Lord Siva

Lord Siva

Sunday 12 August 2012

ஆஸ்த்மா தூண்டிகள் எவை?மாற்று சிகிச்சை முறைகள் பயனளிக்குமா?



Posted On Aug 12,2012,By Muthukumar

ஆஸ்த்மா பற்றி......

ஆஸ்மா என்பது என்னெவென்று தெரியாதவர்கள் இருக்க முடியாது. இழுப்பு, தொய்வு, முட்டிழுப்பு எனப் பலவாறாக அழைப்பார்கள். இது சுவாசத் தொகுதியைத் தாக்கும் ஒரு நோயாகும்.


  • எந்த வயதினரையும் தாக்கக் கூடியது என்பதுடன் 
  • நீண்ட காலத்திற்கு தொடரக் கூடிய தொல்லையாகும். 
  • தொடர்ச்சியாக இல்லாவிடினும் விட்டு விட்டு வரக் கூடிய நோய் இது. 
  • அடியோடு குணமாகியது போலிருக்கும். எங்கிருந்து வந்நது என அதிசயிக்கும் வண்ணம் திடீரென மீண்டும் பிரசன்னமாகும்.

 அறிகுறிகள் 

  • இருமல்
  • இழுப்பு
  • மூச்சு எடுப்பதில் சிரமம்
  • நெஞ்சு இறுக்கமாக இருப்பதாக உணர்தல்
போன்றவை இதன் அறிகுறிகளாகும்.


அடியோடு அறுத்தல்

நோய் அறிகுறிகள் இருப்பவருக்கு, 'உங்களுக்கு ஆஸ்த்மா இருக்கு' என மருத்துவர் சொன்னவுடன் நோயாளியின் உடனடிப் பிரதிபலிப்பு 'இதை அடியோடு அறுக்க என்ன செய்யலாம்?' என்பதுதான்.

ஆனால் அடியோடு அறுக்க முடியாது என்பது கசப்பாக செய்தியான போதும் தவிர்க்க முடியாத உண்மையாகும்.
  • இப்பொழுது நல்ல மருத்துவம் இருக்கிறது. 
  • அவற்றைக் கொண்டு நோயை நன்கு கட்டுப்படுத்தலாம். 
  • ஏனையவவர்கள் போல மகிழ்ச்சியோடு சுகமாக வாழலாம். 
  • ஆனால் மீண்டும் வராது என்பதை உறுதியாகச் சொல்ல முடியாது.
ஒரு சிலருக்கு முற்றாக மறைந்துவிடுவதுண்டு. ஆனால் அது சூழல்கள் மாறுவது, புகைத்தலை நிறுத்துவது போன்ற நோயைத் தூண்டும் காரணிகள் அற்றுப் போவதால்தான் இருக்கும். அன்றி மருந்துவத்தின் செயற்பாட்டால் அல்ல.

'ஆங்கில மருத்துவம் செய்து வேலையில்லை' என்று எண்ணி சித்த, ஆயர்வேத, யுனானி, அக்யூபங்கசர் என நாடுபவர்கள் இருக்கிறார்கள்.
  • அவை எவற்றினாலும் நோயை முற்றாக அறுக்க முடியாது. 
  • அது மட்டுமல்ல, கடுமையான பத்தியங்கள் இருந்தாலும் அவற்றால் கிட்டும் பயன் மிகக் குறைவே. 
  • அவற்றால் பெருமளவு பலனில்லை என்பதை அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்துகளுக்கான அதிகார சபையும் (FDA) கூறுதிப்படுத்துகிறது.

மாற்று மருத்துவ முறைகளும் ஆஸ்த்மாவும்

அக்யூபங்கசர்


அக்யூபங்கசர் ஆஸ்தாவுக்கு ஏற்ற சிகிச்சை என்று சொல்வதற்கு ஆதாரங்கள் எதுவும் கிடையாது என்கிறது அந்த ஸ்தாபனம்.
  • அக்யூபங்கசரால் ஒரு சிலரில் மருந்துகளின் அளவை குறைக்க முடிந்திருக்கிறது, 
  • அறிகுறிகள் குறைந்திருந்தன, சுகமாக இருப்பதாக உணர்ந்தனர் என ஓரிரு ஆய்வுகள் கூறிய போதும், 
  • பெரும்பாலான ஆய்வுகள் அக்யூபங்கசரால் எந்தவித பிரயோசனமும் இல்லை என்கின்றன.

