Lord Siva

Lord Siva

Sunday 4 September 2011

கொள்ளுக்காய் வேளை,புங்கமரம்,நெல்லி,சீந்தில் கொடி


                              கொள்ளுக்காய் வேளை

Posted On September 4,By Muthukumar



கொள்ளுக்காய் வேளை.
1. மூலிகையின் பெயர் -: கொள்ளுக்காய் வேளை.

2. தாவரப்பெயர் -:
TEPHRUSIA PURPUREA.
3. தாவரக்குடும்பம் -:
FABACEAE.
4. வேறு பெயர்கள் -: சிவ சக்தி மூலிகை.
Wild Indigo.
5. பயன் தரும் பாகங்கள் -: இலை, வேர்,பட்டை, விதை முதலியன.

6. வளரில்பு -: கொள்ளுக்காய் வேளை கொழுஞ்சி வகையைச்சேர்ந்தது. இதன் பிறப்பிடம் ஆஸ்திரேலியா- மடகாஸ்கர், பின் ஆப்பிரிக்கா, ஆசியா, இந்தியத் தீவுகள், ஓமன்,தென் அரேபியா, ஏமன் வட அமரிக்கா தென் அமரிக்காவில பிரேசில் போன்ற நாடுகளில் காணப்பட்டது. தமிழ் நாட்டில் சாலையோரங்களில் தானாக வளரும் சிறு செடியினம். நெல்லிற்கு அடியுரமாகப் பயன்படும். இது சிறகுக் கூட்டிலைகளையும் உச்சியில் கொத்தான செந்நீல மலர்களையும், தட்டையான வெடிக்கக்கூடிய கனிகளையும் உடைய தரிசு நிலங்களிலும் காணப்படும் சிறு செடி.. இது சிறந்த மருத்துவ குணமுடையது. எதிர்பாற்றலும் ஊட்டமும் கொடுக்கக்கூடியது. விதை மூலம் இனப் பெருக்கம் செய்யப்படுகிறது.

7.மருத்துவப் பயன்கள் -: இதன் வேர், பட்டை, இலை, விதை ஆகியவை மருத்துவப் பயனுடையது. கோழையகற்றுதல், மலத்தை இளக்கும், தாது ஊக்கமூட்டும், சீதமகற்றும், பூச்சியை வெளியேற்றும். வாயுவை நீக்கும். நரம்பு மண்டலத்தை ஊட்டமுடைய தாக்கும், விடத்தை முறிக்கும், குடல் புண் குணமாகும், சிறுநீர் பெருக்கும், வீக்கக் கட்டிகளைக் கரைக்கும், ஆஸ்த்துமாவைப் போக்கும், இரத்த மூலவியாதியைப் போக்கும், மேக வயாதி, இருதய நோய், குட்டம் ஆகிய வியாதிகளைக் குணமாக்க வல்லது.

இதன் வேரை இடித்துச் சூரணமாகச் செய்து உக்கா அல்லது சிலிமியில் வைத்து நெருப்பிட்டுப் புகையை உள்ளுக்கு இழுக்க அதிக கபத்தினாலுண்டான இருமல், இரைப்பு, நெஞ்சடைப்பு இவை போம்.

இதன் வேருடன் சம அளவு மஞ்சள் கூட்டி அரிசி கழுவி எடுத்த சலம் அல்லது பசுவின் பால் விட்டு அரைத்துக் கண்ட மாலையினாலுண்டான வீக்கத்திற்குப் போடக் குணமாகும்.

10 கிராம் வேருடன் 5 கிராம் மிளகு சிதைத்து அரை லிட்டர் நீரிலிட்டு 100 மில்லியாக்க் காச்சி 50 மி.லி. அளவாகக் காலை மாலை தினம் இரு வேளை 5 அல்லது 7 நாள் கொடுக்கப் பித்த சம்பந்தமான ரோகங்கள், மண்ணீரல், கல்லீரல், குண்டிக்காய் இவற்றில் உண்டான வீக்கம், வயிற்று வலி, அஜீரணப்பேதி ஆகியவை போம்.

