தாய்பால் சுரப்பை அதிகரிக்க என்ன செய்யலாம்
குழந்தை பிறந்ததும் குழந்தைக்கு கொடுக்கப்படும் முதல் உணவாக இருப்பது தாய்பால் தான். தாய்பால் சாப்பிடும் குழந்தைகள் ஆரோக்கியமாக வளர்வதோடு மட்டுமல்லாமல் நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும் சக்தி தாய்பாலில் இருக்கிறது… தாய்பால் கொடுக்கும் தாய்மார்கள் தினமும் 600 கலோரியை இழக்கக்கூடும். ஆதலால் சத்தான கீரை, காய்கறிகள், பழங்கள், புரதம் நிறைந்த பொருட்கள் நீர் போன்றவற்றை சரியான விகிதத்தில் எடுத்து வந்தால் தாய்பால் சுரப்பில் ஏற்படுகின்ற கலோரி இழப்புகளை ஈடு செய்து விடும். குழந்தையானது நோயிலிருந்து விடுபடுவதற்கான அனைத்து சத்துகளும் தாய்பாலில்
இருக்கிறது ஆதலால் தான் மருத்துவர்கள் தாய்பால் கொடுக்க வேண்டும் என அறிவுறுத்துகின்றனர். பிரசவத்தை எதிர்நோக்கி காத்திருக்கும் கர்ப்பிணி பெண்களுக்கு பல சந்தேகங்கள் உண்டாகும். அவற்றில் முக்கியமானது தாய்பால் சுரப்பு பொதுவாக குழந்தை பெற்றெடுத்த ஒரு ஆரோக்கியமான பெண்ணுக்கு சுமார் 850மி.லி தாய்பால் தினமும் சுரக்கும். பால் சுரப்பை தூண்டுவதற்கும் அதிகப்படுத்துவதற்கும் நிறைய மூலிகை மருந்துகள் உள்ளன அவை என்னவென்று பார்க்கலாம். ஏலம்-3பங்கு,திப்பிலி-4பங்கு, அதிமதுரம்-6 பங்கு, ஆகியவற்றை எடுத்து இடித்து பொடி செய்து 12 பங்கு நாட்டுச் சர்க்கரை சேர்த்து இஞ்சியின் மேல் தோல் நீக்கி உலர்த்திய தூள் 1 பங்கு சேர்த்து பாலுடன் கலந்து தினமும் ஒரு வேளை காலையில் உட்கொள்ளவேண்டும். நிலப்பூசணிச் சாறுடன் மல்லி, வெந்தயம், சீரகம், நாட்டுச்சர்க்கரை கலந்து சாப்பிட பால் அதிகமாக சுரக்கும். 30-60 மி.லி அருகம்புல் சாற்றை தினமும் காலையில் குடித்து வர பால் சுரப்பு அதிகமாகும். அதிகம் பூண்டை சேர்த்து தயாரிக்கப்பட்ட சூப் மிதமான சூட்டுடன் அருந்தி வந்தால் பால் சுரப்பு நன்றாக இருக்கும். பசுமையாகவுள்ள கீரைகளின் சூப் அருந்தி வந்தால் பால் சுரக்கும். கேழ்வரகை முளைக்கட்டி இடித்து கஞ்சியாக செய்து குடிக்க வேண்டும். இதில் முளைக்கட்டிய வெந்தயப்பொடியை சேர்த்து குடித்தால் பால் சுரப்பு அதிகரிக்கும். கடலில் கிடைக்கும் பால் சுறா மீனுடன் பூண்டு சேர்த்து புட்டு போல் உண்டால் பால் சுரப்பு அதிகமாகும். ஆலம் விழுதும், ஆலம் விதையும் சம எடை எடுத்து பாலில் காய்ச்சி உண்டால் பால் சுரப்பு நன்றாக இருக்கும். ஒரு தம்ளர் பசும்பாலில் 4பூண்டு பல் சேர்த்து நன்றாக காய்ச்சி தினமும் முன்று வேளை அருந்தி வந்தால் தேவையான பால் சுரக்கும்.