Lord Siva

Lord Siva

Wednesday, 18 July 2012

உயிருக்கு குறிவைக்கும் `உயர் ரத்த அழுத்தம்’

Posted On July 18,2012,By Muthukumar
உலகை அச்சுறுத்தும் நோய்களில் குறிப்பிடத்தக்கது, உயர் ரத்த அழுத்த நோய். இது எச்சரிக்கை அறிகுறிகளை கொடுக்காமல், ஓசையின்றி மனிதனை கொல்லும் நோயாகும். இளம் வயதினர் கூட இந்த நோயால் பாதிக்கப்படுகின்றனர். ஆண்டுதோறும் 70 லட்சம் பேர் இந்த நோயால் இறக்கிறார்கள். இதய நோய், பக்கவாதம் மற்றும் சிறுநீரக நோயை ஏற்படுத்துவதிலும் உயர் ரத்த அழுத்தம் முக்கிய காரணியாக செயல்படுகிறது.
* உயர் ரத்த அழுத்தம் என்றால் என்ன?
ரத்தக் குழாய் மூலம் இதயத்திலிருந்து ரத்தம் செல்லும்போது ரத்தக்குழாய் சுவர்களுக்கு எதிராக அழுத்தத்தை ஏற்படுத்தும். இந்த அழுத்தமே ரத்த அழுத்தம் எனப்படுகிறது. ரத்த அழுத்த அளவானது இதயத்தின் சுருங்கிய இயக்க அழுத்தம், இதயத்தின் விரிந்த இயக்க அழுத்தம் என்னும் இரண்டு அழுத்தங்களை அடிப்படையாகக் கொண்டது.
இயல்பு நிலையில் இதயத்தின் சுருங்கிய அழுத்தம் 120 mm-Hg -ஆகவும், இதயத்தின் விரிந்த இயக்க அழுத்தம் 80 mm-Hg ஆகவும் இருக்க வேண்டும். அதாவது 120/80 mm-Hg என்றிருக்கவேண்டும். ஆனால் 140/90 mm-Hg- க்கு அதிகமாக ரத்த அழுத்த அளவீடு இருக்குமானால் அது உயர் ரத்த அழுத்தமாகும். இதன் மருத்துவப் பெயர் `ஹைப்பர்டென்சன்' என்பதாகும். குறிப்பாக 40 வயதிற்கு மேல் உள்ளவர்கள் இந்த நோயால் பாதிக்கப்படுகின்றனர்.
* உயர் ரத்த அழுத்தத்தை எவ்வாறு கண்டுபிடிப்பது?
"ஸ்பிக்மோமேனோமீட்டர்'' என்னும் ரத்த அழுத்த அளவீட்டுக் கருவியின் மூலம் ரத்த அழுத்தத்தை கண்டுபிடித்து விடலாம். ரத்த அழுத்த அளவு 140/90 னீனீ பிரீ ஆக இருந்தால், அந்த நோயாளியை மேற்கொண்டு பரிசோதிக்க வேண்டும். ஆனால் ஒரே ஒருமுறை மட்டும் அதிகமாக இருந்தால் ரத்த அழுத்த நோய் உள்ளதாக எடுத்துக் கொள்ளக்கூடாது. வெவ்வேறு சமயங்களில் மூன்று முறை அடுத்தடுத்த நாட்களில் பரிசோதித்த பிறகும் ரத்த அழுத்தம் உயர்வாக இருந்தால் அவரை உயர் ரத்த அழுத்த நோயாளி எனக் கூறலாம்.
* அறிகுறிகள்
கடுமையான தலைவலி.
தலைச்சுற்றல்.
காது இரைச்சல்.
குமட்டல்.
மனக்குழப்பம்.
மயக்க உணர்வு.
* ரத்த அழுத்த நோயின் விளைவுகள்:
சிறுநீரக நோய்.
மாரடைப்பு.
பக்கவாதம்.
இதயம் செயலிழத்தல்.
விழித்திரை நோய்
* உயர் ரத்த அழுத்த நோயை உருவாக்கும் முக்கிய காரணிகள்:
உடல் பருமன்.
மனஅழுத்தம்.
மனஉளைச்சல்.
அளவுக்கு அதிகமாக உப்பை உணவில் சேர்த்துக் கொள்ளுதல்.
அளவுக்கு அதிகமாக மது அருந்துதல்.
புகைப்பிடித்தல்.
சர்க்கரை நோய்.
இது பரம்பரை நோயாகவும் தொடர வாய்ப்புள்ளது.
* இந்த நோய் வராமல் தவிர்க்க:
அன்றாட உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டிய உப்பின் அளவை வெகுவாக குறைக்கவேண்டும்.
சராசரியாக தினமும் 4 கிராம் உப்பு எடுத்துக் கொள்ளலாம். (1 டீ ஸ்பூன் 2 கிராம்).
உணவில் அதிக அளவில் காய்கறிகளையும், கீரைகளையும் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
நார்ச்சத்து நிறைந்த பழங்களை உட்கொள்ள வேண்டும்.
கோதுமை, கம்பு, கேழ்வரகு போன்ற நார்ச்சத்துள்ள தானியங்களை அன்றாட உணவில் அதிகம் சேர்க்க வேண்டும்.
அன்றாடம் 30 நிமிடங்களாவது நடைப்பயிற்சி மேற்கொள்ளுங்கள்.
உடற்பயிற்சி செய்யுங்கள்.
மன உளைச்சல்களை தவிர்த்து மகிழ்ச்சியை உணருங்கள்.
ரத்த அழுத்த அளவையும் முறையாக பரிசோதியுங்கள்.
உயர் ரத்த அழுத்த நோய் இருப்பின் மருத்துவரின் ஆலோசனைப்படி மருந்துகளை தவறாமல் சாப்பிடுங்கள்.
முன்னோர் அல்லது அம்மா- அப்பா எவருக்கேனும் இந்நோய் இருந்தால், மருத்துவரிடம் பரிசோதித்து, முறையான ஆலோசனைகளை பெறுங்கள்.
உயர் ரத்த அழுத்த நோய் இருப்பதாக தெரிந்தால், மாதம் ஒருமுறை தவறாமல் பரிசோதனை மேற்கொண்டு, டாக்டர்களின் ஆலோசனைப்படி
மருந்துகளை உட்கொள்ள வேண்டும்.
* நோயாளிகள் செய்யக்கூடாதவை:
அப்பளம், சிப்ஸ், கருவாடு போன்ற எண்ணெயில் பொறித்த உணவுப் பொருட்களை உண்ணக் கூடாது.
டின்களில் அடைக்கப்பட்டு விற்கப்படும் பதப்படுத்திய உணவு வகைகளை அதிக அளவு சாப்பிடக் கூடாது.
துரித உணவுகளை தவிர்த்திடவேண்டும்.
மது, புகை, போதைப் பொருட்களை முற்றிலுமாக தவிர்த்திட வேண்டும்.
கொழுப்புச்சத்து மிகுந்த உணவுப் பொருட்களான இறைச்சி, முட்டை(மஞ்சள் கரு), எண்ணெய், நெய், வனஸ்பதி போன்றவற்றை அதிகமாக உண்ணக்
கூடாது.
வேலையிலோ, வாழ்க்கையிலோ அதிக மனஅழுத்தத்தை ஏற்படுத்திக்கொள்ளக்கூடாது.

No comments:

Post a Comment