- Posted On November 21,2011,By Muthukumar
ஒரு நிமிடத்திற்கு 15 முறையென்று ஒரு நாளுக்கு சுமார் 21, 600 தடவைகள் என்ற எண்ணிக்கையில் மூச்சை இழுத்து வெளிவிட்டு வருகிறோம். இந்த சுவாச எண்ணிக்கையை குறைக்கும் போது ஆயுள் அதிகரிக்கும் என்பது தான் யோகிகள் சொல்லிய சூட்சுமம். இதையே தற்கால அறிவியலும் சீரான மூச்சு பயிற்சிகளின் மூலம் சுவாச நோய்கள் வராமல் தடுப்பதுடன், உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை ஆரோக்கியத்துடன் வைத்துக் கொள்ளவும் உதவும் என்றும் கூறுகிறது. ஆகவே, உயிருக்கு ஆதாரமான மூச்சுக்காற்றான ஆக்சிஜனை மூச்சுப்பயிற்சியின் மூலம் நாம் முழுமையாக உடல் பெறும் படி செய்ய முடியும்.
மூச்சு பயிற்சியை பற்றி பல்வேறு நூல்கள் வந்துள்ளன. வெளிநாடுகளிலும் கூட இதனை தனியே கற்பிக்கும் பயிற்சி மையங்கள் வந்துவிட்டன. ஆனால் இங்கு தரப்படுகிற சில மூச்சு பயிற்சிகள் போதுமானவை. மிகவும் நன்மை தருபவை. இவற்றை முறைப்படி செய்யும் போது சுவாச மண்டலம் சீராக இயங்குவதுடன் இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவும் அதிகரிக்கிறது. இவற்றில் சில வகையான மூச்சு பயிற்சிகளை பார்க்கலாம்.
வயிற்று சுவாசம்
நாம் மூச்சை உள்ளிழுப்பதையும், வெளிவிடுவதையும் இயல்பாக கவனித்தால் குறிப்பாக வயிற்றின் மேல் இரண்டு உள்ளங்கைகளையும் வைத்து பார்த்தால் நமது மூச்சு இயங்குவதை உணர முடியும். சாதாரணமாக இப்படி இயங்கும் மூச்சை ஒரு குறிப்பிட்ட ஒத்திசைவில் செய்தால் அது வயிற்று சுவாசமாகும். அதாவது மூச்சை உள்ளிழுக்கும் போது வயிறானது வெளிப்புறமாக நன்கு வில் போல் விரிவடையும் படியாக ஆழமாக மூச்சை உள்ளிழுக்க வேண்டும். இந்த நிலையில் அதிகமான பிராணவாயு நுரையீரலின் கீழ் பாகங்களில் உள்ள காற்றறைகளில் சென்று நிரம்புகின்றன.
மீண்டும் மூச்சை வெளிவிடும் போது வயிறானது உள்நோக்கி குழியும் படி நுரையீரலில் இருக்கும் காற்றானது முழுமையாக வெளியில் செல்லும்படி மூச்சை வெளிவிட வேண்டும். இப்போது நுரையீரலின் கீழ்ப்பாகங்களில் தேங்கியுள்ள காற்றானது முழுமையாக வெளியேற்றப்பட்டு புதிதாக உள் நுழையும் தூய காற்றை ஏற்றுக் கொள்ளும் வகையில் காத்திருக்கும். இப்படியாக திரும்ப திரும்ப செய்ய வேண்டும். இந்த பயிற்சியின் போது மிகுந்த பிரயாசைப்பட்டு மூச்சை உள்ளிழுக்கவோ, வெளிவிடுவதோ கூடாது. இயல்பாக இருக்க வேண்டும்.
இந்த மூச்சு பயிற்சியை நின்று கொண்டோ, யோக ஆசனங்களில் ( வரும் தொடர்களில் ஆசனங்களை பார்க்கலாம்). வஜ்ராசனம், பத்மாசனம், சுகாசனம் போன்ற அமர்ந்த நிலை ஆசனங்களில் இருந்தோ செய்யலாம். 3 அல்லது முறை இந்த பயிற்சியை செய்யலாம். இந்த பயிற்சியின் போது மனம் வேறு திசையில் அலைபாயாத வண்ணம் இருக்க இரண்டு உள்ளங்கைகளையும் வயிற்றின் மேல் படும் படி வைத்து மூச்சு உள் நுழைவதையும், வெளியில் வருவதையும் கவனிக்க வேண்டும்.