இதன் 2 கிராம் வேரை மோர் விட்டு அரைத்துக் கொடுக்க வீக்கம், பாண்டு, இரத்தக் கெடுதலினாலுண்டாகும் முகப்பரு, கட்டி, இராஜப் பிளவை முதலியன குணமாகும்.

இதன் வேரைக் கியாழமிட்டு உள்ளுக்குக் கொடுக்க குன்மம், போம். இந்த கியாழத்தைக் கொண்டு வாய் கொப்பளித்து வர வாய் ரணம், பல் வலி ஆகியவை தீரும்.
‘ வாதமிக்க தென்பார்க்கும், வாய்வறட்சி என்பார்க்கும்
மீதந்த மூல நோய் என்பார்க்கும் - ஓதமுற்ற
கொள்ளுக்காதார கபந்தோன்றிய தென்பார்க்குமொரு
கொள்ளுக்காய் வேளை தனைக் கூறு ! ‘

--------------------------------பதார்த்த குண சிந்தாமணி.

கொள்ளுக்காய் வேளையினால் வாதாதிக்கமும் நாவறட்சியும், தந்த மூல நோயும், சொள்ளுவடியச் செய்கின்ற கபமும் போம் என்க.

இதன் வேரை 10 கிராம் மென்று சாற்றை விழுங்கி வெந்நீர் அருந்த எவ்வகை வயிற்று வலியும் குணமாகும். இதனை வேருடன் பிடுங்கி உலர்த்தி இடித்துப் பொடி செய்து வைத்துக் கொண்டு 10 கிராம் அளவு 100 மி.லி. நீரில் போட்டுக் காய்ச்சி வடித்து, குடிநீராகப் பயன்படுத்தலாம். எவ்வகை வயிற்று வலியும் குணமாகும்.

இதன் வேர் 100 கிராம், உப்பு 100 கிராம் சேர்த்து அரைத்து மண் சட்டிக்குள் காற்று புகாது வைத்து மூடி எரு அடுக்கி தீ மூட்டி எரிக்க உப்பு உருகி இருக்கும். இதை ஆற விட்டு உலர்த்திப் பொடி செய்து வைக்கவும். இதில் 2-4 கிராம் அளவு மோரில் குடிக்க வாயு, வயிற்றுப் பருமல், கிருமி, வயிற்றுப்புண், சீதக்கட்டு, வயிற்றவலி ஆகியன குணமாகும். இதன் விதைப் பொடியை காப்பியாகப் பயன் படுத்தலாம்.

இதன் உல்ர்த்திய இலைப்பொடி 100 கிராம், பொட்டுக் கடலைப் பொடி 100 கிராம், துவரம்பருப்பு வறுத்து 100 கிராம், மிளகு 30 கிராம், உப்பு 30 கிராம் சேர்த்து உணவுப் பொடி செய்யவும். 5-10 கிராம் உணவில் சேர்த்து எள் நெய் வுட்டுச் சாப்பிட வயிற்று வலி, வாய்வு, குடல் பூச்சி தொல்லை குணமாகும்.

 

                                புங்கமரம்


 







புங்கமரம்.
1) மூலிகையின் பெயர் -: புங்கமரம்.

2) தாவரப்பெயர் -: PONGAMIA PINNATA.

3) தாவரக்குடும்பம் -: PAPILIONACEAE.

4) வேறுபெயர்கள் -: கரஞ்சம், கரஞ்சகம், புங்கு (புன்கு)


5) பயன்தரும் பாகங்கள் -: இலை,பூ, விதைகள், வேர் மற்றும் எண்ணெய்.

