Lord Siva

Lord Siva

Sunday, 1 July 2012

மூலிகைகள்… பலன்கள்…

Posted On July 01,2012,By Muthukumar
ருத்துவ பலன் கொண்ட மூலிகைகளை அப்படியே சாறு எடுத்து பருகுவது நல்லதுதான். ஆனால் அவைகளில் சிலவற்றில் புழுக்களின் முட்டைகளும், கண்ணுக்கு தெரியாத கிருமிகளும் இருக்கும். சாறோடு சேர்ந்து அவைகளும் வயிற்றுக்குள் செல்ல வாய்ப்பு உள்ளது. அதனால் அவைகளை பக்குவப்படுத்தி, கஷாயமாக்கி அரசு சித்த மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மூலிகை கஷாயங்களை வழங்கி வருகிறோம்.
நமக்கு தேவையான மூலிகைகளை மண்சட்டியில் போட்டு நான்கு மடங்கு தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து ஒரு மடங்காக வற்ற வைத்து, மூலிகை கஷாயம் தயாரிக்கப்படுகிறது. இவைகளை பருகினால் பக்க விளைவுகள் இல்லாமல் முழு பலன் கிடைக்கும்.
சிலவகை கஷாயங்களின் சிறப்புகளை சொல்கிறேன்..
அருகம்புல் கஷாயம்:
அருகம்புல், மிளகு, மஞ்சள், இஞ்சி முதலானவற்றை தேவையான அளவு இடித்து மண்சட்டியில் போட்டு நான்கு மடங்கு தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து ஒரு மடங்காக வற்ற வைத்து பின் பருக வேண்டும்.
பலன்:
இது ரத்தத்தை சுத்தப்படுத்தும். நாம் அன்றாடம் உணவு உண்கிறோம். ஒருசில உணவுகளால் உடலுக்கு நல்லது மட்டுமின்றி சில கெடுதல்களும் நேரும். மறுநாள் காலையில் வெறும் வயிற்றில் ஒரு டம்ளர் அருகம்புல் கஷாயம் பருகினால் அந்த கெடுதல்கள் உடலில் தங்காது. ரத்தம் சுத்தம் செய்யப்பட்டு நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும். தோல் நோய்கள் வருவதையும் இந்த கஷாயம் தடுக்கும்.
சர்க்கரை நோய் கஷாயம்:
ஆவாரம்பூ, சரக்கொன்றைப்பூ, முத்தக்காசு, நெல்லி வற்றல், மருதம்பட்டை போன்ற மூலிகைகளால் சர்க்கரை நோய் கஷாயம் தயாரிக்கப்படுகிறது.
பலன்:
இதை சர்க்கரை நோய் உள்ளவர்கள் காலையில் வெறும் வயிற்றில் தொடர்ந்து குடித்துவர வேண்டும். இதை பருகிவரும்போது ஏற்கனவே எடுத்துக்கொண்டிருக்கும் மருந்துகளை நிறுத்தவேண்டியதில்லை. இரண்டு மாதம் கழித்து சர்க்கரையின் அளவு கட்டுக்குள் வரும். அப்போது மருத்துவரின் ஆலோசனைப்படி பிற மாத்திரைகளின் அளவை சிறிது சிறிதாக குறைக்க வேண்டும். தொடர்ந்து வரும் பல பக்க விளைவுகளில் இருந்து சர்க்கரை நோயாளிகள் தங்களை பாதுகாத்துக் கொள்ள இதை பருகவேண்டும்.
உடல் எடை குறைப்பு கஷாயம்:
சரக்கொன்றை பூ, புளி, கொள்ளு, நீர்முள்ளி போன்ற மூலிகைகளால் இது தயாரிக்கப்படுகிறது.
பலன்:
உடல் பருமன் கொண்டவர்கள் இதை காலையில் வெறும் வயிற்றில் தொடர்ந்து பருகினால், மாதம் 2 கிலோ வரை எடை குறையும். குறைந்த பின்பு அதற்கு மேல் எடை அதிகரிக்கவும் செய்யாது. பக்க விளைவுகளும் இதில் கிடையாது. ரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்பின் அளவையும் குறைக்கும்.
சளி, ஆஸ்துமா, அலர்ஜிக்கான கஷாயம்:
ஆடாதோடை, தூதுவளை, துளசி, கண்டங்கத்திரி, மிளகு, மஞ்சள் முதலான மூலிகைகளால் இது தயாரிக்கப்படுகிறது.
பலன்:
மழைக்காலங்களில் வாரம் இருமுறை இந்த கஷாயத்தை பருகினால் மழைக்கால நோய்களில் இருந்து தப்பிக்கலாம். சுவாச மண்டல நோய் உள்ளவர்கள் தொடர்ந்து இந்த கஷாயத்தை பருகினால், அந்த பாதிப்புகளில் இருந்து விடுபடுவார்கள்.
உளுந்தங்களி:
இது பெரும்பாலானவர்களால் விரும்பி உண்ணப்படுவது. உளுந்து, கருப்பட்டி, செக்கில் ஆட்டிய நல்லெண்ணெய் ஆகியவற்றால் இது தயாரிக்கப்படுகிறது. ஆண்கள், பெண்கள், குழந்தைகள் அனைவரும் உண்ணுவதற்கு உகந்த சத்தான இனிப்பு உணவு இது. இதை நீங்களே வீட்டில் தயாரித்து உண்ணலாம்.
கறுப்பு உளுந்தை வாங்குங்கள். பொன்னிறமாகி, வாசனை வரும் வரை வறுத்து, அரைத்து மாவாக்கி, கருப்பட்டி பாகு காய்ச்சி அதோடு சேர்த்து நல்லெண்ணெய் விட்டு கிளறி இறக்க வேண்டும். தண்ணீர் படாமல் இருந்தால் 3 நாள்கள் வரை வைத்திருந்து சாப்பிடலாம். குழந்தைகளின் உடல் வளர்ச்சி, உறுதிக்கு தேவையான கால்சியம், புரோட்டீன் போன்றவை இதில் உள்ளது. பெண்கள் சாப்பிட்டால் கர்ப்பப்பை பலம் பெறும். இடுப்பு வலியும் வராது.
ஆண்களுக்கு உடல் உறுதியை தருவதோடு, குழந்தையின்மை பிரச்சினைக்கு நல்ல தீர்வை தரும். ஆனால் 40 வயதுக்கு மேல் உள்ளவர்கள், ஒருநாள் 50 கிராமுக்கு மேல் சாப்பிடக் கூடாது. ஏனென்றால் எளிதாக செரிக்காது.
மூலிகை சூப்:
முடவாட்டுக்கால் என்கிற மூலிகையின் வேரில் இது தயாரிக்கப்படுகிறது. இந்த வேர் ஆட்டுக்கால் போல் காட்சி அளிக்கும். இது உடலுக்கு உடனடி சக்தியை கொடுப்பதோடு மூட்டு வலி வராமலும் தடுக்கும்.

No comments:

Post a Comment