Lord Siva

Lord Siva

Wednesday 1 October 2014

சிக்கல்–65 ,சிக்கன்


சிக்கன் பிரியாணி, சிக்கன்-65, சிக்கன் குழம்பு என வாரா வாரம் சிக்கன் சுவைக்கும் குடும்பமா நீங்கள்?! உங்களுக்குத்தான் இந்த அதிர்ச்சித் தகவல்கள்!
சமீபத்தில் ‘சென்டர் ஃபார் சயின்ஸ் அண்ட் என்விரான்மென்ட்’ வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘பிராய்லர் கோழிகள் வளர்ப்பில் டெட்ராசைக்ளின், ஃப்ளோரோகைனோலோன், அமினோக்ளைக்கோசைட் உள்ளிட்ட அதிகப்படியான ஆன்டிபயாடிக் அந்தக் கோழிகளுக்குச் செலுத்தப்படுகிறது. இத்தகைய கோழிகளை உணவாக எடுத்துக்கொள்பவர்களுக்கும் அதிகப்படியான ஆன்டிபயாடிக் உடம்பில் தங்குகிறது. இது, பல்வேறு சிகிச்சைகளுக்காக நாம் எடுத்துக்கொள்ளும் ஆன்டிபயாடிக் மருந்துகளை வேலை செய்யவிடாமல் தடுத்துவிடுகிறது’ எனும் அந்த அறிக்கை, ‘கோழிகளை சமைப்பதால் அதன் உடம்பில் உள்ள ஆன்டிபயாடிக் அழிந்துவிடாது’ என்றும் அதிர்ச்சி கிளப்புகிறது.
பிராய்லர் கோழிகளுக்கு பெயர் போன நாமக்கல்லில் பிராய்லர் கோழி வளர்க்கும் ஒருவரிடம் இதுகுறித்துக் கேட்டபோது, தன் பெயர், அடையாளங்களைத் தவிர்த்துப் பேசியவர், ”நாங்க பெரிய கோழி கம்பெனிகளுக்காக ஒப்பந்த முறையில கோழிகளை வளர்த்து தர்றோம். அவங்க குஞ்சு கோழியோட, மக்காச்சோளம், சோயா, கருவாடு, உப்பு, கடலைப் புண்ணாக்குனு கோழிகளுக்கான தீவனங்களோட இன்னும் சில மருந்துகள் கலந்து உலர்தீவனமா மூட்டையில கொண்டுவந்து இறக்குவாங்க. அதைப் பிரிச்சு கோழிகளுக்குக் கொடுப்போம். 35 – 42 நாள்ல வளர்த்து உரியவங்ககிட்ட ஒப்படைச்சுடுவோம். 42 நாள் கோழி, தன்னோட வாழ்நாள்ல 3 கிலோ 600 கிராம் தீவனத்தை சாப்பிட்டிருக்கும். பிராய்லர் கோழியை கறிக்கோழினு சொல்வோம். இது கறிக்கு மட்டும்தான் உபயோகப்படும். முட்டைக்காக வளர்க்கப்படுற கோழியை லேயர்னு சொல்வோம்” என்றவர்,
”தடுப்பூசி, குடிநீர்ல கலக்குற மருந்து இதையெல்லாம் கம்பெனிக்காரங்களே தந்துடுவாங்க. இதுபோக கோழிகளுக்கு கண்ல டிராப்ஸ் ஊத்துவோம். கோழிகளுக்கு தண்ணீர் எல்லாம் சொட்டு நீர் முறையிலதான் கொடுப்போம். அந்த தண்ணியில சில மருந்துகளையும் கலப்போம். ஆனா, இதுக்கெல்லாம் பேர் எதுவும் தெரியாதுங்க” என்றார் வெள்ளந்தியாக!
பூப்பெய்தும் வயது… குறையும் ஆபத்து!
இப்படிப் பல ஊசிகளும், ஊட்ட மருந்துகளும் கொடுத்து வளர்க்கப்படும் இந்தக் கோழியைச் சாப்பிடுவதால் நமக்கு என்னென்ன தீமைகள் ஏற்படும் என்பது பற்றி, திருமானூரைச் சேர்ந்த ஓய்வுபெற்ற கால்நடை மருத்துவர் காசி.பிச்சையிடம் பேசினோம்.
”ஒவ்வொரு உயிரினத்துக்குமான வளர்ச்சியை, இயற்கை தானாக அதன் உடம்பில் நிர்ணயித்திருக்கும். அப்படியிருக்க, ஒன்றரை மாதத்திலேயே ஒரு கோழி செயற்கையாக வளர்க்கப்படுகிறது என்றால், அதை சந்தேகப்பட வேண்டாமா? அந்தக் கோழிகளுக்கு செலுத்தப்படும் ஊசிகள், மருந்துகளை சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் ரகசியமாக வைத்திருப்பார்கள். ஆனாலும், க்ரோத் ஹார்மோன் எனப்படுகிற வளர்ச்சிக்கான மருந்துகளே இந்தக் கோழிகளுக்கு செலுத்தப்படுகின்றன என்பது உண்மை. குறுகிய காலத்தில் அபரிமிதமான வளர்ச்சியை இந்தக் கோழிகள் அடைய இதுவே காரணம். இத்தகைய கோழிகளில் சிக்கன்-65 எல்லாம் செய்து சாப்பிடுவது… நம் உடலுக்கு சிக்கல்களுக்கு மேல் சிக்கல்களையே கொண்டுவந்து சேர்க்கும்.
