Lord Siva

Lord Siva

Saturday, 30 June 2012

சோகம் ஏற்படுத்தும் உடலியல் பாதிப்புகள்

Posted On June 30,2012,By Muthukumar
தன் துணையை இழந்த மறு வினாடியே உயிர் துறந்து இறந்துபோகுமாம் அன்றில் பறவை! இது ஒருவர் மற்றவர் மீது வைத்திருக்கும் உள்ளார்ந்த அன்பு அல்லது காதல் எவ்வளவு உண்மையானது, வலிமையானது என்பதை உணர்த்த சுட்டிக் காட்டப்படும் உதாரணங்களில் ஒன்று. இந்த உன்னதமான பண்பு பறவை இனத்துக்கு மட்டுமல்லாது மனிதர்களுக்கும் உரியது.
உதாரணமாக, காதலர்களில் ஒருவர் இறந்த துக்கம் தாளாமல் மற்றொருவர் இறந்துபோவது அல்லது கணவன்மனைவி இருவரில் ஒருவர் இறந்தால் மற்றொருவர் இறந்துபோவது குறித்த செய்திகளையும், சினிமாக் காட்சிகளையும் நாம் பார்த்திருப்போம்.
இந்தக் கூற்று எவ்வளவு உண்மையானது, இதற்கான அறிவியல் ரீதியிலான காரணங்கள் என்ன, ஒருவரின் இழப்பு மற்றொருவரின் உயிரை பறிக்கக்கூடிய அளவிற்கு வலிமையானதா போன்ற பல்வேறு சந்தேகங்களும், கேள்விகளும் நம்மில் பலருக்கும் இருக்கக்கூடும். ஆனால் அவற்றுக்கான விடைகள் மட்டும் இதுவரை தெரியவில்லை என்பதுதான் நிதர்சனம்.
ஆனால், இதேபோன்ற கேள்விகளுக்கான விடையைத் தேடி ஆய்வுகளை மேற்கொண்ட இங்கிலாந்து நாட்டின் பிர்மிங்காம் பல்கலைக்கழக ஆய்வாளர்களுக்கு ஆச்சரியமான ஆனால் ஆதாரப்பூர்வமான ஒரு மருத்துவ உண்மை தெரியவந்திருக்கிறது.
அது என்னவென்றால், அன்புக்குரிய ஒருவரை இழப்பதால் ஏற்படும் துக்கமானது உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியின் குறிப்பிட்ட பாகங்களை செயலிழக்கச் செய்து விடுகிறது. இதனால் பாக்டீரியா தொற்றுகளை எதிர்த்து போராடும் உடலின் நோய் எதிர்ப்பு திறன் குறைந்து விடுகிறது. விளைவு, பல்வேறு தொற்று நோய்கள் ஏற்பட்டு உடல் நலிந்து மரணம் நிகழ்கிறது என்று விளக்குகிறார் மூத்த ஆய்வாளர் பேராசிரியர் ஜேனட் லார்டு.
குறிப்பிட்டுச் சொல்வதானால், ரத்தத்தில் உள்ள நியூட்ரோபில் எனப்படும் ஒருவகை வெள்ளை ரத்த அணுக்கள் பாக்டீரியா தொற்றுகளான நிமோனியா போன்றவற்றை எதிர்க்கும் வேலையைச் செய்கின்றன. ஆனால் ஒருவருடைய இழப்பினால் உண்டாகும் துக்கம் ஏற்படுத்தும் மன உளைச்சலும், மனச்சோர்வும் நியூட்ரோபில்களின் செயல்பாட்டினை பாதிக்கின்றன. இதனாலேயே பாக்டீரியா தொற்றுகளுக்கு எதிரான உடலின் நோய் எதிர்ப்புத் திறன் குறைந்து விடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
முக்கியமாக, இந்த வகையான துக்கத்தினால் ஏற்படும் விளைவுகள் வயதானவர்களை அதிகப்படியாக பாதிக்கிறதாம். ஏனென்றால், பொதுவாக துக்கத்தினால் உண்டாகும் விளைவுகளைச் சரிசெய்யும் திறனுள்ள ஒரு ஹார்மோனை உடல் உற்பத்தி செய்கிறது. ஆனால், இந்த ஹார்மோனை உற்பத்தி செய்யும் திறன் வயதாக வயதாக குறைந்து போகிறது. இதனாலேயே வயதானவர்கள் ஆரோக்கியமானவர்களாக இருந்தாலும்கூட துக்கத்தின் விளைவுகள் அவர்களை மிகவும் அதிகப்படியாக பாதிக்கிறது என்கிறார் பேராசிரியர் லார்டு.
இந்த ஆய்வுக்காக, 65 வயதுக்கு மேற்பட்ட வயதுடைய 48 ஆரோக்கியமான மனிதர்
களின் நோய் எதிர்ப்புச் சக்தி மற்றும் ஹார்மோன் அளவுகள் பரிசோதிக்கப்பட்டன. இவர்களில் பாதிப் பேர் ஆய்வுக்கு முந்தைய 12 மாதங்களில் தங்களின் ஆருயிர் துணைகளை இழந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஆய்வின் முடிவில் ஆரோக்கியமானவர்களுடன் ஒப்பிடுகையில், துணையை இழந்தவர்களின் ரத்தத்தில் உள்ள நியூட்ரோபில்களின் பாக்டீரியா எதிர்ப்பு திறன் வெகுவாக குறைந்திருந்தது தெரியவந்தது. மேலும், மன உளைச்சலுக்கு காரணமான கார்ட்டிசோல் எனப்படும் ஹார்மோன் அளவுகள் அதிகரித்திருந்ததும் கண்டறியப்பட்டது.
கார்ட்டிசோல் ஹார்மோன் நியூட்ரோபில் களின் செயல்பாடுகளைப் பாதித்து அவற்றின் செயல்திறனைக் குறைத்துவிடும் என்பது இதற்கு முந்தைய ஆய்வுகளில் கண்டறியப்பட்டிருக்கிறது. ஆனால், பெரும்பாலான இளைஞர்களின் உடலில் கார்ட்டிசோலுக்கு எதிராக செயல்படும் ஞிபிணிகி எனும் மற்றுமொரு ஹார்மோன் சுரப்பதால், இழந்த எதிர்ப்புச் சக்தியை அவர்கள் மீண்டும் பெற்றுவிடுகிறார்கள். ஆனால், வயதாக வயதாக ஞிபிணிகி ஹார்மோன் உற்பத்தி குறைந்து போவதால், துக்கத்தால் இழந்த எதிர்ப்புச் சக்தியை வயதானவர்களால் மீண்டும் பெற முடிவதில்லை. இதனால் நோய்வாய்ப்பட்டு அதிகப்படியாக பாதிக்கப்படுகிறார்கள் என்கிறது உயிரியல்.
இது ஒருபுறமிருக்க, இடுப்பு முறிவினாலும் இம்மாதிரியான ஹார்மோன் பிரச்சினைகள் ஏற்படுகிறது என்பதும் இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. இதன்மூலம், 80 வயதுக்கு மேலானவர்கள் இடுப்பு முறிவினால் பாதிக்கப்பட்ட ஒரு வருடத்துக்குள் இறந்துபோவதற்கான காரணம் கண்டறியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment