Lord Siva

Lord Siva

Saturday, 12 November 2011

மூலிகை மருத்துவம்: ஏழாம் சத்து



நவம்பர் 12, 2011 

சித்த மருத்துவத்தில் உடலின் சத்துக்களை ஏழு வகைகளாக வகைப்படுத்தி உள்ளனர். சாரம் என்னும் முதல் சத்தானது நாம் உண்ணும் உணவிலிருந்து முதலில் பிரிக்கப்படும் திரவச் சத்தாகவும், செந்நீர் என்னும் இரண்டாம் சத்தானது ரத்தமாகவும், ஊண் என்னும் மூன்றாம் சத்தானது தசைகளாகவும், கொழுப்பு என்னும் நான்காம் சத்தானது கொழுப்பு
செல்களாகவும் என்பு என்னும் ஐந்தாம் சத்தானது எலும்பு செல்களாகவும், மூளை என்னும் ஆறாம் சத்தானது எலும்பு மஜ்ஜை மற்றும் நரம்புசெல்களாகவும், சுக்கிலசுரோணிதம்
என்னும் ஏழாம் சத்தானது ஆண் மற்றும் பெண்களின் விந்தணு மற்றும் சினை முட்டையாகவும் படிப்படியாக, ஒன்றன்பின் ஒன்றாக, ஒன்றிலிருந்து மற்றொன்றாக தோன்றி, உருவெடுக்கிறது. நமக்கு ஏழாவது சத்தாக தோன்றும் ஆண், பெண் இனப்பெருக்க அணுக்கள் நமது ஒவ்வொரு செல்லிலும் உருவேற்றப்பட்டு, இறுதியாக தோன்றுவதால், நமது சந்ததி யினரும் நம்மைப் போலவே உருவத்திலும், செயலிலும் ஒரே மாதிரி திகழ்கின்றனர். இவ்வளவு தனித்தன்மை வாய்ந்த இனப்பெருக்க அணுக்கள், ஆரோக்கியமாக இருந்தால்தான் மகப்பேறு எளிதில் அமையும். ஆரோக்கியமான குழந்தைப்பேறும் உண்டாகும். ஆண், பெண் என இருவருக்கும் ஏழாம் சத்தாக தோன்றும் இனப்பெருக்க அணுக்கள் மற்ற ஆறு சத்துக்களின் குணங்களையும், ஒன்றடக்கியுள்ளதால், இதை போற்றி பாதுகாக்க வேண்டுமென சித்த மருத்துவ நூல்கள் குறிப்பிடுகின்றன. பெண்ணின் சினைப்பை மற்றும் ஆணின் விதைப்பை ஆகியவற்றிற்கு செல்லும் ரத்த ஓட்டம் சீராக இருக்க வேண்டியது அவசியம். ஆர்ஜினின், லியுசின் போன்ற சத்துகள் நுண்ணிய குழல்களின் ரத்த ஓட்டத்தை சரிசெய்கின்றன.
பெரும்பாலான பழங்களில் இதுபோன்ற சத்துக்கள் காணப்பட்டாலும், நீர்ச் சத்துள்ள பழங்களில் இவை ஏராளமாக காணப்படுகின்றன. ருசியாக இருப்பது மட்டுமின்றி, உடம்பில் நீர்ச்சத்தை தேக்கிவைத்து, ஆண்மையை அதிகரித்து, இனப்பெருக்க உறுப்புகளில் தோன்றும் ரத்தக்குழாய் அடைப்புகளை நீக்கி, ஆண், பெண் இனப்பெருக்க சத்துக்களை அதிகரிக்கும் அற்புத பழம் முலாம்பழம். குக்குமிஸ் மெலோ என்ற தாவரவியல் பெயர் கொண்ட குக்கர்பிட்டேசியே குடும்பத்தைச் சேர்ந்த கொடிகளின் பழங்களே முலாம்பழம் என்றும், கிர்ணிப்பழம் என்றும், மஸ்க்மெலன் என்றும் அழைக்கப்படுகின்றன. இந்த