6) வளரியல்பு -: புங்கமரம் இந்தியாவில் சாதாரணமாக எங்கும் காணக் கூடிய மரம். இது பெரிய மர வகுப்பைச் சேர்ந்தது. சுமார் 18 மீ. உயரம் வரை வளரும். சமவெளிகளிலும் 3000 அடி உயரமான இடங்கள் வரையிலும் வளரும். சிறகமைப்புக் கூட்டிலைகளையும், முட்டை வடிவச் சிற்றிலைகளையும், காய்கள் பச்சையாக தட்டையாக இருக்கும். நன்றாக முற்றியவுடன் லேசான மஞ்சள் நிறமுடைய காய்களின் முனை வளைந்து காணப்படும். இதன் பூக்கள் இளஞ்சிவப்பும் வெண்மையும் கலந்த நெற்பொறி போன்று கொத்துக் கொத்தாக இருக்கும். இது கடற்கரைகளிலும், ஆற்றங்கரைகளிலும் தானே வளர்கிறது. கிராமங்களில் வீட்டின் முன்பு வேம்பு அல்லது புங்கன்மரம் இருப்பதை பார்க்கலாம். இவைகள் வெளியிலிருந்து வரக்கூடிய கிருமிகளையும், தூசிகளையும் வடிகட்டி நமக்கு சுத்தமான காற்றை அனுப்புகின்றன. சாலையோரங்களில் நிழலுக்காக வளர்க்கப்படுகிறது. இனப்பெருக்கம் செய்ய நன்றாக முற்றிய காய்ந்த விதைகளின் கடினமான மேலோட்டை நீக்க ஊரவைத்தும் அதன் பருப்பை விதைத்தும், கட்டிங் மூலமும் நாற்றை உற்பத்தி செய்வார்கள்.


7) மருத்துவப்பயன்கள்-: புங்கன் அழுகலகற்றி (ANTI-SEPTIC) செய்கையுடன் கிருமிகளை அகற்றி உடலைத் தேற்றும் குணம் உடையது.

புங்கன் இலைச்சாற்றை வயிறு பொருமலுக்கும், கழிச்சலுக்கும் குறிப்பிட்ட அளவு உள்ளுக்குக் கொடுக்க குணம் தெரியும்.

புங்கன் இலையைக் குடிநீரிட்டு குழந்தைகளுக்கு ஏற்படும் மாந்த கணத்திற்குக் கொடுக்கலாம்.

புங்கன் இலையை ஆரைத்து ரத்த மூலத்திற்குப் பற்றிடலாம்.

புங்கன் இலையை நீரில் போட்டுக் கொதிக்க வைத்து அதை குளித்து வந்தாலும் அல்லது ஒற்றடமாக கொடுத்து வந்தாலும் கீல் வாத நோய்கள் கட்டுப்படும்.

புங்கன் பூவை தேவையான அளவுஎடுத்துக் கொண்டு சிறிது நெய் விட்டு வறுத்து இடித்துப் பொடிசெய்து 500 மி.கி. முதல் 1 கிராம் வீதம் உண்டு வந்தால் பெண்களுக்கு ஏற்படும் மேக நோய்கள் குணமாகும் புளிப்பு, வாயு பதார்த்தங்களை இச்சமயம் நீக்க வேண்டும்.

நீரிழிவு நோயினருக்கு அதிக தாகம் ஏற்படும். இதற்கு புங்கம் பூவை கசாயமிட்டு அருந்தி வரலாம்.

புங்கம் விதையிலிருந்து குழித்தைல முறைப்படி எடுக்கப்பட்ட எண்ணெயை குறிப்பிட்ட அளவு உள்ளுக்கும், மேலும் பூசி வர மேகம், பாண்டு முதலிய நோய்கள் குணமாகும். நரை,திரை,மூப்பு நீங்கி இளமையோடு நீண்ட காலம் வாழலாம்.

சிறு குழந்தைகளுக்கு உண்டாகும் கக்குவான் இருமலுக்கு புங்கன் விதைப் பொடியை தேனுடன் கலந்து 1 முதல் 5 அரிசி எடை அளவு கொடுக்க குணம் தரும். இதையே தேள் கடி நஞ்சுக்கும் உண்டால் அவ்விஷம் முறியும்.

புங்கிலிருந்து கிடைக்கும் பாலை புண்களுக்குப் போட்டு வந்தால் விரைவில் அவை ஆறும்.

புங்கன் வேர்ப் பட்டையைப் பொடி செய்து 500 மி.கி. வீதம் மூன்று வேளை உட்கொண்டு வந்தால் இருமல், ஈளை முதலியவை குணமாகும்.

புங்கன் வேரை காடியில் அரைத்து விதை வீக்கத்திற்கு பற்றிட்டு வர வீக்கம் குறையும்.