சுவாசப் பயிற்சிகள்

பலவிதமான சுவாசப் பயிற்சிகள் உள்ளன. எமது பாரம்பரிய யோகசனம் முதலாக சீன, மேலைநாட்டு முறைகள் (Papworth Method and Buteyko Breathing Technique) எனப் பல.
  • இவை நோயின் தீவிரத்தை குறைப்பதாகத் தெரிகின்றபோதும், 
  • நல்ல பலன் அளிக்கும் என்பதற்கு ஆதாரம் இல்லை. 

ஆயினும் இது உடலுக்கு எந்தப் பாதகாமான விளைவுகளையும் ஏற்படுத்தமாட்டாது என்பதால் வழமையான மருந்துகளுடன் இணைத்துச் செய்வதில் எந்தத் தவறும் இல்லை.

மூலிகைகள் சார்ந்த மருந்துகள்


சுதேச மருத்துவ முறைகளான சித்த, ஆயள்வேத, யுனானி, சீன மருத்து முறைகளில் பல மூலிகைகள் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றில் உள்ள சில வேதியல் பொருட்கள் ஆஸ்மாவின் அறிகுறிகளைக் குறைக்கக் கூடும்.

உதாரணமாக Ma huang என்ற சீன மூலிகையில் ephedrine என்ற வேதியல் பொருள் இருக்கிறது. இது ஒரு காலத்தில் ஆஸ்த்மாவிற்கு சிகிச்சையாக மாத்திரைகளாக உபயோகிக்கப்பட்டபோதும் அதன் இருதயம் சார்ந்த பக்கவிளைவுகள் காரணமாக பல நாடுகளில் தடைசெய்யப்பட்டுள்ளது.

தேயிலையில் தியோபிலின் (theophylline) எனும் வேதியில் பொருள் சிறிதளவு உண்டு. இது இப்பொழுதும் பயன்பாட்டில் உள்ள ஒரு மருந்து ஆகும். மருந்து இதில் இருக்கிறது என எண்ணி தேநீரை அண்டாக் கணக்கில் குடித்தால் என்னவாகும்? சுகம் கிடைக்காது! வேறு நோய்கள்தான் தேடி வரும்.

இதேபோல வேறு பல மூலிகைகளில் ஸ்டிரொயிட் (Steroid) வகை மருந்துகள் உள்ளன. எதில் எந்த மருந்து எந்தளவு இருக்கிறது என்பது பற்றி தெளிவான தகவல்கள் இல்லை. எனவே மூலிகை மருந்துகளைத் தனியாகவோ அல்லது வழமையான மருந்துகளுடன் சேர்த்தோ பயன்படுத்தும்போது ஆபத்தான பக்கவிளைவுகள் ஏற்படலாம்.

மாற்று சிகிச்சைகளின் பயன்பாடுகள் பற்றிய விஞ்ஞான பூர்வ விளக்கங்களுக்கு     Asthma and Complementary Health Practices

இவற்றைத் தவிர boswellia, tylophora indica, magnesium supplements, omega-3 fatty acids, Radix glycyrrhizae, vitamin C, and butterbur போன்ற மூலிகைகள், தாதுப்பொருட்கள், விற்றமின்கள் பலன் கொடுக்கும் எனப் பலர் நம்புகிறபோதும் அவற்றால் எந்தப் பயனுமில்லை என ஆய்வுகள் கூறுகின்றன.

எனவே மற்றவர்கள் சொல்கிறார்கள் என்பதற்காக உங்களுக்காக மருத்துவர் கொடுக்கும் மருந்துகளைக் கைவிட்டு, மூலிகைகளையும் ஏனைய முறைகளையும் உபயோகிப்பது ஆபத்தில் முடியலாம்.

உங்களுக்கான மருத்துவம்

இன்றைய நிலையில் ஆஸ்த்மாவுக்கான சிறந்த மருத்துவம் உள்ளுறுஞ்சும் (Inhaler) மருந்துகள்தான். இவற்றில் பல வகைகள் உள்ளன. எது ஒருவருக்குப் பொருத்தமானது என்பதை மருத்துவர்தான் சிபார்சு செய்ய முடியும்.


