Lord Siva

Lord Siva

Friday 30 March 2012

அன்பா இருங்க, மன அழுத்தம் போகும்!

Posted On March 30,2012,By Muthukumar
மன அழுத்தம், டென்சன் என்ற வார்த்தைகள் இன்றைக்கு அதிகம் பயன்படுத்தப்படும் வார்த்தைகளாகி வருகிறது. இதற்கு காரணம் மதிப்பெண்களுக்கா மாணவர்களுக்கு கொடுக்கப்படும் அழுத்தம், வாழ்க்கைப் பற்றிய பயமும் இள வயது பிள்ளைகளின் மன அழுத்தத்திற்கு காரணமாகிறது. இதனால் எதிர்மறை எண்ணங்களும், கவலை, பயம் போன்றவையும் ஏற்படுகின்றன. எனவே மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளிடமும், இளம் வயதினரிடமும் அன்பாக பழகினால் அவர்களை மன அழுத்தத்தில் இருந்து விடுவிக்கலாம் என்று உளவியல் வல்லுநர்கள் ஆலோசனை தெரிவித்துள்ளனர்.
அதிக சந்தோசம் அதிக கவலை
பெரும்பாலான குழந்தைகள் அதிக சந்தோசம், அதிக கவலையினால் பீடிக்கப்படுகின்றனர். இதற்கு மேனிக் டிப்ரசன் என்று மருத்துவ உலகினர் பெயரிட்டுள்ளனர். இதனால் குழந்தைகளின் மூட் எந்த நேரத்தில் எப்படி மாறும் என்று கண்டுபிடிக்க முடியாததாகிவிடுகிறது. நார்மல் போல தெரிந்தாலும், ஒருசில சமயங்களில் அதீத மகிழ்ச்சியுடன் உற்சாகமாக திரிகின்றனர். சில சமயங்களில் அதீத கவலையுடன் சோகத்தில் மூழ்கி
விடுகின்றனர். மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் நண்பர்களுடன் உரையாடுவதை கூட விரும்புவதில்லை.தனிமையில் அமர்ந்து எதையாவது சிந்தித்த ண்ணம் இருக்கின்றனர். இதனால் பள்ளிகளில் கவனிக்கும் திறன் குறைகிறது. எனவே குழந்தைகளின் எதிர்காலத்தை பாதிக்கும் இந்த மன அழுத்தத்தை களைவது அவசியம் என்று தெரிவிக்கின்றனர் உளவியல் வல்லுநர்கள்.
எளிமையான எதிர்பார்ப்பு
கவுன்சிலிங், உளவியல் ரீதியான சிகிச்சை போன்றவற்றையும் அளிக்கலாம். அதேசமயம் இள வயதினருக்கு குரூப் சைக்கோ தெரபி என்னும் சிகிச்சை முறையினை கையாண்டு அவர்களை மன அழுத்தத்தில் இருந்து விடுவிக்கலாம் என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். வாழ்க்கையை எளிமையான எதிர்பார்ப்புகளுடன் நடத்த பழக்க வேண்டும். சின்னச் சின்ன சந்தோஷங்களையும் கொண்டாடுவது போன்ற பழக்கங்களை சிறு வயது முதல் வழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் உளவியல் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
சத்தான உணவு அவசியம்
குழந்தைகளுக்கு கொடுக்கும் உணவுகளில் இருந்து உடலுக்கு போதுமான சத்து கிடைக்கிறதா, உழைப்புக்கு ஏற்ற உணவு கொடுக்கப்படுகிறதா என்பதை உணவியல் வல்லுநர்களிடம் ஆலோசகரிடம் உணவு முறையை அறிந்து கொள்ள வேண்டும். ஏனெனில் தவறான உணவு பழக்கம் வாழ்க்கை முறை இரண்டையும் சரி செய்வதன் மூலம் டென்ஷனை விரட்ட முடியும். இதே போல் பாரம்பரிய உணவுகளை விட்டுவிட்டு உடல் நலத்துக்கு கேடு விளைவிக்கும் மேற்கத்திய உணவுகள் மீதான ஆர்வத்தை குறைப்பது மிகவும் அவசியம் என்கின்றனர் உணவியல் வல்லுநர்கள்.