புங்கன் புளி,மா,வேம்பு, கறிவேம்பு ஆகியவற்றின் இலை வகைக்கு 10 கிராம், சுக்கு, மிளகு, சீரகம், இந்துப்பு வகைக்கு 3 கிராம் 1 லிட்டர் நீரில் போட்டு அரை லிட்டராகக் காய்ச்சி 2 முடக்கு வீதம் குடித்து வர மாந்தம், உள் சூடு, பித்த சுரம் ஆகியவை போகும். குழந்தைகளுக்கு 30 மி.லி. வீதம் தினம் 1 வேளைகொடுக்கலாம்.

பூவை நிழலில் உலர்த்தி நெய்யில் வறுத்துப் பொடி செய்து 1 சிட்டிகை காலை, மாலை 2 அல்லது 3 மண்டலம் தேனில் கொள்ள மது மேகம் மதுமேக ரணங்கள் தீரும். புகை, போகம், புளி, மீன் கருவாடு நீக்கவும்.

புங்கம் பூ, புளியம் பூ, பூண்டு, சீரகம், நன்னாரி வேர், வெப்பாலை அரிசி, வசம்பு, வகைக்கு 50 கிராம் இடித்து 1 லிட்டர் பசும்பாலில் அரைத்துக் கலக்கி 1 லிட்டர் நல்லெண்ணையில் கலந்து காய்ச்சி வடிகட்டி அரை முதல் 1 தேக்கரண்டி வரை காலை மட்டும் 1 மண்டலம் கொள்ள சகலக் கரப்பானும், தோல் நோயும் தீரும்.

புங்க வேர், சிற்றாமணுக்கு வேர், சங்கன் வேர் வகைக்கு 40 கிராம் பூண்டுச்சாறு அரை லிட்டர், விளக்கெண்ணெய் 2 லிட்டர் கடுகு ரோகினி 10 கிராம் வாதரசு(வாதமடக்கி) வேர்ப் பட்டை 20 கிராம் இடித்துப் போட்டு 15 நாள் வெயில் புடம் வைத்துக் காலை மட்டும் 1 தேக்கரண்டி கொடுத்து வர எவ்வித சரும ரோகமும், கரப்பான், சொறி, சிரங்கு, புண், புரைகளும் தீரும்.

தற்பொழுது புங்கன் எண்ணெயிலிருந்து பயோடீசல் தயார் செய்து வாகனம் மற்றும் ஆயில் இஞ்ஜின்களுக்கு உபயோகப்படுத்தி வருகிறார்கள். இந்த ஆயிலைப் பிறிக்கும் போது கிளசரின் மற்றும் மெத்தனால் கிடைக்கின்றது. இந்த ஆயில் சோப்பு செய்யப் பயன்படுத்தப் படுகிறது. அதன் புண்ணாக்கு பயிர்களுக்கு இயற்கை உரமாகப் பயன்படுத்துகிறார்கள். 12-08-2008 அன்று ஐ.எப்.ஜி.டி.பி மூலம் நானும் சத்தி பன்னாரியம்மன் சக்கரை ஆலை வழாகத்தில் அமைந்துள்ள புங்கன் விதையிலுருந்து பயோடீசல் எடுக்கும் தொழிற்சாலை புகைப்படம் இணைப்பு.