ஒழுங்காக மருந்துகளை உபயோகித்தபோதும் சில வேளைகளில் ஆஸ்த்மாவின் தீவிரம் அதிகரிக்கலாம். இதைத் தடுக்க தூண்டும் காரணிகளை அறிந்து அவற்றைத் தவிர்பபது அவசியம். அதன் மூலமே நலமாக வாழலாம்.

இன்ஹேலர்கள் பற்றி மேலும் அறிய இன்ஹேலர்கள்

ஆஸ்த்மா தூண்டிகள் எவை?

அமெரிக்க குடும்ப மருத்துவ சங்கம் கீழ்கண்டவற்றைக் குறிப்பிடுகிறது. ஆனால் ஒருவருக்கு தூண்டியாக இருப்பது மற்றவருக்கும் தூண்டியாக அமையும் எனச் சொல்ல முடியாது. ஒவ்வொருவரும் தமது அனுபவத்தின் மூலமே கண்டறிய வேண்டும்.

  • ஓவ்வாமையை ஏற்படுத்தும் பூ மகரந்தங்கள், புற்கள், பூஞ்சணங்கள்
  • தடிமன் போன்ற வைரஸ் நோய்கள் தொற்றாமல் தம்மைப் பாதுகாத்தல்
  • சூழலில் உள்ள வளியை மாசுபடுத்தும் சிகரட் புகை, இரசாயனப் புகைகள், வாசனைத் திரவியங்கள் போன்றவற்றை தவிர்த்தல்.
  • விறகு எரித்தல். விறகு எரிக்கும்போது பல நச்சு வாயுக்களும், நுண்துகள்களும் வெளியேறுகின்றன. இவை சிலருக்கு தூண்டியாக அமையலாம்.
  • கரப்பன் பூச்சியும் அதன் எச்சங்களும்.
  • சைனஸ் தொற்று நோய்களுக்கு ஆளாகாதிருத்தல்.
  • நெஞ்செரிப்பு, வயிற்றெரிவு சாப்பாடு புளித்து மேலெழுதல் போன்ற அறிகுறிகள் குடலில் உள்ள அமிலம் மேலெழுவதைக் குறிக்கலாம். இதுவும் ஆஸ்த்மாவைத் தூண்டுவதுண்டு. இதைத் தடுக்க மருத்துவ ஆலோசனை பெறுங்கள்.
  • கடும் குளிர் காற்றுகளும் நோயைத் தூண்டிவிடுவதுண்டு
  • கடுமையான உடற் பயிற்சிகள் தூண்டக் கூடும். ஆயினும் அதன் அர்த்தம் உடற்பயிற்சிகள் செய்யக் கூடாது என்பதல்ல. மருத்துவ ஆலோசனையுடன் இன்ஹேலர்களை உபயோகித்துக் கொண்டு செய்ய வேண்டும்.
  • கடுமையான மனஅழுத்தங்களும் உணர்ச்சிவயப்படலும் தீவிரமாக்கும்.
Important Asthma Triggers கிளிக் பண்ணுங்கள் தூண்டிகள் பற்றி அறிய

இவை ஒருவருக்குத் தூண்டியாக அமைந்து நோயை தீவிரப்படுத்தலாம் என்பதால் அவற்றில் இருந்து விலகியிருங்கள். ஆனால் மற்றவருக்கு தூண்டியாக இருப்பது உங்களுக்கும் இருக்க வேண்டும் என்றல்ல.

ஆஸ்த்மா, அலர்ஜி, ஒவ்வாமை, எக்ஸிமா பற்றி மேலும் அறிய  எக்ஸிமா, ஆஸ்த்மா, அலர்ஜி நோய்கள் ஏன் அதிகரிக்கின்றன

எனவே மற்றவர்கள் சொல்லதைக் கேட்டு தேவையற்ற பலவற்றையும் தவிர்த்து உங்கள் வாழ்வைச் சப்பென்று ஆக்கிவிடாதீர்கள். உங்களுக்கு ஒவ்வாதனவற்றை நீங்களே அனுபவத்தில் தேடிக் கண்டுபிடியுங்கள்.

உங்களால் உங்களால் மட்டுமே உங்கள் ஆஸ்த்மாவைக் கட்டுப்பாடினுள் வைத்திருக்க முடியும் என்பதை மறவாதீர்கள்.

No comments:

Post a Comment