Lord Siva

Lord Siva

Friday, 29 June 2012

உயிர் மூச்சு!

Posted On June 29,2012,By Muthukumar
இரும்புத் துண்டு ஒன்றைத் திறந்தவெளியில் போட்டு வைத்தால் அது காற்றுப் பட்டுத் துருப்பிடிக்கிறது. காற்றில் உள்ள ஆக்சிஜன் என்ற பிராணவாயுவும், இரும்பும் சேர்வதால் ஏற்படும் இரும்பு ஆக்சைடையே நாம் துரு என்கிறோம். இவ்வாறு ஆக்சிஜனுடன் சேர்வதற்கு `ஆக்சிடேஜன்' என்று பெயர். இது ரசாயன மாற்றமாகும்.
காற்று என்பது ஒரு கலவைப் பொருள். ஆக்சிஜன், நைட்ரஜன், நீராவி, கரியமில வாயு எனப்படும் கார்பன்-டை-ஆக்சைடு ஆகியவற்றின் கலவையே காற்று. ஆனால் துரு என்பது கூட்டுப் பொருள். இரும்பும், ஆக்சிஜனும் சேர்ந்து புதுப் பொருளே உண்டாகிவிடுகிறது. எனவே இதை ரசாயன மாற்றம் என்கிறோம். செல்களில் இத்தகைய ரசாயன மாற்றங்கள் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. `ஆக்சிடேஷன்' என்பது செல்களில் ஏற்படும் ரசாயன மாற்றங்களில் முக் கியமானதாகும். நாம் இந்த ஆக்சிடேஷனுக்குத் தேவையான ஆக்சிஜனை நமது மூச்சு மண்டலத்தின் மூலம் பெறுகிறோம்.
செல்களில் ஏற்படும் ரசாயன நிகழ்வுகளில் கார்பன்-டை-ஆக்சைடு உண்டாகிறது. இதை உடலிலிருந்து வெளியேற்ற வேண்டும். மூச்சு மண்டலம் இதற்கு வாய்ப்பாக அமைகிறது.
மனிதனின் உயிர், மூச்சிலே அடங்கியிருக்கிறது என்பது முற்றிலும் உண்மை. நாம் உள்ளே வாங்கும் காற்றிலிருந்து ஆக்சிஜன் ரத்தக் குழாய் வழியாக உடல் முழுவதற்கும் கிடைக்கிறது. வெளியே விடும் மூச்சு மூலம் கார்பன்-டை-ஆக்சைடு வெளியேறுகிறது. ஒருவரது குரல் வளையைப் பிடித்து நெருக்கி இந்த சுவாச நிகழ்ச்சி நடைபெறுவதைத் தடுத்தால் அவர் சில நிமிடங்களில் இறந்துவிடுவார்.
ஆக்சிஜன் வேண்டும் என்பதற்காக நாம் சுவாசிப்பதாக பொதுவாக எண்ணலாம். ஆனால் உண்மையில் சுவாச நிகழ்ச்சிக்குத் தூண்டுகோல், கார்பன்-டை-ஆக்சைடை வெளியேற்ற வேண்டிய நிர்ப்பந்தமே.
அது எப்படி என்பதைப் பார்க்கலாம். செல்களில் உற்பத்தியாகும் கார்பன்-டை-ஆக்சைடை ரத்தம் எடுத்துச் செல்கிறது.
கழுத்தின் மேற்புறத்தில் கபாலக் குழியின் அடியில் உள்ளதும், மூளையின் ஒரு பகுதியுமான முகுளத்தின் செல்கள், அசுத்த ரத்தம் பட்டவுடன் தந்திச் செய்தி அனுப்புவதைப் போல நரம்பு மூலம் மார்பைச் சுற்றியுள்ள தசைகளுக்குச் செய்தி அனுப்புகிறது. உடனே அந்தத் தசைகள் சுருங்குகின்றன. அதனால் விலா எலும்புகள் மேலே தூக்கப்படுகின்றன. உதரவிதானம் கீழே இறங்குகிறது. மார்பு எலும்பு முன்னே தள்ளப்படுகிறது.
மொத்தத்தில், மார்பு அறை விசாலமடைந்து, நுரையீரல்கள் விரிகின்றன. காற்று உள்ளே செல்கிறது. பிறகு மார்புத் தசைகள் தளர்கின்றன. விலா எலும்புகள் தாழ்கின்றன. உதரவிதானம் மேலே செல்கிறது. மார்பு எலும்பு பின்னடைகிறது. மார்பு அறை சுருங்குகிறது. இவ்வாறு முறையாக, உட்சுவாச, வெளிச்சுவாச நிகழ்ச்சி நடைபெறுகிறது. கார்பன்-டை-ஆக்சைடு முகுளத்தைத் தூண்டுவதே சுவாசத்துக்குக் காரணம். ஆக்சிஜன் தேவை என்பதால் நாம் மூச்சு விடவில்லை. நமது செல்கள் கார்பன்-டை-ஆக்சைடை உற்பத்தி செய்வதால் நாம் சுவாசிக்கிறோம்.
வழக்கமாக, வயது வந்தோர் இரவும் பகலும் நிமிடம் ஒன்றுக்கு 18 முறை மூச்சை இழுத்து வெளியே விடுவார்கள்.
ஓடி விளையாடும் சிறுவர்கள் ஆழமாகவும், விரைவாகவும் சுவாசிப்பதைக் கண்டிருப்பீர்கள். அதன் காரணம் என்ன தெரியுமா? ஓடும்போது செல்களின் ரசாயன நிகழ்வும் துரிதமாக நடைபெறுகிறது. எனவே அதிகமாக கார்பன்-டை-ஆக்சைடு உற்பத்தியாகிறது. அதனால் முகுளத்தின் செல்கள் அதிகமான தடவைகள் செய்தி அனுப்புகின்றன. எனவே சுவாசத்தின் வேகம் அதிகரிக்கிறது.
வாய் வழியாக சுவாசிப்பது சரியா? அது தவறு. காரணம், அதன் மூலம் தூசும் உள்ளே சென்றுவிடும். ஆனால் அதிகமான மூச்சுக் காற்றுத் தேவைப்படும்போது இயல்பாகவே வாய் வழியாகவும் சுவாசிக்கிறோம்.

No comments:

Post a Comment