                                            நெல்லி



நெல்லி.1) மூலிகையின் பெயர் -: நெல்லி.
2) தாவரப்பெயர் -: EMBILICA OFFICINALLIS.
3) தாவரக் குடும்பம் -: EUPHORBIACEAE.
4) வகைகள் -: பி.எஸ்.ஆர் 1, காஞ்சன் என் ஏ 7கிருஷ்ணா சக்கையா, மற்றும் கருநெல்லி, அருநெல்லிஎன்ற இரு இனம் உண்டு.
5) வேறு பெயர்கள் -: அம்லா, ஆமலகம், கோரங்கம்,மிருதுபாலா.
6) பயன்தரும் பாகங்கள் -: இலை, பட்டை.வேர்,காய்,பழம்,காய்ந்த பழம், பூ, மற்றும் வேர்பட்டை,விதை முதலியன.
7) வளரியல்பு -: இந்தியாவில் எங்கும் காணக்கிடைக்கும். 800 மீட்டர் உயரம் வரை மலைகளில் நன்றாக விளையும். மற்ற நிலங்களில் சுமாராகவிளையும். தென்னிந்தியாவில் அதிகமாகக்கிடைக்கும். இலையுதிர் மர வகையைச் சேர்ந்தது. இலைகள் நீண்டிருக்கும், அகலம் குறைவானது. இளம் மஞ்சள் நிறக்காயகளையும் உடைய மரம். காய் இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு சுவைகள் ஒருங்கே பெற்றுள்ளது.இலையடி செதில் மிகச்சிறியதாக நீண்டு இருக்கும். பூக்கள் இலைக்கோணங்களில் கொத்தாக இருக்கும். ஆண் பூக்களும் பெண்பூக்களும் கலந்து இருக்கும். இலைகளில் மேல் பகுதியில் இருப்பவை ஆண் பூக்களாகவும் கீழ்பகுதியில் உள்ளவை பெண் பூக்களாகவும் இருக்கும்.பெண் பூக்களின் எண்ணிக்கை ஆண் பூக்களின்எண்ணிக்கையைவிடக் குறைவு. பூ விதழ்கள் ஆறு.தலைகீழ் ஈட்டி வடிவமானது. மகரந்தக் கேசங்கள் மூன்று இணைந்திருக்கும். இணைக்கும் பகுதி சேர்ந்து கூர்மையாக இருக்கும். செங்குத்தாக வெடிக்கும். கனி ட்ரூப் வகையைச் சேர்ந்தது.வெடியாக்கனி பல வீனப் பட்டதாக இருக்கும். உருண்டைவடிவமானது. சதைப்பற்றுள்ளது, சாறு இருக்கும். விதைகள் மூன்றுகோணங்கள் உடையது. விதையுறைக் கடினமாக இருக்கும். ஒட்டுச்செடிகள் 3 வருடங்களில் காய் விடும், மற்றவை 6 வருடங்கள் கூட ஆகும்.இது விதைமூலமும், ஒட்டுக் கட்டு மூலமும் இனப்பெருக்கும் செய்யப் படுகிறது.
8)மருத்துவப்பயன்கள் -: நெல்லியன் செய்கை, இலை, பட்டை, காய்த பழம் துவர்ப்பியாகச் செயல்படும்பூ குளிர்ச்சியுண்டாக்கி மலத்தை இளக்கும். பழமும் சிறு நீரைப் பெருக்கி, மலக்காரியாகவும், சீதள காரியாகவும் செயல்படும்.
நெல்லி காயகற்ப மூலிகையில் முக்கியமானது. இதன் பொருட்டே அன்று அதியமான் ஔவைக்கு கொடுத்து சரித்திரத்தில் சான்றாக நிற்கின்றார் இதன்சிறப்பை பின் வரும் சத்துக் களில் விவரம் தெளிவுறுத்துகிறது.
மாவுச் சத்து-14 கி. புரத சத்து-0.4 கி. கொழுப்புச்சத்து- 0.5 கி, பாஸ்பரஸ்- 21 மி.கி.கால்ஷியம்-15 மி.கி. இரும்புச்சத்து - 1 மி.கி. வைட்டமின் பி1 28 மி.கி. வைட்டமின் சி 720 மி.கி. நியாசின் - 0,4 மி.கி. கலோரிகள் - 60