கிராமத்து நாட்டுக்கோழியை கவனித்தீர்களென்றால், அரை கிலோவில் இருந்து ஒரு கிலோ கணக்கில்தான் அதன் எடை இருக்கும். நம் வீட்டில், தெருவில் உள்ளதை உண்டு, ஓடியாடி, இயல்பாக வளரும் கோழி அது. அதனால் அதன் வளர்ச்சி ஆரோக்கியமாகவும் சீராகவும் இருக்கும் (இப்போது நாட்டுக்கோழியையும் கலப்பின மாற்றம் செய்து, பிராய்லர் போலவே வளர்ப்பவர்களும் பெருகியுள்ளனர் என்பது தனிக்கதை). அதேபோலதான் மனிதனின் வளர்ச்சியும் இயல்பானது, சீரானது. ஆனால், சமீப வருடங்களாக பெண் குழந்தைகள் பூப்பெய்தும் வயது 14-ல் இருந்து படிப்படியாகக் குறைந்து, இன்று 10, 9 என்று வந்து நிற்கிறது. மாதவிலக்குப் பிரச்னைகள், சீக்கிரமே ஏற்படும் மெனோபாஸ் நிலை என இவையெல்லாம் சங்கிலி விளைவுகளாகிவிடும்.
உயரம் ஊட்டத்தால் அல்ல!
ஆண் குழந்தைகளும் சட்டென ஏழடியில் வளர்ந்து நிற்கிறார்கள். இதற்கெல்லாம் காரணம் என்ன என்று கொஞ்சம் நின்று யோசித்தால், இப்படி வளர்ச்சி ஊசிகள் ஏற்றப்படுகிற இறைச்சி, பால் போன்ற உணவுப் பொருட்களை உட்கொள்வதால்தான் என்பது புரியும். ஆனால், நம் வீட்டுக் குழந்தைகளின் மிதமிஞ்சிய வளர்ச்சியை, உணவால் ஏற்பட்ட பிரச்னை என்று உணராமல், ஏதோ ஊட்டச்சத்தால் ஏற்பட்ட போஷாக்கு என்று நினைத்து சந்தோஷப்படுவது எவ்வளவு அறியாமை!” என்று சொல்லி பதறவைத்த டாக்டர், இந்த வகை உணவுகளால் பெண்களுக்கு ஏற்படும் பிரச்னைகளை இன்னும் விரிவாகப் பேசினார்.
”வளர்ச்சி ஹார்மோன்கள் செலுத்தப்பட்ட உணவுகள் விஷயத்தில், அது பெண்களுக்கு ஏற்படுத்தும் பிரச்னைகள் பல. ஒரு கல்லூரிக்கு சிறப்பு விருந்தினராகச் சென்றிருந்தபோது, ‘மாதவிலக்கில் பிரச்னை உள்ள பெண்கள் என்னிடம் தனியாக வந்து பேசுங்கள்’ என்று சொன்னேன். அத்தனை பெண்கள் என் அறைக்கு முன் வந்து நின்றதைப் பார்த்து அதிர்ந்துவிட்டேன்! இதற்கெல்லாம் காரணம், உணவுப் பழக்கம்தான். தவிர, அதிகப்படியான ஹார்மோன் ஊசிகள் ஏற்றப்பட்ட உணவுகளைச் சாப்பிடுவதால் தாய்மார்களின்  பால் சுரக்கும் தன்மை மாறிப்போகிறது. இதனால் பால் சுரப்பு நின்றுபோகும் தாய்மார்கள் தற்போது அதிகரித்திருக்கிறார்கள். இன்னொருபுறம், இந்த உணவு ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் சுரப்பிலும் தாக்கத்தை ஏற்படுத்துவதால், சீக்கிரமே பூப்படைதல், குறிப்பிட்ட வயதுக்கு முன்னரே மெனோபாஸ் வருவது போன்ற பிரச்னைகள் ஏற்படுகின்றன” என்று எச்சரித்தார் டாக்டர்.
சிக்கனை, கிச்சனிலிருந்து தள்ளுங்கள்!
அசைவப் பிரியர்கள் தங்கள் உணவு முறையில் செய்யவேண்டிய மாற்றங்களை அறிவுறுத்தினார், கோவையைச் சேர்ந்த ‘செக்ஸாலஜிஸ்ட்’ கோமதி சின்னசாமி. ”நாட்டுக்கோழி சாப்பிட கடினமாக, சமைக்க கொஞ்சம் நேரம் எடுக்கும். அதேசமயம், அதிக வலு தருவது நாட்டுக்கோழிதான். சென்னை போன்ற மாநகரங்களில் கிடைப்பது அரிதாக இருக்கிறது. கூடவே பிராய்லர் கோழியின் விலை குறைவு என்பதாலும், சாப்பிட மிருதுவாக இருப்பதுடன் சீக்கிரமே சமைக்க முடிகிறது என்பதாலும், பிராய்லர் கோழிகளைத்தான் பெரும்பாலானவர்கள் விரும்புகிறார்கள். ஆனால், பிராய்லர் கோழியில் உள்ள அதிகப்படியான கொழுப்பால், அதை சாப்பிடும் பலருக்கும் ஒபிசிட்டி ஏற்படுவது நிஜம். இன்றைய குழந்தைகள், அரை கிலோ சிக்கன்-65 உணவை தனியாளாகவே சாப்பிடுகிறார்கள். ஆனால், இந்தக் கொழுப்பைக் கரைப்பதற்குத் தேவையான உடல் இயக்கம் தராமல் டி.வி முன் உட்கார்ந்துகொள்கிறார்கள். பின் எப்படி அந்தக் கொழுப்பு கரையும்? இப்படி அதிகப்படியான கொழுப்பால்தான், பெண் குழந்தைகள் 10 வயதிலேயே பருவம் அடைகிறார்கள். இதுவே ஆண்களுக்கு, அவர்களின் ஆண் உறுப்பின் வளர்ச்சி தடைபடுகிறது. இந்தக் குழந்தைகள் வளரும்போது, இருபாலருக்கும் குழந்தையின்மை பிரச்னை ஏற்படவும் வாய்ப்புள்ளது” என்று அதிர்ச்சி கொடுத்தவர், சிக்கனை உடனே விடமுடியாது என்பவர்களுக்கான டிப்ஸ் (பார்க்க: பெட்டிச் செய்தி) கொடுத்ததோடு…
”மொத்தத்தில், சிக்கனை கொஞ்சம் தள்ளி வையுங்கள்… உங்கள் கிச்சனில் இருந்து!” என்று முத்தாய்ப்பாய் சொன்னார்.