இந்த சுவாச பயிற்சியின் மூலம் வயிற்றின் உள்உறுப்புகள் நன்றாக சுருங்கி விரிகின்றன. வயிற்று தசைகள் போதிய பலம் பெறுகின்றன. குடலின் கழிவுகள் நீங்கி குடல் சுத்தமடைகிறது. நுரையீரலின் அடிப்பகுதியில் உதரவிதானத்திற்கு மேலே அமர்ந்துள்ள நுரையீரலின் இடது மற்றும் வலது இதழ்களின் காற்று குமிழங்கள் மற்றும் நுண்ணிய இரத்த குழாய்கள் நன்கு விரிவடைகின்றன. பெண்கள் இந்த பயிற்சிகளை பத்மாசனத்தில் அமர்ந்து செய்வது கூடுதல் பலன்களை தருவதாக அமையும். இங்கு பத்மாசனம் செய்வது பற்றி பார்க்கலாம்.
பத்மாசனம்
'பத்ம' என்றால் தாமரை என்றொரு பெயர் உண்டு. அழகிய எப்பொழுதும் மலர்ந்த என்றும் சொல்லலாம். அதாவது தாமரை மலர் போன்று எப்பொழுதும் மலர்ந்த முகமாய் காட்சியளிக்க இந்த ஆசனம் உதவுகிறது. தண்ணீரின் அழுத்தத்தை தாண்டி தாமரை மலர் கம்பீரமாய் தனது இதழ்களை விரித்து காட்சியளிப்பது போல் முகமானது மிகவும் கம்பீரமாக காட்சியளிக்க பத்மாசனம் ஒரு கருவியாக இருக்கிறது. தாமரை மலர் தனது தண்டை நிமிர்த்தி தண்ணீரிலிருந்து நிற்பது போல், பத்து விரல்களையும் விரித்து முத்திரை பதித்து மலர்ந்த முகத்துடன் அமரும் முறையே பத்மாசனம்.
பத்மாசனம் செய்வதற்கு தளர்ந்த, மென்மையான, ஆடைகளை அணிய வேண்டும். பருத்தியால் செய்யப்பட்ட தரைவிரிப்பு நல்லது. இந்த விரிப்பில் கால்களை நீட்டியவாறு அமர்ந்து கொள்ளவும். முதலில் வலது காலை மடித்து, வலது பாதத்தை இடது தொடை மீது வயிற்றை ஒட்டியவாறு வைத்துக் கொள்ளுங்கள். அதன் பின் இடது காலை மடித்து இடது பாதத்தைத வலது தொடை மீது வயிற்றை ஒட்டியவாறு வைத்துக் கொள்ளுங்கள். உள்ளங்கை மற்றும் நீட்டிய விரல்கள் வெளியில் தெரியுமாறு புறங்கையை வலது முழங்கால் மற்றும் இடது புறங்கையை இடது முழங்காலின் மீது கைகளின் பெருவிரல் நுனி மற்றும் ஆட்காட்டி விரல் நுனியை வட்டமாக தொட்டு, இரண்டு கைகளிலும் சின் முத்திரை பதிக்கவும். நெஞ்சு மற்றும் முதுகுத்தண்டை நிமிர்த்தி, கண் இமைகளை மூடி, சீரான சுவாசத்தில் மனதை அலைபாயவிடாமல் வேறு எந்த சிந்தனை குறுக்கீடும் இன்றி இருக்கவும். சின் முத்திரை பிடித்து கைகளை மடிக்காது நேராக வைக்கவும்.
ஒரு நிமிடம் வரை இந்தப் பயிற்சியை செய்து பின் கண் இமைகளை திறந்து மெதுவாக கைவிரல்களை விடுவித்து அதன்பின் இடது காலை முதலிலும், வலது காலை அடுத்தும் பிரித்து கால்களை நீட்டி பத்மாசனத்திலிருந்து விடுபட வேண்டும். இது போல் 15 முதல் 30 நிமிடங்கள் இந்த பயிற்சியை செய்யுங்கள்.
பலன்கள்
பத்மாசனம் அனைத்து ஆசனங்களுக்கும் அடிப்படையான ஒரு ஆசனமாக இருக்கிறது. இந்த பயிற்சியால் பெண்களின் இடுப்பு பகுதி மற்றும் முழங்கால்கள் வலுவடைகிறது. மனம் அமைதி பெறுகிறது. தொடை, இடுப்பு மற்றும் உடலின் தேவையில்லாத கொழுப்பு கரைகிறது. கூன் முதுகு வராமல் தடுக்கிறது. பெண்கள், ஆண்கள், வயதானவர்கள் கூட எளிதாக செய்து அதிக பலன்களை பெறக்கூடிய ஆசனம் இது.
இதனை தியான முத்திரை என்றும் சொல்லலாம். இது யோக முத்திரை. ஆட்காட்டி விரலையும், பெருவிரலையும் அழுத்தம் அதிகம் தராமல் சீராக அழுத்தினால் மூளையின் திறன் அதிகரிக்கும். நினைவாற்றல் வளரும். படபடப்பு, மனதை ஒருநிலைப்படுத்த முடியாமை, தூக்கமின்மை, சோர்வு போன்ற நிலைகள் நீங்கும்.
No comments:
Post a Comment