வேறு எந்த காயகனியிலும் இதிலுள்ள வைட்டமின் 'சி ' அளவைப் போல் பெற இயலாது. ஒரு நெல்லிக் காயில் முப்பது ஆரஞ்சுப் பழங்களில் உள்ள வைட்டமின் சி சத்து உள்ளது.
நெல்லிக்காய் சாறு 15 மி.லி. தேன் 15 மி.லி.எலுமிச்சைச்சாறு 15 மி.லி.கலந்து காலை மட்டும் சாப்பிட்டு வர மதுமேகம் முற்றிலும் தீரும்.
இதன் இலைக்கொழுந்து ஒரு கைப்பிடி அளவிற்று எடுத்து, அரைத்து மோரில் கலந்து சீதக் கழிச்சல் உள்ளவர்களுக்கு கொடுக்கலாம்.
நெல்லிக்காய்ச் சாறு, பொன்னாங்கண்ணிச் சாறு, பால் வகைக்கு அரை லிட்டர், செவ்விளநீர் 2 லிட்டர், நல்லெண்ணெய்ஒன்றரை லிட்டர் கலந்து அதிமதுரம், ஏலம், கோஸ்டம், பூலாங்கழங்கு, கஸ்தூரி மஞ்சள், ஜாதிக்காய், ஜாதிபத்திரி, திருகடுகு, தான்றிக் காய், கடுக்காய், வகைக்கு 15 கிராம்தூள் செய்து கலந்து பதமுறக் காய்ச்சி வடிகட்டி (நெல்லித்தைலம்) வாரம் 2 முறை தலை முழுகி வர கண்காசம், காமாலை, மாலைக்கண், பொடுகு, முடி உதிர்தல் தீரும்.
2 கிலோ வற்றலை 4 லிட்டர் நீரில் போட்டு அரை லிட்டராகக் காய்ச்சி இறுத்து அரைக் கிலோ சர்கரை சேர்த்துப் பாகாக்கி அதில்திரிகடுகு வகைக்கு 30 கிராம், கிராம்பு, ஏலம், வெள்ளைக் குங்கிலியம்,கற்பூரம், வாயய் விளங்கம், அதிமதுரம், கூகைநீறு, கொத்த மல்லி, சீரகம், ஓமம் வகைக்கு 10 கிராம் பொடித்துப் போட்டுக் கிளறி அரைலிட்டர் நெய் சேர்த்துக் காலை, மாலை கழற்சிக்காய் அளவு சுவைத்து பால் அருந்த மேகசூடு, எலும்பைப் பற்றிய காய்ச்சல்என்புருக்கி, இருமல், ஈழை, காசம், கபம்,வாயு, பீ னிசம், பொருமல் அனைத்தும் தீரும்.
நெல்லி இலையை நீரில் இட்டுக் காய்ச்சி வாய் கொப்பளிக்க வாய்ப் புண் தீரும்.
வேர்ப் பட்டையைத் தேனில் உரைத்துத் தடவ நாக்குப் புண் குணமாகும்.
நெல்லி வற்றலும் பச்சைப்பயறும் வகைக்கு 20 கிராம் 1 லிட்டர் நீரிலிட்டு 200 மி.லி.யாகக்காய்ச்சி வடித்து 100 மி.லி. யாக காலை,மாலை சாப்பிட்டு வர தலைசுற்றல், கிறுகிறுப்புடன் கூடிய இரத்தக் கோதிப்பு தீரும்.
15 கிராம் நெல்லிக் காயை இடித்து அரை லிட்டர் நீரில் இட்டு 100 மி.லி.யாகக் காய்ச்சி 20 மி.லி.தேன் கலந்து 40 மி.லி.யாக 3 வேளை4 நாள் சாப்பிட மிகு பித்தம் தணியும்.
''சுத்தசுரம் தோலாப் பெரும் வாந்திபித்தசந்தி பாதமிசை பேருங்காண்-மெத்தமணம்நாறு மயர்க்கூந்துன்பின்னே காவும் இனிமை யெனக்கூறுமரு நெல்லியின் வேர்க்கு''
அரு நெல்லிச் சாற்றால் வெள்ளை படுதல் குணமாகும். வாந்தி நிற்கக் கொடுக்கலாம்.இதன் வடகத்தை துவையலாக வழங்க உடல் குளிர்ச்சி உண்டாகும். கண் ஒளிபெறும், காமாலை நீங்கும், பித்தம் போகும். மலமிழகும்.