பழச்சாற்றிலுள்ள சிட்ருலின், ஆர்ஜினின் போன்ற பொருட்கள் ரத்தத்தில் ஆக்சிஜன் அளவை அதிகப்படுத்தி, நுண்ணிய குழல்களுக்கு ரத்த ஓட்டத்தை ஏற்படுத்தி, இனப்பெருக்க அணுக்களின் உற்பத்தியை அதிகப்படுத்துகின்றன. இதன் பழச்சதைகளிலுள்ள பெக்டின், கரோட்டினாய்டு ஆகியன செல் உற்பத்தியை தூண்டுகின்றன.
முலாம்பழத்தை வெட்டி, உள்ளிருக்கும் சதையை நீக்கி வைத்துக் கொள்ள வேண்டும். நன்னாரி வேர்ப்பட்டையை உரித்து, நீரில் போட்டு கொதிக்க வைத்து, வடிகட்டி எடுத்துக்கொள்ள வேண்டும். சூடு ஆறியபின் முலாம்பழச் சதையுடன் கலந்து, தேவையெனில் சீனி சேர்த்து குடித்துவர உடல் குளிர்ச்சியடையும். மென்மையான உறுப்புகளுக்கு செல்ல வேண்டிய ரத்த ஓட்டம் அதிகரிக்கும். முலாம்பழச் சதையை முழுவதுமாகவோ, பழச்சாறு போல் செய்தோ அடிக்கடி சாப்பிட்டுவரலாம். கோடைக்காலத்தில் தோன்றும் உடல் சோர்வுக்கு நன்கு பலனளிக்கும்.
ஆண்கள் தலையில் குடுமி வைத்தலும், பெண்கள் கொண்டை போடுதலும் தமிழினத்தின் பண்பாடு. பெண்கள் விறகடுப்பில் குனிந்து சமையல் செய்யும்பொழுதும், ஆண்கள் காடு, மேடுகளில் அலைந்து வெயிலில் வேலை பார்க்கும்பொழுதும், வெப்பத் தாக்குதலினால் மூளையின் பின் கீழ்ப்பகுதியான முகுளம் பாதிக்கப்படாமல் இருப்பதற்கு கொண்டையும் குடுமியும் உதவுகிறது. வெப்பத் தாக்குதலினால் முகுளம் பாதிக்கப்பட்டால் மயக்கமும், மரணமும் ஏற்படும்.
சன் ஸ்ட்ரோக் அல்லது ஹீட் ஸ்ட்ரோக் என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் இந்த வெப்பத் தாக்குதல் வெயிலில் அலைபவர்களுக்கும் நீர் அருந்த முடியாமல் வெப்பத்தில் பணிபுரிபவர்களுக்கும் அடிக்கடி ஏற்படுகிறது. பெண்கள் கொண்டை போடுவதால் அடுப்பு அணலின் வெப்பம் தலையை தாக்காமல் இருப்பதுடன், முடிந்த கூந்தலினால் உணவில் முடி முதலிய பொருட்கள் விழுவதும் தடுக்கப்படுகிறது.
பல நாடுகளுக்கு கால்நடையாகவே நடந்து சென்ற சித்தர்களும், கோயில்களின் கருவறையில் வெப்பமான இடத்தில் பணிபுரியும் அர்ச்சகர்களும் குடுமி போட்டுக் கொண்டதன் ரகசியம் இதுதான். மேற்கத்திய நாகரீகத்தின் அடையாளமாக முடியை இழந்தது மட்டுமின்றி, மூளையையும் இழந்து, சிந்திக்க மறுத்ததால், மூடநம்பிக்கை என நாம் எண்ணிய பல பாரம்பரிய கருத்துக்களின் அறிவியல் பூர்வமான உண்மையை அறியமுடியாமல் போய்விட்டது.

No comments:

Post a Comment