சிக்கனை விடமுடியாது எனநினைப்பவர்களுக்கு…
 வாரம் ஒரு முறை அரை கிலோ சிக்கனை குழம்பாக வைத்து, ஆளுக்கு இரண்டு பீஸ் சாப்பிடலாம்.
 உங்கள் வசிப்பிடத்துக்கு அருகில் உள்ள ஏரி, குளம், வாய்க்கால், ஆறு முதலியவற்றிலிருந்து கிடைக்கும் மீன்களைச் சாப்பிடலாம்.
 வீட்டில் வளர்க்கப்படும் நாட்டுக்கோழிகளைச் சாப்பிடலாம். இவை, கொழுப்பை குறைவாக சேமித்து வைக்கும்.
 வீட்டில் வளர்க்கப்படும் ஆட்டுக்கறியில் ஹார்மோன் அபாயம் இல்லை. எனவே, மாதம் ஒரு முறை சாப்பிடலாம்.
 கடல் மீன்களைப் பொறுத்தவரை, ஒரே வகை மீனாக அல்லாமல் பல வகை மீன்களாக சாப்பிடலாம். மீனில் கொழுப்பு மிகக்குறைவு.
பின்குறிப்பு: குளத்து மீன் என்று சொல்லப்படுகிற நெய் மீனை (பார்க்க வழுவழுவென்று இருக்கும்) உயிரோடு நம் கண் முன்பாகவே வெட்டித் தருவார்கள். இதை அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டாம். இவை, கோழியின் கழிவுகளை சாப்பிட்டு வளரும், இந்த மீனைச் சாப்பிட்டால், சரும அலர்ஜிகள் வர வாய்ப்பிருக்கிறது.
ஆன்டிபயாடிக் ஆபத்து!
கோழிகளுக்கு அதிகப்படியாக செலுத்தப்படும் டெட்ராசைக்ளின், அமினோக்ளைக்கோசைட், ஃப்ளோரோகைனோலோன் போன்ற ஆன்டிபயாடிக் எல்லாம் கோழிகள் உடம்பில் ஏற்படும் கிருமிகளை அறவே அழித்துவிடுகின்றன. இத்தகைய மருந்துகளை உட்கொண்ட கோழிகளை சாப்பிட்டால், நம் உடம்பில் உள்ள செல்களை அழிப்பது, எதிர்பார்த்திராத சைட் எஃபெக்ட்ஸ் வர வைப்பது என நம் உடம்பின் இயல்பான மாற்றத்தை, வளர்ச்சியை அது சீர்குலைத்துவிடும்!