                                     சீந்தில் கொடி

 


 


சீந்தில் கொடி.
1) மூலிகையின் பெயர் -: சீந்தில் கொடி.
2) தாவரப்பெயர் -: TINOSPORA CARDIFOLIA.
3) தாவரக்குடும்பம் -: MENISPERMACEAE.
4) வேறு பெயர்கள்- அமிர்த வல்லி, சோமவல்லி, சாகாமூலி சஞ்சீவி, ஆகாசவல்லி போன்றவை.(GUDUCHI).
5) பயன் தரும் பாகங்கள் -: கொடி, இலை மற்றும் வேர்.
6) வளரியல்பு - : சீந்தில் கொடி தமிழ் நாட்டில் எல்லா மாவட்டங்களிலும் வளர்கிறது. வரட்சியைத் தாங்கக்கூடியது.உயரமான மரங்களில் காடுகளில் அதிகமாகப் படரும் ஏறு கொடி. கடல் மட்டத்திலிருந்து ஆயிரம் அடியில் வளரக் கூடியது. இதய வடிவ இலைகளையும் தக்கையான சாறுள்ள தண்டுகளையும் காகிதம் போன்ற புறத் தோலையும் உடைய ஏறு கொடி. கொடியின் தரை தொடர்பு அகற்றப் பட்டால் கொடியின் மெல்லிய விழுதுகள் வளர்ந்து தரையில் ஊன்றி கொடிதழைக்கும். இது கோடையில் பூக்கும். பூ ஆண், பெண் என்ற இருவகையுண்டு. மஞ்சள் நிரத்தில் இருக்கும்.பெண் பூ தனியாக இருக்கும். அவரை விதை போன்று சிவப்பு நிற விதைகள் உண்டாகும். விழுதுகள் 30 அடி நீளங்கூட வளரும். விதையை விட தண்டு கட்டிங் மூலம் இனப் பெருக்கம் சிறப்பாக இருக்கும்.
7) மருத்துவப்பயன்கள் -: முதிர்ந்த கொடியை நறுக்கி இடித்து நல்ல நீரில் கரைத்து வடிகட்டி அசையாது சில மணி நேரம் வைத்திருந்து நீரை வடித்துப் பார்க்க அடியில் வெண்ணிறமான மாவு படிந்திருக்கும். மீண்டும் நீர் விட்டுக் கரைத்து தெளிய வைத்து இறுத்து எடுத்து உலர்த்தி வைக்கப் பளிச்சிடும் வெண்ணிறப் பொடியாயிருக்கும். இதுவே சீந்தில் சர்க்கரை எனப் படும். இது ஓர் கற்ப மருந்தாகக் கருதப்படுகிறது. உணவுக் கட்டுப் பாட்டுடன் நீண்ட நாள் சாப்பிட பல பிணிகளும் நீங்கும் என்பதாம்.
சீந்தில் உடற்பலம், சிறுநீர், காமம், தாய்ப்பால், பித்தம் ஆகியவற்றைப் பெருக்கும். முறை நோய் மஞ்சள் காமாலை, வாதம், கேன்சர், அல்சர், ஈரல் நோய் ஆகியவை தீர்க்கும், உடல் தேற்றும்.
சீந்தில் சர்க்கரை, கல்லீரல், மண்ணீரல் ஆகியவைகளை உரம் பெறச் செய்யும். பிற மருந்தின் சேர்கையுடன் நீரிழிவு, காமாலை, பாண்டு, சோகை, வீக்கம், இருமல், கபம், சளி, வாந்தி, காய்ச்சல்,மூர்ச்சை ஆகியவற்றைத் தீர்க்கலாம்.
சீந்தில் கொடி, நெற்பொறி வகைக்கு 50 கிராம் 1 லிட்டர் நீரிலிட்டு 150 மில்லியாக வற்றக் காய்ச்சிக் காலை, மதியம், மாலையாக 50 மி.லி. யாகக் குடித்து வர மேக வெப்பம், தாகம் தீரும்.
முதிர்ந்த கொடிகளை உலர்த்திப் பொடித்து காலை, மாலை அரைத் தேக்கரண்டி பாலுடன் சாப்பிட்டு வர உடல் உரம் பெறும். பனங்கற்கண்டுடன் சாப்பிட மதுமேகத்தால் தோன்றும் கை, கால் அசதி, மிகுதாகம், உடல் மெலிவு, விரல்களில் சுருக் சுருக்கென்று குத்துதல் ஆகியவை தீரும்.

No comments:

Post a Comment