர்களுடைய கடமையாகும் என்கிறார் கிராஸ்மேன்.
பெரும்பாலான சமயங்களில் ஒரு குறிப்பிட்ட நோய்க்கான சிகிச்சையின் பின்விளைவாக ரத்த அழுத்தம் ஏற்படும்போது, அதே சிகிச்சையில் ரத்த அழுத்தத்துக்கான மருந்துகளையும் சேர்த்துக்கொள்ளலாம். ஆனால் பல சூழ்நிலைகளில் அப்படிச் செய்ய முடியாது. காரணம், சில சிகிச்சைகளின்போது உண்டாகும் ரத்த அழுத்தம் அந்த சிகிச்சைக்கு சாதகமான சில மாற்றங்களைச் செய்வதுதான்.
உதாரணமாக, ரத்த நாளங்களின் வளர்ச்சியை தடை செய்யும் புதிய மருந்துகள், ரத்த அழுத்தத்தை அதிகப்படுத்தி புற்றுநோய் கட்டிகளுக்கு ரத்தத்தை கொண்டு செல்லும் புதிய ரத்த நாளங்களின் வளர்ச்சியை தடை செய்கிறது. இந்த மருந்துகள் புற்றுநோய் சிகிச்சையில் மிகுந்த பலனளிப்பதால், இவற்றால் உண்டாகும் ரத்த அழுத்தம் கருத்தில் கொள்ளப்படுவதில்லை என்று தான் நம்புவதாக சொல்கிறார் கிராஸ்மேன்.
ஆனால், அதற்காக சிகிச்சையின் பின்விளைவாக உண்டாகும் ரத்த அழுத்தத்தை கூர்ந்து கவனிக்க வேண்டியதில்லை என்று அர்த்தமில்லை. ஏனென்றால், இந்த மருந்துகள் மூலமாக ஒரு நோயாளிக்கு நீண்ட ஆயுள் கிடைத்த பிறகு, அவர் ரத்த அழுத்தத்தால் உண்டாகும் பிரச்சினைகளான ஸ்ட்ரோக் அல்லது மாரடைப்பு போன்றவற்றால் பாதிக்கப்படக்கூடும் என்று எச்சரிக்கிறார் கிராஸ்மேன்.
இந்த ஆபத்துகளை தவிர்க்க, நோய்களுக்கான சிகிச்சையில் ரத்த அழுத்தத்துக் கான மாத்திரையைச் சேர்த்துக் கொள்வது போன்ற எளிமையான பல வழிகள் இருக்கின்றன. இதனை உணர்ந்து, மருத்துவர்கள் பொறுப்புடன் செயல்பட வேண்டியது அவசியம் என்று கருத்து தெரிவிக்கிறார் கிராஸ்மேன்.

No comments:

Post a Comment