”அதிகப்படி ஏதுமில்லை!”
சிக்கன் தொடர்பான குற்றச்சாட்டுக்களுக்கு பிராய்லர் கோழி வளர்ப்பாளர்களின் பதில்..?
இதைப் பற்றி பேசும் ‘வெங்கடேஸ்வரா ஹேச்சரீஸ்’ நிறுவனத்தின் தமிழக துணைப்பொதுமேலாளார் டாக்டர் செல்வகுமார், ”பொதுவா எல்லா கோழி பண்ணையிலயும் இந்த மாதிரி ஆன்டிபயாடிக் சேர்க்கப்படுறதில்லை. கோழிகளை வளர்க்க சொல்லி விவசாயிகளுக்கு குஞ்சுகளா கொடுத்திருவோம். அந்தந்த ஊர்ல உள்ள வெட்னரி டாக்டர் உதவியோட கோழிகளுக்கு ஊசி போடுவாங்க. கோழிகள் வளர்ந்ததும் அதை அப்படியே வித்துட முடியாது. நாலு அல்லது அஞ்சு நாள் கழிச்சுதான் விற்பனை செய்ய முடியும். இப்படி செய்யுறப்ப கோழிக்கு எதாவது பிரச்னை இருந்தாகூட தெரிஞ்சுடும்.
அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள்ல பிராய்லர் கோழிகளுக்கு கொடுக்கப்படுற டிரக்ஸ் என்ன அளவுல எப்படி கொடுக்கணும்ங்கிற மாதிரியான சார்ட் இருக்கு. அதை அரசாங்கம் எப்பவும் கவனிச்சுட்டே இருக்கும். அங்க உபயோகிக்கிற மருந்துகள் அளவைத்தான் இங்கேயும் நாங்க உபயோகிக்கிறோம். இந்தியாவுக்குனு எந்தவித அளவீடும் கிடையாது. ஆனாலும் தேவையில்லாம ஆன்டிபயாடிக் மருந்துகள் செலுத்தப்படுறது கிடையாது. இந்திய பிராய்லர் கோழிகளை ஜப்பான், ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு நாடுகளுக்கு ஏற்றுமதி பண்றோம். அதிகப்படியான ஆன்டிபயாடிக் கொடுக்கிறதா இருந்தா, அவங்கள்லாம் தங்கள் நாட்டுக்குள்ள எப்படி அனுமதிப்பாங்க?” என்று கேட்டார்.
நன்றி -அவள் விகடன்

No comments:

Post a Comment