குழந்தைகளுக்கும் துரித உணவு மற்றும் உடல்நலத்துக்கு ஒவ்வாத புதிய புதிய உணவுகளை சாப்பிடும் பழக்கத்தை நாமே வளர்க்காமல், அவர்களுக்கு பிடித்த ஆரோக்கியமான உணவுகளை அவர்களுடன் சேர்ந்து வீட்டிலேயே சமைத்து சாப்பிடலாம். இதன் மூலம் சத்தான உணவுப் பழக்கம் ஏற்படுவதுடன் தேவையற்ற உடல் பிரச்னைகளை தடுக்க முடியும். அஜீரணம், உடல் எடை அதிகரிப்பு, குடல் மற்றும் வயிற்றுப் புண் ஏற்படுதல், போன்றவற்றை தடுக்கலாம்.
நட்பான சூழல் அவசியம்
வயதுக்கு ஏற்ற உணவுடன் பள்ளிக் குழந்தைகள் ஏதாவது ஒரு விளையாட்டில் பயிற்சி செய்வதன் மூலம் உடல் வலிமை பெறும். உடல் எடை அதிகரிக்காது. டென்ஷனான மனநிலை மாறும். டீன் ஏஜ் பருவத்தில் உடல் மற்றும் மனதில் ஏற்படும் குழப்பங்களின் காரணமாக டென்ஷன் வர வாய்ப்புள்ளது. எனவே இளம் வயதிலே வாக்கிங் செல்லும் பழக்கத்தை ஏற்படுத்தலாம். மேலும் டீன் ஏஜ் குழந்தைகள் தங்களது பிரச்னைகளை மனம் விட்டு பேச வீட்டில் பெற்றோர் நட்பான சூழலை ஏற்படுத்தி தர வேண்டியதும் முக்கியம்.
நோய்கள் தரும் மன அழுத்தம்
குழந்தைகளின் உடலில் என்ன நோய் உள்ளது என்பதை கண்டறிய வேண்டும். வயதுக்கு ஏற்ப குழந்தைகளுக்கு சத்துக் குறைபாடு, ரத்தத்தத்தில் ஹீமோகுளோபின் குறைவு பிரச்னைகள் இருக்க வாய்ப்புள்ளது. இவற்றை மருத்துவரின் ஆலோசனைப்படி கண்டறிந்து சிகிச்சை எடுப்பதன் மூலம் நோய்களால் உண்டாகும் தேவையற்ற டென்ஷனை தடுக்கலாம். அவற்றை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டால் அதுவே மன அழுத்தமாக மாறிவிடும். இதனால் உடலின் எதிர்ப்பு சக்தி குறைந்து மற்ற நோய்களின் தீவிரத்தை அதிகரிக்கும். தலைவலி, காய்ச்சல், ஜலதோஷம் உள்ளிட்ட நோய்கள் உடலை அடிக்கடி தாக்கும் வாய்ப்பாக அமையும்.
நேரத்தை திட்டமிடாததும் டென்ஷனுக்கு அடிப்படை காரணமாக இருக்கிறது. வேலைகளை பகிர்ந்து கொள்வது, குறித்த நேரத்தில் வேலைகளை முடிப்பது மற்றும் அடுத்தவர் மீதான எதிர்பார்ப்புகளை குறைத்துக் கொள்வது, அடுத்தவர் சுதந்திரத்தில் தலையிடாமல் இருப்பது போன்றவற்றின் மூலம் மட்டுமே மனதை இயல்பாக வைத்திருக்க முடியும். இந்த பழக்கங்களை சிறு வயது முதலே பழக்க வேண்டும் என்கின்றனர் உளவியல் வல்லுநர்கள் இதன் மூலம் மன அழுத்தம் ஏற்படுவதில் இருந்து குழந்தைகளை காக்க முடியும் என்பது உளவியல் வல்லுநர்களின் கருத்தாகும்.

No comments:

Post a Comment